நன்மை தரும் பூச்சிகள் மற்றும் இனக்கவர்ச்சி பொறி (Goodness Causing Bugs)

பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள், குளவிகள், தட்டான்கள், பொறி வண்டுகள், தரை வண்டுகள் போன்ற பூச்சிகள் நன்மைகளை அளிக்கின்றன. இந்த நன்மை செய்யும் பூச்சிகள் பயிரை தாக்கும் தீமைப் செய்யும் பூச்சிகளை உண்டு, வாழ்ந்து அவை அதிகம் பெருகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.

பாதுகாக்கும் முறை

நெற்பயிரில் தூர்க்கட்டும் பருவத்திலும், பருத்தியில் 50 முதல் 55 நாட்கள் வரையிலும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும். வயல் வரப்புகளில் உள்ள கிணற்றடிப் பூண்டு அல்லது வெட்டுக்காயத் தழை போன்ற செடிகள் நன்மை செய்யும் குளவிகளை கவரும் தன்மை கொண்டவை. எனவே இவற்றை அழிக்காமல் விட்டு வைக்க வேண்டும். மேலும் வயலில் பறவை இருக்கைகள், குளவிகுடில்கள் அமைக்க வேண்டும்.

நெற்பயிருக்கு வரப்புகளில் பயறு வகை செடிகளான உளுந்து,  தட்டைப் பயிறு அல்லது சூரியக்காந்தி முதலியவற்றை விதைத்து நன்மை தரும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கலாம். பருத்தி, காய்கறி வயல்களை சுற்றிலும் தேன், மகரந்தம் அதிகம் உள்ள பூக்கள் கொண்ட மக்காச்சோளம், செண்டுப் பூ,  சூரியக்காந்தி, சோம்பு, எள் போன்றவற்றை விதைத்து நன்மைப் செய்யும் பூச்சிகளை வரவழைத்து,  தீமைப் செய்யும் பூச்சிகளை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

கரும்பு சாகுபடிக்கு பின் அதன் கழிவுகளை வயலில் எரிப்பதை தவிர்த்து மண் வாழ் நன்மை செய்யும் உயிர் இனங்களை பாதுகாக்க வேண்டும்.  இயற்கை எரு, கம்போஸ்ட், மண்புழு உரம்,  உயிர் உரங்கள்,  பசுந்தாள் உரங்கள் முதலியவற்றை பயன்படுத்தி மண்ணில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பாதுகாக்க வேண்டும்.

மேலும் படிக்க : பஞ்சகவ்யம் (Panjagavyam)

பூச்சி மற்றும் நோய் நிர்வாகத்திற்கு தாவரம் சார்ந்த பொருட்கள் அல்லது நுண்ணுயிர் பூச்சி கொல்லிகள் பயன்படுத்தி நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க வேண்டும்.  இந்த முறைகளினால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.  தீமைப் செய்யும் பூச்சிகள் பெருகி பயிரை பாதிப்பு அடையச்செய்வது தடுக்கப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்படுகிறது.

இனக்கவர்ச்சி பொறியின் பயன்கள்

முருங்கை, பாகல், புடலை, பிர்க்கை மற்றும் கொய்யா, மா, கோவைக்காய் ஆகிய பயிர்களை கண்டிப்பாக பழ ஈ தாக்க ஆரம்பிக்கும். பயிர்களில் பழ ஈ சிறிய பிஞ்சுகளாக இருக்கும் பொழுதே கொத்திவிடும், பிறகு சாறுவடிய ஆரம்பிக்கும்.

அதில் கசப்பு தன்மை ஏற்பட்டு விற்பனைக்கு உகந்ததாக இருக்காது. காய்கறி பயிர்களிலும்; காய்ப்புழுவின் தாக்குதல் இருக்கும். இவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 5 இடங்களில் வைத்து ஆண் பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.

இனக்கவர்ச்சி பொறியில் பெண் பூச்சிகளினுடைய வாசனை இருப்பதுபோல மாத்திரை உள்ளது. மாத்திரையை இனக்கவர்ச்சி பொறியில் வைத்துவிட்டால் ஆண்பூச்சிகள் எல்லாம் பெண்பூச்சிதான் இருக்கிறது என்று நினைத்து இனக்கவர்ச்சி பொறியில் விழுந்து விடும். திரும்ப வெளிவராது மாத்திரையின் வாசனையில் மயங்கி இறந்து விடும்.

வயலில் ஆண் பூச்சிகளை கவர்ந்து அழித்து விட்டால் பெண்பூச்சிகள் முட்டை இடுவது தவிர்க்கப்படும். பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். எனவே இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தி குறைந்த செலவிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தி விடலாம். அனைத்து விவசாயிகளும் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தி காய்ப்புழு மற்றும் பழ ஈ தாக்குதலை கட்டுப்படுத்த முன்வருவோம்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.