இஞ்சி, சுக்கு, கடுக்காய் (Kadukkai, Ginger and dried ginger)

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’ – இது சித்தர்கள் வாக்கு.

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உள்ளது’ என்று கூறும் திருமூலர் அதை `அமுதம்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது, `தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்துக்கு ஒப்பானது’ என திருமூலர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ – கடுக்காய் நோய்
ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்
ஊட்டி உடல் தேற்றும் உவந்து‘ 
என்ற இன்னொரு மருத்துவப் பாடலும் கடுக்காயின் பெருமையைப் பறைசாற்றுகிறது.

கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன பழமொழியின்படி காலையில் இஞ்சிச்சாறு, பகலில் (மாலை) சுக்குக் காபி, இரவில் உறங்கப்போவதற்கு முன்னர் விதை நீக்கிய கடுக்காயைத் தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து அருந்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும். அதாவது மலச்சிக்கல் நீங்கும்; கபம் சமநிலைப்படும். இப்படி நோய்கள் நீங்குவதன் மூலம் கிழவனும் குமரனாகலாம் என்பதே அதன் பொருள். இதில் கடுக்காயின் பங்கு அதிகம்.

இந்தப் பழமொழியில் சொல்லப்பட்ட கல்பங்களில் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றில் கல்பங்கள் செய்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்; உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்படும் கல்பங்கள் ஆண்-பெண் உறவைப் பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்று ஒரே இருக்கையில் அமர்ந்து பணி செய்வதால், சிலர் ஆண்மைத்தன்மை குறைவதாகச் சொல்கிறார்கள். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து, குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும். காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம், மதிய உணவு உண்டபிறகு சுக்கு கல்பம், இரவில் கடுக்காய் கல்பம் என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், அடுத்த சில மாதங்களில் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த 48 நாள்களில் கருமுட்டை உடையும் நாள்களில் மட்டும் தம்பதிகள் சேரலாம். மற்றபடி ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளைச் சாப்பிடாமல் கம்பு, கேழ்வரகு, வெங்காயம், முருங்கைப்பூ போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.

இஞ்சி கல்பம்

இஞ்சி கல்பம் செய்ய அரை கிலோ இஞ்சியும் கால் லிட்டர் சுத்தமான தேனும் தேவை. இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி மையாக அரைக்கவும். அப்படி அரைத்த விழுதைப் பிழிந்து, சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிப் படியவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தெளிந்த நீரை மட்டும் வடிகட்டிக்கொள்ள வேண்டும். பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும் வெள்ளை நிற நச்சுப்பொருளை அகற்றிவிட வேண்டும்.

தெளிந்த இஞ்சிச் சாற்றில் நன்றாகப் பழுத்த இரும்புக்கம்பியை ஒரு நிமிடம் முக்கி எடுக்க வேண்டும். மீண்டும் வடிகட்டி அந்த இஞ்சிச் சாற்றுடன் தேனைக் கலந்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்துவிட வேண்டும். இதுதான் நச்சு நீக்கிய இஞ்சி கல்பம். இதில் இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீருடன் கலந்து அதிகாலையில் குடிக்க வேண்டும். (ஃபிரிட்ஜில் வைத்திருப்பதால் தேவையான கல்பத்தை மட்டும் வெளியே எடுத்துவைத்து பயன்படுத்தவும்.)

இஞ்சி கல்பம், பித்தத்தைச் சமப்படுத்தும். செரிமானக் கோளாறுகள், வயிற்றுக்கோளாறுகள், தலை கிறுகிறுப்பு போன்றவற்றைப் போக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். மாரடைப்பு மற்றும் இதயநோய்களைக் கட்டுப்படுத்தும்.

சுக்கு கல்பம்

சுக்கு கல்பம் செய்ய கால் கிலோ சுக்கு, 25 கிராம் சுண்ணாம்பு, ஒரு லிட்டர் தண்ணீர் தேவை. தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைத்து, அதில் சுக்கை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு வெயிலில் நன்றாக உலரவைக்க வேண்டும். சுக்கின் மீது படிந்திருக்கும் சுண்ணாம்பை அகற்றிவிட்டு, அதைச் சிறு சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் பொடியாக அரைத்து, பாட்டிலில் போட்டுவைக்கவும். இதுதான் சுக்கு கல்பம். மதிய உணவுக்குப் பிறகு, இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பருகலாம். தேவைப்பட்டால் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துப் பருகலாம்.

இது சுரப்பிகளைச் சமநிலைப்படுத்தும்; வாய்வுத் தொல்லைகளைப் போக்கும். வாதம் தொடர்பான நோய்களையும் போக்கும்.

கடுக்காய் கல்பம்

கடுக்காய் கல்பம் செய்ய அரை கிலோ (மஞ்சள் நிற) கடுக்காய், அரை லிட்டர் பசும்பால் தேவை. பாலில் கடுக்காயைப் போட்டு, அடுப்பில்வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி, கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும். மூன்று நாள்கள் உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும். கடுக்காயின் விதை நச்சு. ஆனால், அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும்.
இந்தக் கடுக்காய் கல்பத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப்போல அல்லாமல் கடுக்காய் கல்பத்தை மட்டும் பல ஆண்டுகளுக்குச் சாப்பிடலாம்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response