சாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)

தென்னை மரங்கள் பெற்ற பிள்ளையை போல் காப்பாற்றும் என்பார்கள். பிள்ளைகளை போல வளர்த்த தென்னை மரங்கள் கஜா புயலில் சாய்ந்து கிடப்பதை பார்த்து கத்தி கலங்கி நிற்கிறார்கள் நம் விவசாயிகள்.
சமூக ஊடகங்கள், வலைதளங்களில், “சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்” என்று வரும் தகவல்களால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். இது பற்றி துறைசார் வல்லுநர்கள் கூறியது,

தென்னை மரங்கள் மறுநடவு

“சாய்ந்த தென்னை மரங்களை மறுநடவு செய்வது என்பது சாத்தியமே இல்லாத விஷயம். விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காமல் செய்வதற்காகச் சில விஷமிகள் திட்டமிட்டே இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்றே தோன்றுகிறது. அதோடு சில நிறுவனங்கள் தங்களது விவசாய இடுபொருள்களை விற்பனை செய்வதற்காக இதுபோன்ற தகவல்களைப் பரப்பி விளம்பரம் செய்கிறார்கள்.

மூன்று வயதுக்குட்பட்ட மரங்களை இப்படி மறுநடவு செய்தால் பிழைத்துக்கொள்ள ஓரளவு வாய்ப்பிருக்கிறது. பாளைவிட்ட மரங்களுக்கு மறுநடவு என்பது சாத்தியமில்லாத விஷயம். அதோடு, மறுநடவு என்பது எளிதான காரியமில்லை. மிகவும் செலவு பிடிக்கக்கூடிய விஷயம். இப்படி மறுநடவு செய்யும் மரங்கள் பலன் கொடுக்க மூன்று ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். மறுநடவு செய்து பிழைக்குமா, பிழைக்காதா என்று காத்துக்கிடப்பதைவிட, காலம் தாழ்த்தாமல், உடனடியாகப் புதிய கன்றுகளை நடவு செய்வதுதான் சரியாக இருக்கும்.

கோயம்புத்தூரில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜவஹர்லால் கூறியது, தென்னை மரங்களில் ஆணி வேர்கள் கிடையாது. சல்லி வேர்கள்தான் படர்ந்திருக்கும். இதனால், புயலில் சாய்ந்த தென்னை மரங்களின் வேர்கள் அறுபட அதிக வாய்ப்புகள் உண்டு. சாய்ந்து கிடக்கும் மரங்களின் அடிப்பகுதியில் கொஞ்சம் வேர்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு முழுமையாக வேரோடு பெயர்ந்துவிட்டது என எண்ணுவது தவறு. மேலும், சாய்ந்த மரங்களின் குருத்துகள் சேதமடைந்திருக்கும். குருத்து சேதமடைந்துவிட்டால், அந்த மரத்தால் பலனே கிடைக்காது. அப்படியே அதை மறுநடவு செய்து பிழைத்து வந்தாலும், அது உறுதியாக இருக்காது. சாதாரணக் காற்றுக்கே சாய்ந்துவிடும்.

மூன்று வயதுகுட்பட்ட தென்னங்கன்றுகளாக இருந்தாலும், வேர்கள் அறுபடாமல், மண்பிடிப்போடு இருந்தால் மறுநடவு செய்ய முயலலாம். அதுவும் பிழைக்க 50 சதவிகிதம்தான் வாய்ப்புள்ளது. ஆணி வேர்களை உடைய மா, வேம்பு, தேக்கு போன்ற மரங்கள்கூட மறுநடவில் உயிர் பிழைக்க வாய்ப்புகள் குறைவுதான். இளம் மரங்களாகவும், வேர்கள் உடையாமல் இருந்தாலும் மறுநடவுக்கு முயற்சி செய்து பார்க்கலாம்” என்ற ஜவஹர்லால், விவசாயிகள் உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்துச் சொன்னார்.

பூஞ்சண நோய்

“புயலில் சிக்கி சாயாமல் பிழைத்திருக்கும் மரங்களில் பூஞ்சண நோய் தாக்க வாய்ப்புள்ளது. அதற்குப் பூஞ்சணத் தடுப்பு மருந்துகளைப் பரிந்துரைக்கப்படும் அளவில் தண்ணீரில் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். சாய்ந்த மரங்களின் வேர்கள் மண்ணில் இருந்தால் அந்த வேர்களில் பூஞ்சணத்தொற்று ஏற்பட்டுப் பரவ வாய்ப்புள்ளது. அதனால், அந்த இடங்களிலும் பூஞ்சணத்தடுப்பு மருந்தை ஊற்ற வேண்டும். மரங்களில் காயம் ஏற்பட்டு பிசின் வடிந்தால், அதற்குரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

புதிய தென்னங்கன்றுகள்

புதிய தென்னங்கன்றுகளை நடவு செய்யும்போது, ஏற்கெனவே மரம் இருந்த இடத்தில் நடவு செய்யாமல் சற்று தள்ளி நடவு செய்ய வேண்டும். மரங்களை இழந்த விவசாயிகளுக்காக அதிக எண்ணிக்கையில் புதிய தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்யுமாறு விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர். இதற்கான பணிகள் எங்களது ஆராய்ச்சி நிலையங்களில் உடனடியாகத் தொடங்கப்படவுள்ளது. வேளாண்மைத்துறை மூலமாக வெளி மாநிலங்களிலிருந்து தென்னங் கன்றுகளை வாங்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மண்வளம் பெற

புதிய கன்றுகள் வரும் வரை நிலத்தை அப்படியே போட்டு வைக்காமல், உளுந்து, பச்சைப்பயறு, காய்கறிகள் போன்றவற்றைச் சாகுபடி செய்து வருமானம் பார்க்கலாம். இதனால் மண்வளம் கூடி புதிதாக நடவு செய்யவிருக்கும் கன்றுகளுக்குக் கைகொடுக்கும். புதிய கன்றுகளை நடவு செய்த பிறகும், ஐந்து ஆண்டுகளுக்குக் குறுகிய காலப் பயிர்களை ஊடுபயிர்களாகச் சாகுபடி செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் கூறியது, ‘‘விழுந்த தென்னை மரங்களை மீண்டும் மறுநடவு செய்யும்போது அத்தனை மரங்களும் முழுவதும் உயிர் பிழைத்துவிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

மறுநடவு செய்யும் மரங்களை, அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளியைப் போல் கவனமாகப் பராமரித்தால் மட்டுமே மூன்றாண்டுகளுக்கு மேல் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வளவு  கஷ்டப்பட்டு, மூன்றாண்டுகள் கழித்துப் பலன் எடுப்பதற்குப் பதிலாக, புதிய தென்னங்கன்றுகளை நடவு செய்வதே சிறந்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் பலன் கொடுக்கக்கூடிய கலப்பினத் தென்னங்கன்றுகள் உள்ளன. ஆனால், இந்த ரகங்கள் அதிக ஆண்டுகள் நின்று பலன் தராது. அதையும் கவனத்தில் கொண்டு, மண் கண்டத்துக்கேற்ற கலப்பினக்கன்றுகளையும், மற்ற ரகக் கன்றுகளையும் கலந்து நடவு செய்து குறுகிய காலத்தில் வருமானம் பார்ப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும்.

புதிய குருத்து

முற்றிலும் சேதமான, குருத்து ஒடிந்த தென்னை மரங்களை அகற்றிவிட்டு, புதிதாக நடவு செய்வதுதான் நல்லது. அதே நேரம், தென்னை மரங்கள் கீழே விழாமல், மட்டைகள் மட்டும் கீழ் பக்கமாகத் தொங்கிக்கொண்டுள்ள மரங்களை அகற்ற வேண்டியதில்லை. சிறிது காலம் பொறுத்திருந்தால் மட்டைகள் மேல்பக்கமாக வர ஆரம்பித்துவிடும். மரம் சாய்ந்து விழாமல் குருத்து மட்டும் சாய்ந்திருந்தாலோ அல்லது ஒடிந்திருந்தாலோ அம்மரங்களையும் வெட்டாமல், ஆறுமாதங்கள் வரை காத்திருக்கலாம். ஆறு மாதங்களில் புதிய குருத்து வர வாய்ப்புண்டு. ஒருவேளை ஆறுமாதம் கழித்துப் புதிய குருத்து வராத நிலையில் அம்மரத்தை வெட்டலாம்.

தென்னை மரங்களில் காயம்பட்டு பிசின் வடியும் சூழ்நிலையில், அரைத்த குப்பைமேனி இலை, பசுஞ்சாணம், பஞ்சகவ்யா கலந்த கலவையைப் பூசிவிடலாம். வேர்ப்பகுதியில் பூஞ்சணம் தாக்கும் என நினைத்தால், 5 அடி விட்டம் கொண்ட மரத்துக்கு 50 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் வேர்ப்பகுதியில் இட்டு மண் கொண்டு மூடிவிடலாம்” என பரிந்துரை செய்தார்.

தொடர்புக்கு: 

தோட்டக்கலைக் கல்லூரி, கோயம்புத்தூர். தொலைபேசி: 0422 6611284. 
தென்னை ஆராய்ச்சி நிலையம்
வேப்பங்குளம், தஞ்சாவூர்
தொலைபேசி: 04373 260205, 
04373 260124.
செந்தூர்குமரன், செல்போன்: 94438 69408.

நன்றி : விகடன்

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.