விவசாயியையும் பயிரையும் காக்கும் உயிர்வேலி(Fencing)

மண் மற்றும் பயிர்களுக்கும் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கத்தின் மூலதனம் என, பல்வேறு சிறப்பம்சங்களுடன் உயிர்நாடியாக விளங்கும், ‘உயிர்வேலி’யின் மகத்துவம் அறியத்துவங்கியுள்ள விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் தாவரங்கள் மூலம் வேலி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகள் தனக்கு சொந்தமான நிலப்பரப்பை வரையறை செய்ய எல்லைகள் வகுக்கின்றனர். அதையும் தாண்டி, ஆடு, மாடு மற்றும் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க வேலி என்பது பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. இன்று, செங்கல் சுவர், கருங்கல் சுவர், கம்பி வேலி என, பல வடிவங்களில் வேலிகள் உருவெடுத்துள்ளன. தவிர, மின்சார வேலி, ‘சோலார் பென்சிங்’ என, நவீன தொழில்நுட்பங்களுக்கேற்பவும், பொருளாதார வசதிகளுக்கேற்பவும் வேலிகள் அமைக்கப்படுகின்றன.

புத்துயிர் பெறும் பழசு

ஆனாலும், இந்த வேலிகளால், பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடிவதில்லை என்பதே அனுபவம் தந்துள்ள பாடமாகவுள்ளது. இவை இல்லாத காலகட்டத்தில் நம் முன்னோர்கள் உயிருள்ள தாவரங்கள் மூலம் பரவலாகவே, ‘உயிர்வேலி’ அமைத்துள்ளனர். இடம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட தன்மைகளுக்கேற்ப இவற்றில் தாவரங்களை வளர்த்துள்ளனர். மண் மற்றும் பயிர் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, பல்லுயிர் பெருக்கத்தின் மூலதனமாகவும் உயிர்வேலிகள் விளங்கியுள்ளன.

பல்லுயிர் பெருக்கம்

மலைப்பகுதிகளில் கள்ளி, பாச்சான் போன்ற செடிகளும், சற்று தண்ணீர் வசதியுள்ள இடங்களில் கொட்டை செடி, மூங்கில் என இடத்திற்கு இடம் உயிர்வேலிகள் வளர்க்கப்படுகின்றன. உயிர்வேலிக்கும், நவீன செயற்கை வேலிகளுக்கும் ஆயுட்காலம், பல்லுயிர் பெருக்கம் உள்பட பல்வேறு விஷயங்களில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இவற்றை எல்லாம் உணர்ந்துவரும் விவசாயிகள், தற்போது உயிர்வேலி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாய நிலத்தை சுற்றிலும், பாச்சான், கொட்டைச் செடி, கள்ளி உள்ளிட்டவற்றை வைத்து உயிர்வேலி அமைக்கலாம். உயிர்வேலி உயிரூட்டமான சூழலை உருவாக்குவதுடன், விளை நிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. நவீன காலகட்டத்தில் கம்பிவேலி, சுவர், மின்வேலி உள்ளிட்ட செயற்கை வேலிகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் உயிர்வேலியில் இருக்கும் எந்தவொரு அம்சமும் செயற்கை வேலியில் இருப்பதில்லை.

உயிர்வேலி

ஒரு சில ஆண்டுகளில் செயற்கை வேலி அழிந்துவிடுகிறது. உயிர்வேலியை முதலில் அமைப்பதற்கு, சற்று கால அவகாசம் தேவைப்படும். அதேசமயம், நீண்ட கால பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். இதில், பன்மைத்தன்மை வாய்ந்த சிற்றுயிர்களின் பெருக்கமும், செடி, கொடிகளும் இருக்கும்.

அவற்றை, ஆடு, மாடுகள் உணவாக உட்கொள்ளும். மருத்துவ குணம் கொண்ட மூலிகை தாவரங்களும் தானாகவே வளர்வது, பலவிதங்களிலும் பலனளிக்கும்.

இன்று பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படும் காய்கறிகளை நாம் தவிர்த்து விடுகிறோம். உயிர்வேலியில் வாழும் பறவைகள் காய், கறிகளில் இருக்கும் புழு, பூச்சிகளை உணவுக்காக வேட்டையாடுவதால், பூச்சி மருந்து அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பகுதிக்கேற்ற செடி, கொடிகளை தேர்வு செய்வது நல்லது. வேலிகளில் நிறைய செடி, கொடிகள் வளர்வதுடன், பறவைகள், பல்லி, பாம்பு போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன.

உயிர்வேலிக்கு நடுவே வேப்பமரம், பனை, வில்வம், புளியமரம், கீழா நெல்லி, கற்பூரவல்லி, பிரண்டை, கீரை வகைகள் வளர்கின்றன. இவையெல்லாம் பறவைகள் இடும் எச்சத்தில்தான் வளர்ந்தன. நமது உடல்நலக் குறைபாடுகளுக்கும், உயிர்வேலியில் மூலிகைகள் கிடைக்கும். மற்ற வேலிகளை விட இதில் செலவு மிகக்குறைவு. கால்நடைகளுக்கு உணவு, மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகள் வளர்ப்பு என பல்வேறு பலன்களை உயிர்வேலியில் பெறமுடியும்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.