ஆய்வாளர்களையே அலறவிட்ட அவலாஞ்சி! அதிர்ச்சியும்… ஆச்சரியமும்!

ஊட்டி

கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்த கனமழையால், ‘ரெக்கார்டு பிரேக்’ செய்திக்கும் நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி வனப்பகுதி, வானிலை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அதேவேளையில், உண்மையாலுமே இவ்வளவு மழை கொட்டியிருக்குமா அல்லது, மழையை அளவிடும், ‘மழை மானி’யில் ஏதாவது கோளாறு ஏற்பட்டுவிட்டதா என, சோதனையிடும் அளவிற்கு ஒரு வித அதிர்ச்சியையும் தந்திருக்கிறது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேயுள்ள, ‘அவலாஞ்சி’ பகுதி, சர்வதேச அளவில், வானிலை ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது. காரணம், இந்தியாவின் இரண்டாவது சிரபுஞ்சி என்றழைக்கப்படும், நீலகிரிலுள்ள பந்தலுார், தேவாலா பகுதியில்கூட, கடந்த, 5 – 10ம் தேதி வரை, 970 மி.மீ., மழைதான் பதிவாகியுள்ளது. ஆனால் அவலாஞ்சியில், இதே நாட்களில், 2,978 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அதிக மழைக்கான காரணத்தை கண்டறிய, இப்பகுதியில், மத்திய வானிலை மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

7,200 ஏக்கர் பரப்பு

நீலகிரி மாவட்டம், குந்தா தாலுாகாவுக்கு உட்பட்ட அவலாஞ்சி, ஊட்டியில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ளன அவலாஞ்சி, லக்கடி, காட்டுகுப்பை, அப்பர்பவானி உள்பட பல நீர்பிடிப்பு பகுதிகள். இவற்றில், அவலாஞ்சி, லக்கடி வனப்பகுதிகள் மட்டும், 7,200 ஏக்கர் பரப்புடையவை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இங்கு மழைக்காடு, புல்வெளிகள் அதிகம்; 

160 அடி உயரமுள்ள அவலாஞ்சி அணையில், 40 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.
அவலாஞ்சியை சுற்றியுள்ள எமரால்டு வேலி, இந்திரா நகர், எமரால்டு, ‘லாரன்ஸ்’ குக்கிராமங்களில், 300 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன; விவசாயமே பிரதான தொழில். இங்குள்ள மக்கள் தவிர, 30 மின் வாரிய குடியிருப்புகளில் ஊழியர்கள் வசிக்கின்றனர். இயற்கையின் மடியில் பச்சைப்பசேல் புல்வெளிகளுடன் மனதைக்கொள்ளும் அவலாஞ்சியை பார்வையிட, சுற்றுலா பயணிகளை வனத்துறையினரே அழைத்துச் செல்கின்றனர். மழைகாரணமாக, தற்போது சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்ச மழை

ஊட்டி அவலாஞ்சி பகுதியில், கடந்த, 5ம் தேதி முதல், 10ம் தேதி வரை, 2,978 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. நடப்பாண்டில், தேசிய அளவில், ஒரே பகுதியில் அதிகபட்ச மழை பதிவான இடம் இதுவே. இப்பகுதியைப் பார்வையிட்டபின், மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி மணிவண்ணன், ‘தினமலர்’ இதழுக்கு அளித்த பேட்டி:

வடகிழக்கு மாநிலங்களில் இமாச்சல பிரதேசம், சிம்லா, அமர்நாத் உள்ளிட்ட சில பகுதிகளில், ஒரே நேரத்தில் அதிகப்படியான மழை பெய்வது வழக்கம். இதற்கு காரணம், அங்குள்ள சோலை வனங்கள், நில அமைப்பு, காலநிலை. நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் கடந்த, 6 நாட்களில், 2978 மி.மீ., மழை பதிவாகியுள்ள போதிலும் கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்ற நிலச்சரிவு அபாயங்கள் நிகழவில்லை. 

இரு மாதங்களாக நீலகிரியின் பல பகுதிகள் வறட்சியாக காணப்பட்டன. அதன்பின், மழையால் பூமி ஈரம் கண்டது; ஆனால், பலவீனமாகவில்லை. பருவ மழையை போல, 20 நாட்கள், தொடர்ந்து விடாமல் ‘பிசுபிசு’வென பொழிந்து, அதன்பின் பெருமழை கொட்டியிருந்தால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டிருக்கும்.தற்போதும்கூட இதே மழை ஒரு வாரம் தொடருமானால், மரங்களுள்ள பகுதிகளில் பிடிமானம் பலவீனம் அடைந்து, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. 

கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின்போது பலத்த காற்று வீசவில்லை. வீசியிருந்தால் மரங்கள் விழுந்திருக்கும்.புவி வெப்பம் குறித்து எங்கள் மையத்தில், இரு மாதங்களுக்கு முன் விவாதிக்கப்பட்டது. சில ஆண்டுகளாக ஊட்டியில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கூட, வழக்கத்தை காட்டிலும் 1.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப நிலை அதிகமாகியுள்ளது. அதேபோன்று கடும் குளிர் நிலவும், ஜூலை மாதத்திலும் வழக்கத்தைவிட, 1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமாகி உள்ளது. 

இதனால் ஏற்படும் நீரியல் சுழற்சியால், ஒரே நேரத்தில் அதிக மழை பெய்யவோ, அல்லது, வறட்சி ஏற்படவோ வாய்ப்புள்ளது. இதற்கு காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு காரணம். அவலாஞ்சியில் கூடுதல் மழை பொழிவு பதிவானது குறித்து, வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆய்வு நடக்கவுள்ளது.இவ்வாறு, மணிவண்ணன் தெரிவித்தார்.

நன்றி : dinamalar.com

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.