முடக்கத்தான் கீரை (Coliyan)

முடக்கத்தான் என்றால் என்ன

முடக்கத்தான் என்பது கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறு கொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும்.

கம்பி போன்ற காம்பின் நுனியில் வெண்ணிறப் பூக்களும் காய்களும் இருக்கும். அந்தக் காய்கள் மிருதுவான தோல்களால் முப்பட்டை வடிவமாக மூடிக்கொண்டும், பலூன் போன்று உப்பிக் கொண்டும் இருக்கும். அந்தக் காய்க்குள் மூன்று அறை உண்டு. ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு விதை வீதம் மூன்று அறைக்குள் மூன்று விதை இருக்கும். இந்த விதை நன்கு முற்றாத போது பச்சையாக உருண்டையாக இருக்கும். விதை நன்கு முற்றிக் காய்ந்தவுடன் உருண்டையாக, கறுப்பு நிறமாக இருக்கும். ஒவ்வொரு விதையிலும் வெண்மை நிற அடையாளம் ஒன்றிருக்கும். இந்த விதைகளே சிதறி முளைக்கிறது.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு அருமருந்தாகும்.

முடக்கத்தான் கீரையின் மருத்துவ பயன்கள்

  • இந்த முடக்கத்தான் முடக்குவாதத்தைப் போக்குகிறது. முடக்கத்தான், முடக்கற்றான், முடக்கு அறுத்தான், இந்திரவல்லி, ஊழிஞை போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதை கிராமத்து மக்கள் கீரையாகப் பயன்படுத்தி பல நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
  • முடக்கத்தான் கீரை 61 கலோரி வெப்ப ஆற்றலைக் கொடுக்கிறது.
  • முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டாகப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
  • பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான். இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
  • இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.
  • துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • கைப்பிடியளவு முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, அரைத்த புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து, அடையாக சுட்டு காலை, மாலை இரண்டு அடை வீதம் சாப்பிட்டு வர உடல் வலி நீங்கும்.
  • முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
  • இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
  • முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
  • இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
  • வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
  • மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.
  • முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.
  • இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம்.
  • இரண்டு கைப்பிடி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும்(தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம்) பூண்டு நான்கு பல், இஞ்சி சின்னத்துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரைத்தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி. இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவேண்டும். பிறகு இரண்டு குவளை நீர் ஊற்றி நல்லா வேக வைக்கவேண்டும். கீரை நல்லா வெந்து அதன் சாரம் நீரில் இறங்கிய பிறகு வடிகட்டி எடுத்தால் முடக்கத்தான் சாறு தயார். மூட்டுகளில் தங்கிய எல்லா எதிரிகளும் கரைந்து இருந்த இடம் தெரியாமல் ஓடிடும்.
  •  இதன் இலைகளை மூன்று விரல் அளவு எடுத்து, மிளகு ரச மசாலுடன் தட்டிப் போட்டு ரசம் செய்து சாப்பிட்டு வர கீல்வாதம், மூட்டுப் பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்ற நோய்கள் தீரும். மலச்சிக்கல் தீரும். வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
  • இதன் இலைகள் நான்கு விரல் அளவு எடுத்து, வெங்காயம் சிறிது கூடுதலாக நறுக்கிப்போட்டு, மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து சில நாட்கள் சாப்பிட்டு வர கழுத்துவலி, இடுப்பு வலி, முடக்குவாதம் போன்ற நோய்கள் தீரும்.
  • இதன் இலைகளை அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில் சாப்பிட்டு வர, காசம், சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய்கள் தீரும்.
  • இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து, அதனுடன் கருப்பட்டி சேர்த்து உண்டுவர குடலிறக்க நோய் தீரும்.
  • இதன் இலைகளை மூன்று விரல் அளவு எடுத்து, வெல்லம் சேர்த்து நெய்விட்டு வதக்கி உண்டு வர, கண் வலி தீரும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் பல குணமாகும்.
  • இதன் இலைகளைப் பாலுடன் சேர்த்து அரைத்து, கொப்புளங்களுக்குத் தடவி வர குணம் கிடைக்கும்.
  • ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலைகளை இடித்து, ஒரு பழகின மண்பானையில் இட்டு, அரைப்படி நீர் விட்டு அரைக் கால் படியாக சுண்டக்காய்ச்சி, வடி கட்டி ஒரு வேலைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் இரண்டுவேளை மூன்று நாள் அருந்த நரம்புகள் சம்பந்தமான மேக வாய்வு, மூச்சுப் பிடிப்பு, மூலம், கபம் சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.
தகவல்
தினமும் இரண்டு முடக்கத்தான் இலையை பச்சையாக, வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர  மூட்டுவலி, கழுத்துவலி, இடுப்பு வலி, ஏன் முடக்குவாதம் கூட சில மாதங்களில் சரியாகி விடும்.

ஒரே இலையில் இத்தனை மருத்துவ பயன்களா என்று வியப்பாக இருக்கிறதா, வியப்பதோடு நிறுத்தி விடாதீர்கள் அதன் பயனையும் அனுபவியுங்கள்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.