நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு(Get Hope In Chicken Culture)

கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் வரலாறு காணாத வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், கால்நடை வளர்ப்பு மூலமாகத்தான் ஓரளவு வருமானம் பார்த்து வருகிறார்கள் விவசாயிகள். அதிலும் ஆடு மாடுகளுக்குக்கூட தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்ட சூழ்நிலையில், நாட்டுக்கோழி வளர்த்து வந்த விவசாயிகள் வறட்சியின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டனர். இப்படி வறட்சிக் காலத்திலும் கைகொடுக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். பிராய்லர் கோழிகளைச் சாப்பிடுவதால் உடலுக்குத் தீங்கு நேரும் என நம்பப்படுகிறது. அதனால், நாட்டுக்கோழிகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பிருக்கிறது.

முறையான பயிற்சி மற்றும் திட்டமிடல்

  • நாட்டுக்கோழி வளர்ப்புக்கு முறையான பயிற்சி மற்றும் திட்டமிடல் மிகமிக அவசியம். இல்லையெனில் கையைச் சுட்டுக்கொள்ள நேரிடும். அந்த வகையில் பயிற்சிக்குப் பிறகு, இயற்கையான மேய்ச்சல் முறையில் வெற்றிகரமாக நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார்கள் திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடியைச் சேர்ந்த ஜோசப் ஆரோக்கியராஜ்-பிரான்சிஸ் பிரியா தம்பதி.
  • திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு-மாரம்பாடி சாலையில் மூன்றாவது கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது புனித வனத்து சின்னப்பர் ஆலயம். அங்கிருந்து வலது பக்கமாகச் செல்லும் சாலையில் 500 மீட்டர் சென்றால் இவர்களது பண்ணை நம்மை வரவேற்கிறது. நாட்டுக்கோழிகள் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன. கோழிக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருந்த தம்பதியைச் சந்தித்தோம். முதலில் பேசத் தொடங்கினார் ஜோசப்.
  • “ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரில தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்தேன். அங்கே போதுமான சம்பளம் கிடைக்காததால் பெயின்டிங் வேலை செஞ்சிட்டிருந்தேன். பிறகு, மூணு வருஷத்துக்கு முன்னாடி அசில், பெருஞ்சாதி, சிட்டுக்கோழி ரகங்கள்ல நாலு நாட்டுக் கோழிகளை வாங்கிட்டு வந்து வீட்டுல வளர்க்க ஆரம்பிச்சேன். அந்தக் கோழிகள் கொஞ்சம் கொஞ்சமா பெருகி ஒரு கட்டத்துல 40 கோழிகளாயிடுச்சு. அப்போ ஒரு நண்பர் இன்குபேட்டர் வாங்கி முட்டைகளைப் பொரிக்கச் சொல்லி யோசனை சொன்னார். உடனே வாங்கிட்டு வந்து முட்டைகளை அதுல வெச்சேன். ஆனா, அது சரிப்பட்டு வரல. அந்த நேரத்துல என் அம்மாவும் அக்காவும் ‘இன்னும் தெளிவா நாலு பேர்கிட்ட விசாரிச்சுட்டுப் பண்ணு’னு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான், திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்துக்குப் போனேன். அங்கே, கோழி வளர்ப்பு பற்றி பயிற்சி கொடுத்தாங்க” என்ற ஜோசப் தொடர்ந்தார்…
  • அதுக்கப்புறம்தான் இந்த இடத்துக்குக் கோழிகளைக் கொண்டு வந்தோம். இந்த இடம் மொத்தம் ரெண்டரை ஏக்கர். இதில் மேடான பகுதியில் 25 சென்ட் அளவு நிலத்தில் வேலி அடைச்சிருக்கோம். வேலிக்குள்ள நாங்க தங்கியிருக்கிறதுக்கு ஒரு குடிசை, கோழிகளுக்கு ஒரு கொட்டகைனு அமைச்சிருக்கோம். நிழலுக்காக அங்கங்க மரங்களை நட்டு வெச்சிருக்கோம். 2015-ம் வருஷம் இந்த இடத்துக்குக்கு வந்தோம். இங்க வந்த பிறகு என்னோட மனைவிதான் முழுமையா கோழிகளைக் கவனிச்சுக்கிறாங்க. நான் ஓய்வு நேரங்கள்ல மட்டும் பார்த்துக்குவேன்” என்றார்.
  • தீவனங்களை வைத்து முடித்துவிட்டு வந்த பிரான்சிஸ் பிரியா அவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். “நாட்டுக்கோழி வளர்ப்புதான் எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. குடும்பத்தோட இங்கேயே தங்கியிருந்து பார்த்துக்கிறதால, எங்க குழந்தைகளும் இதில் ஆர்வமாகிட்டாங்க. பொதுவா நாட்டுக்கோழி வளர்க்குறவங்க கொட்டகை அமைக்கிறதுக்கே ஆயிரக்கணக்குல பணத்தைச் செலவு செய்வாங்க. ஆனா, நாங்க இந்தப் பண்ணையில பெருசா எந்தச் செலவும் செய்யலை. எங்ககிட்ட இருந்த மரங்கள், தென்னங்கீத்துகளை வெச்சே கொட்டகை அமைச்சோம். 32 அடி நீளம், 16 அடி அகலத்துல ஒரே ஒரு கொட்டகைதான் இருக்கு. அதுவும் வெயில், மழையின்போது கோழிகள் ஒதுங்குறதுக்காகத்தான். இரவுல அடையறதுக்காகத் தனியா குச்சிகளைப் பரண் மாதிரி கட்டியிருக்கோம்.

மேய்ச்சல் முறை

நாங்க நாட்டுக்கோழி வளர்ப்பைப் பண்ணை முறையில செய்யல. சாதாரணமா கிராம வீடுகள்ல வளர்க்குற மேய்ச்சல் முறையிலதான் வளர்க்குறோம். அதேபோல தீவனம், மருந்துகளுக்காகவும் அதிகம் செலவு செய்றதில்லை. இயற்கையா உருவாகுற கறையான் அப்படியே கோழிகளுக்கு உணவாயிடுது. அதுபோக நாங்க தயாரிக்கிற தீவனத்தையும் கொஞ்சமா கொடுக்கிறோம். கோழிகளுக்குச் சீக்கு வந்தா கைவைத்தியம் பார்த்துக்குவோம். அதனால, எங்களுக்குப் பராமரிப்புச் செலவு பெருசா இல்லை. நாங்க நாப்பது கோழிகளோடதான் இங்க வந்தோம். இப்ப 230 கோழிகள் இருக்கு. பத்துக் கோழிகளுக்கு ஒரு சேவல்ங்கிற கணக்குல மொத்தம் 20 சேவல்களும் இருக்கு.

கறையான் உணவு

    • இது செம்மண் நிலம். இந்த மண்ணுக்கு இயல்பாகவே கறையான் அதிகமா உற்பத்தியாகும். இந்தக் கறையான் கோழிகளுக்கு ரொம்பப் பிடிச்ச உணவு. செம்மண் நிலங்கள்ல அதிகாலையில காய்ஞ்ச செடிகள்ல, குச்சிகள்ல கறையான் பிடிச்சு இருக்கும். அதனால நாங்க காலையில ஆறுமணிக்கு எங்க வேலியோட கதவைத் திறந்து வெச்சிடுவோம். கோழிகள் வெளியே போய் காடு முழுவதும் சுத்தி, காலால கிளறிக் கறையான்களைச் சாப்பிடும். கிட்டத்தட்ட ரெண்டு ஏக்கர் நிலம் முழுக்கக் கோழிகள் மேயும். காலை நேரத்துல மண்ணைக் காலால கிளறும்போது வெளியே வர்ற பூச்சி, புழுக்களையும் பிடிச்சு சாப்பிடும்.
    • கோழிகள் புல், இலைகளையும் கொத்தித் திங்கும். ஏழு மணிக்குத் தீவனத்தைக் கையில் எடுத்துக்கிட்டு ஒரு சத்தம் கொடுத்தாப் போதும். எல்லாக் கோழிகளும் ஓடி வந்திடும். அதுக்குப் பிறகு, கதவை அடைச்சிடுவோம். 230 கோழிகளுக்கும் சேர்த்துக் காலையில ஏழு கிலோ தீவனத்தைப் பிரிச்சு நாலஞ்சு இடங்கள்ல தட்டு வெச்சிடுவோம். அதை உண்டு வேலிக்குள் காலார அலையும். சில மரத்து நிழலில் ஓய்வெடுக்கும். சில மண் குளியல் எடுக்கும். தண்ணியை அங்கங்க வெச்சிருப்போம். தேவையானபோது குடிச்சுக்கும். முட்டை போடுற கோழிகள் கொட்டகைக்குள்ள முட்டை வெச்சிடும்.
    • ஒரு கோழி பத்துப் பதினஞ்சு முட்டைகள் இட்டாலும் அதுல ஒன்பது முட்டைகளைத்தான் அடை காக்கமுடியும். அதனால, முட்டைகள் வீணாக்காம இருக்குறதுக்காக இன்குபேட்டரைப் பயன்படுத்துறோம். அதைத் தவிர்த்து மற்ற எல்லாமே இங்க இயற்கை முறைதான்” என்ற பிரியா, நிறைவாக வருமானம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

Also Read : நாட்டுகோழி வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்கள்

நிறைவாக வருமானம்

  • நாங்க கறிக்காகக் கோழிகளை விற்பனை செய்றதில்ல. முட்டைகளைப் பொரிக்க வெச்சு, குஞ்சுகளாத்தான் கொடுக்குறோம். 500 முட்டைகள் பொரிக்குற திறன்ல இன்குபேட்டர் வெச்சிருக்கோம். எங்ககிட்ட எல்லா வயசுலேயும் கோழிகள் இருக்கு. சராசரியா எப்பவும் நூறு கோழிகள் தினமும் முட்டை வெச்சுட்டு இருக்கும். ஒரு கோழி மூலமா வருஷத்துக்கு 55 முட்டைகள்ல இருந்து 65 முட்டைகள் வரை கிடைக்கும். நூறு கோழிகள் மூலமா வருஷத்துக்கு 6 ஆயிரம் முட்டைகளுக்கு மேல கிடைக்குது. இன்குபேட்டர்ல பொரிக்கிறப்போ 5,500 குஞ்சுகளுக்குக் குறையாம பொரிஞ்சு வரும்
  • குஞ்சுகள்ல முதல் வாரத்துல கொஞ்சம் இழப்பு இருக்கும். அதையெல்லாம் கழிச்சா வருஷத்துக்கு எப்படியும் 5 ஆயிரம் குஞ்சுகள் கிடைச்சுடும். ஒரு நாள் வயசுள்ள குஞ்சு 60 ரூபாய்னு வித்துட்டு இருக்கோம். அதுமூலமா, வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய் கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்பு, மின்சாரக் கட்டணம்னு ஒரு லட்சம் ரூபாய் செலவு போக, ரெண்டு லட்சம் ரூபாய் லாபமா கிடைக்குது. இதுபோக, முயல்களையும் புறாக்களையும் வளர்க்குறோம். அது மூலமாவும் ஒரு வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. எங்க வீட்டுத்தேவைக்குத் தரமான நாட்டுக்கோழி முட்டைகளும் கோழிகளும் கிடைச்சுடுது. அதனால, இந்த வருமானத்துல நாங்க நிறைவா இருக்கோம்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

Also Read : நாட்டுக்கோழி வளர்ப்பில் நஷ்டத்தைத் தவிர்க்க நல்ல ஆலோசனைகள்

தண்ணீர் கவனம்

  • பண்ணையில் கோழிகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக, கோடைக்காலங்களில் தண்ணீர் அவசியம். தண்ணீருக்காகக் கோழிகளை அலைய விடக்கூடாது. போதுமான தண்ணீர் இல்லாவிட்டால் கோழிகளின் உடல் நலன் பாதிக்கப்படும். கோடைக் காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் வெப்ப அலர்ஜி நோய் ஏற்படும்.
  • இந்த நோய் தாக்கிய கோழிகள், வாயைத் திறந்து வைத்துக் கொண்டு, வித்தியாசமாகக் கத்தும். இறக்கையை அடித்துக்கொண்டே இருக்கும். திடீரென இறந்துவிடும். இந்த நோய் பாதித்த கோழிகளுக்கு, தண்ணீரில் குளுக்கோஸ் கலந்து கொடுக்க வேண்டும். நோய்த் தாக்குதல் அதிகமாக இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு அச்சு வெல்லத்தைக் கரைத்து, ஒரு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கக் கொடுக்கலாம்.

நாமே உற்பத்தி செய்யலாம் கறையானை!

கறையானில் உள்ள புரதச்சத்து, கோழிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. செம்மண் நிலங்களில் காய்ந்த குச்சிகள், கட்டைகள், மட்டைகள் ஆகியவற்றை ஆங்காங்கே கொட்டி வைத்து, அதன்மீது சிறிது தண்ணீர் தெளித்து வந்தால், அதில் கறையான்கள் உருவாகும். செம்மண் நிலம் இல்லாதவர்கள், பழைய பேப்பர்களைக் கிழித்து, ஒரு மண்பானையில் அடைத்து, அதில் லேசாகத் தண்ணீர் தெளித்து, பானையைக் கவிழ்த்து வைத்தால் போதும், ஓரிரு நாள்களில் கறையான்கள் உற்பத்தியாகிவிடும்.

மண் குளியல்

கோழிகள் மண்ணில் சிறிய குழி பறித்து, அதில் படுத்துக்கொண்டு இறக்கை முழுவதும் மண்ணில் படுமாறு புரளும். இதனால், கோழிகளின் உடல் மேலே உள்ள செல்கள் உதிர்ந்துவிடும். இது நாட்டுக்கோழிகளின் பழக்கம். இதற்காகப் பண்ணைகளில் ஆங்காங்கே சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி, அதில் அடுப்புச் சாம்பலைக் கொஞ்சம் கொட்டி வைத்தால் போதும். கோழிகள் அந்தக் குழிகளில் இறங்கி, மண் குளியல் எடுத்துக்கொள்ளும். இதன்மூலமாக செல், உண்ணிகள் போன்றவற்றால் கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response