குதிரை மசால்(Medicago sativa)

  • தீவனப்பயிர்களின் இராணி என அழைக்கப்படும் குதிரை மசால் புரதச்சத்திற்காகவும், அதிக சுவைக்காகவும் கால்நடைகளால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது.
  • பயறு வகையைச் சார்ந்த தீவனப்பயிர்களில் மிகவும் முக்கியமான ஒன்று குதிரைமசால்.
  • மத்திய, மேற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்ட குதிரைமசால் ஒரு பல்லாண்டு காலப்பயிராகும். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக பயிரிடப்பட்டு வருகின்றது.

இயற்கை புரத வங்கி

  • பயறுவகைத் தீவனப்பயிர்களில் அதிக அளவில் புரதச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்களான பாஸ்பரஸ், கால்சியம் ஆகியன காணப்படுவதால் கால்நடைத் தீவனத்தில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • தானிய, புல்வகைத் தீவனப்பயிர்களை விட பயறுவகைத் தீவனப்பயிர்களின் விளைச்சல் குறைவாக இருப்பினும், கால்நடைகளுக்குத் தேவையான சத்துக்கள் குறிப்பாக புரதச்சத்து அதிகமாக இருப்பதால் பயறுவகைத் தீவனப் பயிர்கள், இயற்கை புரத வங்கி என அழைக்கப்படுகின்றன.
  • மேலும் பயறுவகைத் தீவனப்பயிர்கள் வேர்முடிச்சுகளின் மூலம் தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துகின்றன. இதனால், உலக அளவில் உள்ள மொத்த கால்நடைகளின் எண்ணிக்கையில் 16 சதம் கால்நடைகள் நம் இந்தியாவில் உள்ளன.
  • ஆனால் நமது கால்நடைகளின் பால் உற்பத்தித் திறனோ அதைக் காட்டிலும் மிகக்குறைவு. நல்ல சத்துள்ள, தரமான பசுந்தீவனங்கள் போதிய அளவிலும், சரிவிகிதத்திலும் கால்நடைகளுக்கு கிடைக்காததே இதற்கு காரணம்.

கறவை மாடுகளின் பால் உற்பத்தி அதிகரிக்க

 Medicago sativa
  • புல்வகைத் தீவனப்பயிர்களுடன், பயறு வகைத் தீவனப்பயிர்களை முறையே மூன்றுக்கு ஒரு பகுதி என கலந்து கொடுப்பதன் மூலம் தீவனத்தின் சுவை அதிகரிப்பதோடு, கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறனும் அதிகரிக்கின்றது.
  • பயறுவகைத் தீவனப்பயிர்களைத் தனிப்பயிராகவோ அல்லது புல், தானிய வகை பயிர்களோடு பயிரிட்டு அதிக விளைச்சலையும் சத்துள்ள தீவனத்தையும் பெற முடியும்.
  • தமிழ்நாட்டில் மொத்த விளை நிலத்தில் 1,72.726 எக்டரில் மட்டும் தான் தீவனப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் நிரந்தர மேய்ச்சல் புல் நிலம் 1,09,924 எக்டர் மட்டுமே உள்ளதால், பசுந்தீவன தேவையில் 42.6 சதம் குறைபாடு உள்ளது.
  • எனவே பசுந்தீவன குறைபாட்டினை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில், அதிக பசுந்தீவன உற்பத்தி திறன் கொண்ட சத்துள்ள தீவனப்பயிர் இரகங்களை உருவாக்குதல் அவசியம்.

குதிரை மசால் கோ2

  • தீவனப்பயிர்த் துறையிலிருந்து குதிரை மசால் கோ2 என்ற புதிய இரகம் கடந்த ஆண்டு (2013) வெளியிடப்பட்டது. தற்போது சாகுபடியில் உள்ள கோ 1 என்ற இரகம் 1980-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • குதிரை மசால் கோ2 சராசரி பசுந்தீவன விளைச்சலாக ஒரு ஆண்டில் எக்டருக்கு 130.6 டன் கொடுத்துள்ளது. இது கோ 1 (103.8 டன்கள், எக்டர் வருடம்) இரகத்தை விட 25.9 சதம் அதிகமாகும். பண்ணைத்திடல்களின் ஆய்வு முடிவுகளிலும் குதிரை மசால் கோ 2 (126.8 டன்கள்,எக்டர்.வருடம்), கோ 1 (94.4 டன்கள், எக்டர்.வருடம்) இரகத்தை விட 27.6 சதம் அதிகம் பெற்று முன்னிலை வகித்தது.
  • பசுந்தீவன விலைச்சலும் அதன் தரமும் ஒருங்கே ஏற்றமுகத்துடன் இணையப் பெற்றது இப்புதிய இரகத்தின் சிறப்பம்சமாகும். அதிக புரதச்சத்தினை (23.5 சதம்) கொண்டுள்ளதால் அதிக விளைச்சலுக்கு (5.16 டன்கள்,எக்டர் வருடம்) ஏதுவாகின்றது.
  • இதன் உலர் எடை விளைச்சல் ஒரு எக்டருக்கு ஒரு ஆண்டில் 21.94 டன் ஆகும். இது கோ I (20 சதம்) ஐ விட சற்றே குறைந்தளவு நார்ச்சத்தைக் (19.2 சதம்) கொண்டுள்ளதால் அதிக செரிமானத்திற்கு ஏற்றதாக உள்ளது.
  • இதன் ஈத்தர் வடிமான அளவு 4.9 சதம் உள்ளதால் உயிர்ச்சத்துக்கள் எளிதில் கிடைக்க வழிகோலுகின்றது. மேலும் இதில் நுண்ணுரட்டச்சத்துக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம் கோ 1 -ஐ காட்டிலும் அதிக அளவில் உள்ளன. இதன் பச்சைய அளவும் அதிகமாக உள்ளதால் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஏற்றது.
  • •மேலும் குதிரை மசால் கோ 2, கோ 1 -ஐ காட்டிலும் சீரிய பண்புகளை கொண்டதாக உள்ளது. இது கோ 1 -ஐ விட அதிக தண்டுகள் (15-20), மிருதுவான, கரும் பச்சை இலைகள், அதிக இலைக்காம்புகள் (9-11), இலைத்தண்டு விகிதம் (0.47) உடையதாக உள்ளது.
  • இப்பண்புகளால் அதிக சுவையுடன் இருப்பதால் கறவைமாடுகள், செம்மறி ஆடுகள், ஆடுகள், ஈமு கோழிகள் மிகவும் விரும்பி உண்ணுகின்றன. குதிரை மசால் கோ 2-ன் அடர்த்தியான, கொத்துக் கொத்தாக பூக்கும் திறன் கூடுதல் விதை உற்பத்திக்கு (18.2%) வழி வகுக்கின்றது.

சிறப்பியல்புகள்

  • மிருதுவான, கரும் பச்சை இலைகளுடன் கூடிய அதிக தண்டுகளுடன் காணப்படும்
  • அதிக புரதச்சத்து (23.5%), உலர் எடை விளைச்சல் (21.94 டன்கள் / எக்டர் / வருடம்)
  • அடர்த்தியாக பூக்கும் திறனால் கூடுதல் விதை உற்பத்தியாகின்றது.
  • விரைவாக தழைக்கும் திறன், குறுகிய காலத்தன்மையால் கூடுதல் அறுவடைகளை மேற்கொள்ளவேண்டும்.
  • அதிக சுவையுடையதால், அதனால் கால்நடைகள் விரும்பி உண்ணுகின்றன.
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.