கால்நடைகளுக்கு மூலிகை மருத்துவம்(Natural Treatment for Cattle Diseases)

  • மழைக் காலத்தில் மாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்
  • மாடுகளை ஈரம் இல்லாத இடத்தில் கட்டுதல்
  • பசுந்தீவனத்தின் அளவை குறைத்து
  • உலர்தீவனத்தை அதிகப்படுத்துதல்
  • அடர்தீவனத்தில் தண்ணீரின் அளவைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம்.

அதையும் தாண்டி கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை மூலிகைகளைக் கொண்டே சரி செய்யலாம் என்று சொல்லும் மதுரையைச் சேர்ந்த கால்நடை மூலிகை மருத்துவர் ராஜமாணிக்கம், அந்த மருந்துகளை வரிசையாகப் பட்டியலிட்டார்.

குளிர் காய்ச்சல் நோய்

வெங்காயம்-200 கிராம், மிளகு-10 கிராம், வெற்றிலை-5, சீரகம்-5 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து உள்ளே கொடுத்தால் அரை மணி நேரத்திலே காய்ச்சல் குறைந்து விடும்.

ஜன்னி

மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வேப்பண்ணெயைத் தேய்த்து, சாம்பிராணிப் புகை போட்டு வந்தால், சரியாகி விடும். அல்லது குப்பைமேனி இலை-50 கிராம், சின்ன வெங்காயம்-25 கிராம் எடுத்துக் கொண்டு, இரண்டையும் அரைத்து வெள்ளைத் துணியில் கட்டி மூன்று நாட்களுக்கு மூக்கு மற்றும் காதில் ஐந்து சொட்டும், கண்ணில் இரண்டு சொட்டும் விட்டு சாம்பிராணிப் புகை போட்டு வந்தால், சரியாகி விடும்.

கால் புண்

காலில் ஏற்படும் சேற்றுப் புண்ணுக்கு, ஓமவல்லி இலை-50 கிராம், வேப்பிலை-50 கிராம், புகையிலை-10 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து 2 முதல் 3 நாட்களுக்கு புண்ணில் தடவி வந்தால், சரியாகி விடும்.

கோமாரி

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துளசி-100 கிராம், விரலி மஞ்சள்-3 துண்டு, உப்பு 10 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து மூன்று உருண்டைகளாகப் பிரித்துக் கொண்டு, தினம் ஒன்று வீதம் மூன்று நாட்களுக்கு உள்ளே கொடுதால் கோமாரி அண்டாது.

கோமாரி நோய் தாக்கிவிட்டால், கால் கிலோ மருதாணி இலையை இரண்டு லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி ஆற வைத்து, இளம்சூட்டில் கால் மற்றும் வாய்ப்பகுதியில் புண் உள்ள இடங்களைக் காலை-மாலை வேளைகளில் கழுவி விட வேண்டும்.

மூன்று மஞ்சள் வாழைப்பழம், 100 மில்லி நல்லெண்ணெய் கலந்து பிசைந்து, 24 மணி நேரம் வைத்திருந்து கொடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 3 நாட்கள் செய்தால் நோயில் இருந்து மாடுகள் மீண்டுவிடும்.

ஆடுகளை தாக்கும் நோய்கள்

ஆடுகளைத் தாக்கும் ஈரல் முட்டி நோய்

இந்த நோய் வெள்ளாடுகளை அதிகமாகத் தாக்கும். ஈரமான இடங்களில் கட்டுதல், சாணி, சிறுநீர்தேங்கிய இடங்களில் கட்டுதல் போன்றவற்றால் இந்நோய் தாக்கும். நோய் தாக்கிய ஆடுகள் குன்றிப்போய் விடும். ஒரு ஆட்டுக்கு 50 முதல் 70 கிராம் பருத்தி விதை என்ற அளவில், தினமும் ஒரு வேளை என ஏழு நாட்களுக்குக் கொடுத்தால், நோய் சரியாகி விடும்.

மூக்கடைப்பான்

100 கிராம் கண்டங்கத்திரிப் பழத்தை (கறி முள்ளி) இடித்து வெள்ளைத்துணியில் கட்டி, ஒரு லிட்டர் ஆட்டுச் சிறுநீரில் 24 மணிநேரம் ஊற வைத்து, ஒவ்வொரு ஆட்டின் மூக்கிலும், 3 சொட்டுகள் வீதம் காலை-மாலை வேளைகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு விட்டு வந்தால் மூக்கடைப்பு சரியாகி விடும்.

படுசாவு (கத்தல் நோய்)

மழை முடிந்து 10 நாட்கள் வரை ஒன்றரை மணி நேரம் மேய்த்துவிட்டு, ஒரு மணி நேரம் மேய்ச்சல் இல்லாத இடத்தில் நிறுத்தி, செரிமானம் செய்ய விட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் மேய விட வேண்டும்.

மேலும் : ஆடுகளை தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்

கால்நடைக்கான மூலிகை உருண்டை

பிரண்டை-100 கிராம், சோற்றுக் கற்றாழை-200 கிராம், நெல்லிக்காய்-2, முருங்கைக் கீரை-100 கிராம், கீழாநெல்லி-100 கிராம், கரிசலாங்கண்ணி-100 கிராம், குப்பைமேனி-100 கிராம், வேப்பங்கொழுந்து-100 கிராம், பூண்டு-5 பல், சின்ன வெங்காயம்-5 ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.

சீரகம்-20 கிராம், மிளகு-10 கிராம், மஞ்சள் தூள்-10 கிராம் ஆகியவற்றை ஒன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.

அரைத்தக் கலவை மற்றும் இடித்தக் கலவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அவற்றுடன் பனைவெல்லம்-200 கிராம் கலந்து சிறு சிறு உருண்டை பிடித்து, கல் உப்பில் தோய்த்து கொடுக்க வேண்டும். இது ஒரு மாட்டுக்கான அளவு. ஆடுகள் எனில் ஐந்து ஆடுகளுக்குப் போதுமானதாக இருக்கும்.

About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

1 Comment so far. Feel free to join this conversation.

  1. Arulkumar October 29, 2018 at 11:26 am -

    Nice post

Leave A Response

You must be logged in to post a comment.