ட்ரோன் என்னும் ஆளில்லா விமானம் (Drone)

ட்ரோன் என்றால் ஆளில்லாத சிறிய விமானம் என்று பொருள். ட்ரோன்களில் பல ரகங்கள் இருக்கின்றன. தொடக்கத்தில் இவை ராணுவச் செயல்பாட்டிலும் உளவுப் பணிகளிலும்தான் பயன்படுத்தப்பட்டுவந்தன. ஆனால், இன்றைக்கு அந்த வகை ட்ரோன்கள் தனிப் பிரிவாகிவிட்டன. சிவிலியன் ட்ரோன்கள் எனப்படும் அன்றாடப் பணிகளுக்கான ட்ரோன்களில்தான் இப்போது பரவலாகக் கவனம் செலுத்தப்படுகிறது.

ஆள் இல்லாத வான் வாகனம் என இது பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. மென்பொருள், செயலி மூலம் இவற்றை இயக்கலாம். ட்ரோன்கள் பேட்டரி மூலம் இயங்குகின்றன.

ட்ரோன் வகைகள்

அடிப்படையில் இவை இரண்டு வகைப்படும். நிலையான இறக்கைகள் கொண்ட விமான ரகம், சுழலும் இறக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர் ரகம். சுழலும் சக்கர வகையில் நான்கு சக்கரங்கள், ஆறு சக்கரங்கள், எட்டுச் சக்கரங்கள் கொண்ட காப்டர்கள் உள்ளன. பெரும்பாலும் சிவிலியன் பயன்பாட்டில் இந்த வகை காப்டர் ட்ரோன்களைத்தான் பார்க்க முடிகிறது. இவற்றின் தலைப் பகுதியில் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். அவை தரும் வேகத்தில் இவை பயணிக்கும். மென்பொருளைக்கொண்டு பறக்கும் திசை உள்ளிட்ட செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம். எந்த இடத்துக்கு வந்துசேர வேண்டும், எங்கே செல்ல வேண்டும் எனும் கட்டளைகளைச் செயலி மூலம் பிறப்பிக்கலாம்.

புதுமைச் சாதனம்

ட்ரோன்களால் பறக்க முடியும், அவற்றை இயக்குவதும் எளிது. எனவே, இவற்றின் கைகளில் பொருட்களைக் கொடுத்து புரோகிராம் செய்தால், குறிப்பிட்ட இடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டுத் திரும்பி வந்துவிடும் எனும் கருத்து மிகப் பெரிய ஆர்வத்தைக் கிளறிவிட்டது. ஆனால், நடைமுறையில் இதெல்லாம் சரிப்பட்டுவருமா எனும் சந்தேகம் இருந்ததால் பரிசோதனை முறையில் கையாண்டு பார்க்கப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்ற பரிசோதனைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, ‘ட்ரோன் டெலிவரி’ எனும் கருத்தாக்கம் நிலைபெறத் தொடங்கியது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்தான் பரிசோதனை முறையில் முதல் ட்ரோன் டெலிவரி 2013-ல் வெற்றிகரமாக அரங்கேறியது. பிளர்ட்டே (Flirtey) எனும் ட்ரோன் தயாரிப்பு நிறுவனம், ஜுக்கல் (Zookal) எனும் புத்தக வாடகை சேவை நிறுவனத்துடன் இணைந்து, இணையம் மூலம் புத்தகம் ஆர்டர் செய்பவர்களுக்கு ட்ரோன் மூலம் அனுப்பிவைத்தது. அதன் பிறகு, இந்நிறுவனம் அமெரிக்காவில் பதிவுசெய்துகொண்டு, ட்ரோன் சார்ந்த முயற்சிகளில் பெரிய அளவில் ஈடுபட்டுவருகிறது. அமெரிக்காவில் 2015-ம் ஆண்டு அமேசானை முந்திக்கொண்டு வர்த்தக நோக்கிலான ட்ரோன் டெலிவரி பரிசோதனையில் இந்நிறுவனம் ஈடுபட்டது. இந்தப் பரிசோதனையின்போது மருத்துவப் பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து உணவகத்தில், மருத்துவ சேவையில் என ட்ரோன்களின் பயன்பாடு கொடிக்கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டது. சரக்குப் போக்குவரத்து மட்டுமல்ல விவசாயம், அகழாய்வு, பேரிடர் கால மீட்புப் பணிகள், ஏரியல் போட்டோகிராபி என இன்னும் பல துறைகளில் ட்ரோன்களுக்கான வெள்ளோட்டம் தொடங்கியிருக்கிறது.

எச்சரிக்கும் ஆபத்துகள்

இப்படி ட்ரோன்களின் பயன்பாடுகள் அதிகரித்துவந்தாலும் சவால்களும் சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. டெலிவரிக்காக ட்ரோன்களைப் பயன்படுத்தும்போது கட்டுப்பாடு, பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கின்றன. ட்ரோன்கள் அந்தரங்க உரிமையை மீறும் ஊடுருவலாக அமையலாம் என அஞ்சப்படுகிறது. தலைக்கு மேல் பறக்கும் ட்ரோன்கள் ஆபத்தாகவும் அமையலாம். எனவே, ட்ரோன் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடு, உரிமம் பெறுதல் போன்றவை வலியுறுத்தப்படுகின்றன. உளவு பார்க்கும் நோக்கில் எதிரிகளால் ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் எனும் அச்சமும் இருக்கிறது. ட்ரோன் துப்பாக்கி போன்ற வில்லங்க சங்கதிகளும் உலாவர ஆரம்பித்திருக்கின்றன.

இந்தச் சவால்களைத் திறம்பட எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே, நவீனத் தொழில்நுட்பத்தின் விளைவாகக் கிடைத்திருக்கும் ட்ரோன்களை மனித குலத்தின் நலனுக்காக ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.