நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் ‘புங்க்ரா’!(Method to Increase Ground Water)

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் 1847-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் உலகளவில் பிரபலமான நிறுவனம் ‘கார்ட்டியர்’. பெண்களுக்கான ஆடைகள், நகைகள், கைக்கடிகாரங்கள் எனப் பல்வேறு பொருள்களைத் தயாரித்து உலகளவில் சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிறுவனம், கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து சிறந்த பெண் தொழில் முனைவோர் மற்றும் சிறந்த பெண் முன்முயற்சியாளர்களுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

இப்போட்டியில் இந்த ஆண்டுக்கான கார்ட்டியன் பெண் முன்முயற்சியாளர் விருது (Cartier Women’s Initiative Award), இந்தியாவைச் சேர்ந்த திருப்தி ஜெயின் என்பவருக்குக் கிடைத்துள்ளது. 120 நாடுகளிலிருந்து 1,900 பெண்கள் கலந்துகொண்ட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பெண்களில் திருப்தி ஜெயினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக, இவருக்கு ஒரு லட்சம் டாலர் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வசிக்கும் திருப்தி ஜெயினைத் தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தோம். மிகுந்த உற்சாகத்துடன் நம்மிடம் பேசிய திருப்தி ஜெயின், “சுற்றுச்சூழல் துறையில் பொறியாளர் பட்டம் பெற்று இருபது ஆண்டுகளுக்குமேல் மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டுத் துறையில் பணிபுரிந்து வந்தேன். அப்போது விவசாயிகளின் பிரச்னைகளை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. விவசாயிகள் எட்டு மாதங்கள் தண்ணீர் இன்றித் தவிக்கின்றனர். ஆனால், மழை பெய்யும்போது வெள்ளம் பெருக்கெடுத்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வேலை தேடி ஆண்கள் நகரங்களுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். இதனால் விவசாயம் செய்யும் பெண்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்தனர். இது என்னை வெகுவாகப் பாதித்தது.

அதைத் தொடர்ந்து என் கணவருடன் கலந்தாலோசித்துப் பெண் விவசாயிகளைக் காப்பதற்காக, ‘புங்க்ரூ’ என்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினேன். புங்க்ரூ என்ற குஜராத்திச் சொல்லுக்குக் ‘குழாய்’ என்று அர்த்தம். குழாய்களைக் குறிப்பிட்ட முறையில் நிலத்தில் செருகிப் பூமிக்கடியில் மழை நீர் களஞ்சியங்களை ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதுதான் இத்தொழில்நுட்பம். இப்படிச் செய்ததால் நிலத்தடி நீர் உயர்ந்ததுடன் மண்ணில் உப்புத் தன்மையும் குறைந்தது. ஆண்டுக்கு இருபோகம் விவசாயமும் செய்ய முடிந்தது.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உதவியுடன் ஒவ்வொரு கிராமத்திலும் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஐந்து பெண்கள் கொண்ட சிறு குழுக்களாகப் பிரித்தேன். குழுவில் ஒரு பெண் தன் நிலத்தில் ஒரு பகுதியை, இந்தத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த இடம் ஒதுக்கித் தர வேண்டும். மற்ற பெண்கள் புங்க்ரூ தொழில்நுட்பத்துக்கான பணத்தையும் பராமரிப்புச் செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் விதி.

2002-ம் ஆண்டில் ஐந்து கிராமங்களில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். ஆண் விவசாயிகள் ஒத்துழைக்கவில்லை. தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே கொண்ட திட்டமாக இதை மாற்றி அமைத்தேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் 14 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் வறண்ட நிலத்தை விளைநிலமாக மாற்றிச் சாதனை படைத்துள்ளனர். மழை, பயிர் மற்றும் மண் வளம் உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்தில்கொண்டு அதற்கேற்ப பல்வேறு வடிவங்களில் இந்தப் புங்க்ரூ யூனிட்டைத் தயாரிக்கிறோம்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கென்யா, கானா, பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் எங்கள் தொழில்நுட்பமும் மகளிர் விவசாயக் குழுக்களும் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன” என்ற திருப்தி ஜெயின்,

“நவீன உத்தியைப் புகுத்தி, நடைமுறை சிக்கல்களைக் களைந்து விவசாயம் தழைக்கவும் பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவியதற்காகவும்தான் இந்தப் பரிசுத் தொகையை அளித்துக் கௌரவித்துள்ளது கார்ட்டியர் அமைப்பு. இந்தத் தொழில்நுட்பத்தை உலக அளவில் பிரபலப்படுத்தவும் பெண்களின் விவசாய அறிவு மற்றும் திறமை ஆகியவற்றுக்குச் சர்வதேச அரங்கில் உரிய அங்கீகாரம் பெற்றுத்தரவும் இந்தப் பரிசுத் தொகையைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்” என்றார் உற்சாகமாக.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.