கடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்!’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்

அமேசான் காட்டில் எரிந்துவரும் தீயை அணைக்கும் பணிகளில் 74,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

`அமேசான் மழைக்காடுகளைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற குரல் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்துவருகிறது. பெயரில்கூட அமேசான் காடுகள் எனக் கூறாமல் `அமேசான் மழைக்காடுகள்’ என்றே கூறப்படுகிறது. அங்கு தொடர்ச்சியாக பெய்யும் மழையும் அங்கு நிலவும் ஈரப்பதம்தான் இந்த பெயருக்கான காரணம். கோடைக்காலங்களில் கூட குளிர்ச்சியுடன் கம்பீரமாக இருக்கும் காடு, கடந்த மூன்று வாரங்களாகத் தீயில் சிக்கிக் கருகி வருகிறது. புவியின் நுரையீரல் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதற்கு மனிதர்கள்தான் பெரிய காரணம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமேசானில் எரியும் தீ, மரங்கள், செடி கொடிகள், பறவைகள், விலங்கினங்கள் போன்றவற்றுடன் சேர்த்து அங்கு வாழும் பழங்குடிகளையும் சேர்த்து விழுங்கிவருகிறது. பிரேசிலின் பாதுகாக்கப்பட்ட மழைக்காடுகளை உள்ளடக்கிய அமேசான் மாகாணத்தில் சுமார் 420 பழங்குடிகள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் முரா பழங்குடியினர். அந்தப் பகுதியில் 18,000 முரா மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு எப்போதும் வில்லுடன் இருப்பதுதான் இவர்களின் அடையாளம்.

அமேசான் மழைகாடுகளில் ஏற்பட்ட பெரும் தீ, அடர்ந்த வனப்பகுதிக்கு உள்ளே வாழும் பழங்குடிகளின் இருப்பிடத்தையும் விட்டுவைக்கவில்லை. இதனால் அங்கு வாழும் பழங்குடிகள் தங்கள் நிலத்தை இழந்து தவித்துவருகின்றனர். யாரையும் நம்பி இருக்காமல் காட்டுத்தீக்கு எதிராகவும், இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராகவும் தாங்களே களத்தில் இறங்கிப் போராடத் தயாராகிவிட்டனர் முரா மக்கள்.

இங்குள்ள அனைத்து மரங்கள், செடி கொடிகளுக்கும் உயிர் உள்ளது. அவை அனைத்தும் வாழ வேண்டும், அதுவும் அதன் சொந்த இடத்திலேயே வாழ வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, இது மிகப்பெரும் அழிவு. எங்களுக்கு எதிராகச் செய்யப்படும் பெரும் கொடுமை. எங்கள் இறுதி துளி ரத்தத்தை கொடுத்தாவது போராடி, இந்தக் காட்டை காப்பாற்றுவோம்” எனப் பழங்குடிகளின் தலைவர் ரைமுண்டோ முரா ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

வகானா முரா என்ற மற்றொரு தலைவர் பேசும்போது, “அமேசான் காடுகளின் அழிவு அணு தினமும் அதிகரித்து வருவதை நாங்கள் கண்கூட பார்த்துவருகிறோம். ஒவ்வொரு நிமிடமும் இந்தக் காடு தன் இறுதி நாளை நோக்கி சென்றுகொண்டிருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. காலநிலை மாற்றத்தை எங்களால் உணர முடிகிறது. இந்த உலகத்துக்குக் காடுகள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்குக் காடுகள் தேவை, எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு காடுகள் தேவை” எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தற்போது வரை அமேசான் காடுகளில் 9,500 புதிய காட்டுத்தீ சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அங்கு எரியும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாத பிரேசில் அரசு சர்வதேச நாடுகளின் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது. அமேசானில், மூன்று கால்பந்தாட்ட ஆடுகளம் அளவுள்ள நிலப்பரப்பு ஒவ்வொரு நொடியும் அழிந்து வருவதாக நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.