கால்நடைகளை தாக்கும் மழைக்கால நோய்களும் அதன் தீர்வும் (Diseases in Rainy Season)

மழைக் காலம் தொடங்கி விட்டாலே காய்ச்சல், வயிற்றுப்போக்கு, டெங்கு என விதவிதமான நோய்கள் மனிதர்களை வாட்டி எடுக்கின்றன. கால்நடைகளும் இதற்கு விதிவிலக்கல்ல! இவற்றையும் பலவிதமான நோய்கள் தாக்குகின்றன. அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் சிலரின் ஆலோசனைகள் இங்கே இடம் பிடிக்கின்றன.

நோய்களை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றம்

முதலில் பேசுகிறார்… மருத்துவர் புண்ணியமூர்த்தி (பேராசிரியர் மற்றும் தலைவர் -தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சாவூர்).

”வெயில் காலத்திலிருந்து மழைக் காலத்துக்கு பருவநிலை மாறும்போது, கால்நடைகளுக்கு அயர்ச்சி ஏற்பட்டு, சுவாச சம்பந்தமானப் பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு. தவிர, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வசிப்பிடங்களின் தன்மைக்கு ஏற்றவாறு கோமாரி, நீலநாக்கு நோய், கொள்ளை நோய், நிமோனியா காய்ச்சல் போன்ற நோய்களும் வரலாம். அந்தந்தப் பகுதியில் இருக்கும் கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாகவே இத்தைகைய நோய்களுக்கான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதனால் தவறாமல், தடுப்பூசி போட வேண்டியது அவசியம்.

தீவனம்

பொதுவான சில பராமரிப்பு முறைகளையும் கடைப்பிடித்தால், மழைக் காலங்களில் நோய்த் தாக்குதலில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்துவிட முடியும். மழை நேரங்களில் மாடுகள் சரியாக மேய்ந்து இரை எடுக்காது. அதோடு புதிய புற்களோடு முளைத்திருக்கும் களைகளையும் சாப்பிடுவதால், கழிச்சல் நோயும் வரலாம். அந்த மாதிரி நேரங்களில் அவ்வப்போது மாடுகளுக்கு தானியங்களையும், அடர்தீவனங்களையும் கொடுத்து சமாளிக்கலாம். திடீரென்று, அடர்தீவனங்களைக் கொடுக்கும்போது செரிமானப் பிரச்னைகள் வந்து விடும். எனவே, முன்கூட்டியே கொஞ்சம் கொஞ்சமாக அடர்தீவனங்களையும் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.

மழைக்காலங்களுக்குத் தேவையான சோளத்தட்டை, கடலைக்கொடி, வைக்கோல் போன்றவற்றையும் முன்பே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். கோழிகள் உட்பட அனைத்துக் கால்நடைகளுக்கும் மூலிகை உருண்டைகளைத் தயாரித்துக் கொடுத்துவிட வேண்டும்.

கொசுக்களைவிரட்ட மூலிகை மூட்டம்

மாலை நேரத்தில் இரும்புச் சட்டியில் மணலைக் கொட்டி கட்டை, கரி மூலம் நெருப்பு உண்டாக்கி, நொச்சி, பலா, எருக்கு, தைல மர இலை என அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய ஆடு, மாடுகள் சாப்பிடாத மூலிகை இலைகளையும், சாம்பிராணியையும் போட்டு மூட்டம் போட்டால் கொட்டகையில் கொசு தொல்லை இருக்காது. இதனால் பெரும்பாலான நோய்கள் பரவாமலும் தடுக்க முடியும்.

வெள்ளைக் கழிச்சல்

மழைக் காலங்களில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் வரும். இந்நோய்க்கான தடுப்பூசி கால்நடை மருந்தகங்களில் இலவசமாகவே போடப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தவறாமல், அதைப் போட்டு வர வேண்டும். சுவாச சம்மந்தமான நோய்களும் இந்தக் காலத்தில் தாக்குதல் நடத்தும். மூலிகை உருண்டை கொடுப்பதன் மூலம் இவற்றை தடுத்து விடலாம். ஒருவேளை நோய் தாக்கி விட்டால் மருந்துகள் மூலம் சரிப்படுத்தலாம்” என்று சொன்னார் புண்ணியமூர்த்தி.

வெள்ளைக்கழிச்சலுக்கு மருந்து

கீழாநெல்லி-50 கிராம், சின்ன வெங்காயம்-5, பூண்டு-2 பல், மஞ்சள்- 5 கிராம், சீரகம்-20 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து அரிசிக் குருணை அல்லது நொய்யில் கலந்து தொடர்ந்து, 3 முதல் 5 நாட்களுக்குக் கொடுத்தால் வெள்ளைக் கழிச்சல் சரியாகி விடும்.

துளசி-20 இலை, தும்பை-10 இலை, கற்பூரவள்ளி-1 இலை, தூதுவளை-1 இலை, சீரகம்-5 கிராம், மஞ்சள்-5 கிராம், மிளகு-5 கிராம், பூண்டு-5 பல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தீவனம் அல்லது தண்ணீரில் கலந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொடுத்தால் சுவாச நோய் சரியாகி விடும். இது பத்து கோழிகளுக்கான அளவு.

About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.