தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் – அசத்தும் பெண் விவசாயி (Coconut Products)

உடுமலை அருகே, விவசாயத்தில் கணவனுக்கு உதவியாக இருப்பதோடு, தேங்காயில் இருந்து ‘வெர்ஜின் ஆயில்’ லட்டு மற்றும் பருப்புபொடி உட்பட பல்வேறு மதிப்புக்கூட்டு பொருட்களில் அசத்தி வருகிறார் பெண் விவசாயி.

உடுமலையில் விவசாய சாகுபடியில் மூன்றில் ஒரு பங்காக தென்னை சாகுபடி உள்ளது. சாகுபடியில், பெரும்பாலும் மதிப்புக்கூட்டு பொருளாக கொப்பரை மட்டுமே உற்பத்தி செய்து வருகின்றனர். ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்தால் ‘வெர்ஜின்’ ஆயில், தேங்காய் லட்டு, பருப்பு பொடி உட்பட பல்வேறு விதமான மதிப்புக்கூட்டு பொருட்களை விவசாயிகள் தங்கள் வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம் என்கிறார் உடுமலை திருமூர்த்திநகரை சேர்ந்த கலாவதி.

இதுபோன்று மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்வதற்காக, கேரள மாநிலம் கொச்சியிலுள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் பயிற்சி பெற்று செய்து வருகிறார். தற்போது விருப்பத்தின் பேரில் உற்பத்தி செய்து கொடுத்து வருகிறார். எதிர்காலத்தில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கு முறையான அனுமதி பெற்று முழுமூச்சில் ஈடுபடவுள்ளதாக நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை

கணவன் மற்றும் மகன் இருவரும் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தென்னை, பேரிச்சை, மல்பெரி உட்பட பயிர்கள் சாகுபடி செய்துள்ளோம். அனைத்து பயிர்களுக்கும் ரசாயன கலப்பில்லாத இயற்கை சாகுபடி முறையே பின்பற்றப்படுகிறது. என்னதான் இயற்கையாக தேங்காய் விளைவிக்கப்பட்டாலும், உரிய விலை கிடைக்காமல் திண்டாட வேண்டியுள்ளது.

கொப்பரையின் விலையும் நிலையாக இருப்பதில்லை. இதனால் மாற்றி யோசித்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றிபெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அப்போதுதான் வீட்டிலேயே குடிசைத்தொழில் போன்று தேங்காயில் இருந்து மதிப்புக்கூட்டு பொருளாக ‘வெர்ஜின்’ ஆயில் உற்பத்தி செய்யலாம் என்று விவசாயிகள் பலரும் தெரிவித்து வந்தனர்.

கொச்சியிலுள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில், ‘வெர்ஜின்’ ஆயில் உட்பட பல்வேறு மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி கொடுப்பது தெரியவந்தது.

அதன்படி கொச்சியில் ஒருமாதம் மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்வது குறித்து பயிற்சி பெற்று வந்து, தற்போது எங்களுக்கு தேவையான அளவு மட்டும் செய்து வருகிறோம். விருப்பத்தின் பேரில் கேட்பவர்களுக்கும் செய்து தருகிறேன்.

காய்கள் தரமான இருப்பதுடன், 45 நாட்கள் இடைவெளியில் பறிக்கப்பட்டு, 10 நாட்கள் இருப்பு வைத்த தேங்காயாக இருக்க வேண்டும். குறிப்பாக தேங்காயை உடைத்த அரைமணி நேரத்தில் பால் எடுத்து எண்ணெய் தயாரிக்க வேண்டும். தேங்காயை துருவி எடுத்து, வெள்ளை துணியில் வைத்து பால் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எடுக்கப்படும் தேங்காய் பாலை மிதமான சூட்டில் வைத்து, 40 நிமிடம் முதல், ஒருமணி நேரம் காய வைக்க வேண்டும். அதிலிருந்து வெர்ஜின் ஆயில் எனப்படும் சுத்தமான தேங்காய் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.

ஒரு லிட்டர் இந்த வகையான ஆயில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம், 20 தேங்காய்கள் வேண்டும். லிட்டர் அதிகபட்சமாக, 1,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் வீட்டில் இருந்தபடியே சிறந்த வருமானம் ஈட்ட முடியும்.

தேங்காய் லட்டு

எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு வரும் தேங்காய் சக்கையில் இருந்து சுவையான லட்டும் உற்பத்தி செய்ய முடியும். தேங்காய் சக்கையுடன், சர்க்கரை, முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு நெய்விட்டு வறுத்தெடுத்து மிக்சியில் லேசாக அரைத்து லட்டு செய்யலாம். அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து செய்தால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பருப்பு பொடி

தேங்காய்பால் எடுத்த சக்கைகளை வெயிலில் நன்கு உலர்த்தி அதனை பயன்படுத்தி இட்லி பொடி, பருப்பு பொடி உட்பட சமையலுக்கு தேவையான பொடிகளை உற்பத்தி செய்ய முடியும். அதேபோல் தேங்காய் தண்ணீருடன் எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறு கலந்து குளிர்பானம் உற்பத்தி செய்யலாம்.

தேங்காயில் இருந்து கழிவு என்பது எதுவுமில்லாமல் இவ்வாறு பல்வேறு விதமான மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்படும் வெர்ஜின் ஆயில் தாய்பாலுக்கு நிகரானது என்றும், சரும பிரச்னைகள், ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோய், தோல் நோய்களை கட்டுப்படுத்துவதாகவும் வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாய சாகுபடிக்கு உதவியாக இருக்கும் பெண்கள், மதிப்பு கூட்டு பொருட்களில் தங்கள் கைவண்ணத்தை காட்டினால், ஏற்படும் மாற்றங்களுக்கு கலாவதி போன்றவர்களே உதாரணமாக தெரிகின்றனர்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.