மண்புழு உரம் தயாரிக்கும் முறை (Vermi Compost)

மண்புழுதான் விவசாயிகளுக்காக இரவு பகல் என 24 மணி நேரமும் உழைக்கும் உயிரினம்அதனை நாம் பக்குவமாகப் பயன்படுத்தினால் பலமடங்கு பயன் அடையலாம்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறை

உரம் தயாரிப்பதற்கு ஏற்ற அளவு தொட்டி கட்டி அதில் ஒரு அடி உயரம் வரைக்கும் தேங்காய் மட்டைகள் அடுக்கப்படுகிறது. ஒரு அடி வரைக்கும் பண்ணைக்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், தென்னை நார்க் கழிவுகளில் ஏதாவது மக்கும் கழிவுகளை ஒன்றும், பின்பு அரையடி அளவுக்கு மாட்டுச் சாணமும் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு தொட்டியளவுக்கேற்றவாறு மாற்றி, மாற்றி மேலிருந்து அரையடியளவு இடைவெளி விட்டு கழிவுகள் வைக்கப்படுகிறது. அதன் மேல் சணல் சாக்கு கொண்டு மூடப்படுகிறது.

வெப்பநிலையைப் பராமரிப்பது என்பது மிகவும் அவசியமாகும். முதல் இருபது நாட்கள் வரைக்கும், 60 சதவீதம் இருக்கும் அளவுக்கு சாக்கு மேல் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. அதன்பின்பு ஒரு சதுர மீட்டருக்கு, ஒரு கிலோ வீதம் மண்புழுக்கள் அதில் விடப்படுகிறது. இதில் சராசரியாக ஆயிரம் மண்புழுக்கள் வரைக்கும் காணப்படும். இவ்வாறு விடப்படும் மண்புழுக்கள் ஒரு வாரத்திலிருந்து,10 நாட்களுக்குள் அனைத்து கழிவுகளையும் செரித்து, முழுமையான சத்துக்கள் உடைய மண்புழு உரத்தை உற்பத்தி செய்கிறது. தொட்டியில் வைக்கப்படும் கழிவுகளுக்கேற்றவாறு பாதியளவு மண்புழு உரம் கிடைக்கிறது.

மண்புழுக்களின் உணவு

மண்புழுக்கள் நாள்தோறும் உடல் எடையில் பாதியளவு உணவினை உட்கொள்ளும். சில நேரங்களில் மண்புழுக்கள் தமது உடல் எடையைவிட அதிகளவு உணவு உட்கொள்ளும். மண்புழுக்கள் பெரும்பாலும் மாட்டுச் சாணத்தையும் தாவர மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் கரிமப் பொருட்களையும் உணவாக உட்கொள்ளும்.

மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான கழிவுகளைத் தேர்ந்தெடுத்தல்

மாட்டுச் சாணம், பண்ணைக் கழிவுகள், பயிர்க்கழிவுகள், காய்கறிச் சந்தைக் கழிவுகள், பூ விற்பனை கழிவுகள், வேளாண் தொழிற்சாலைக் கழிவுகள், பழக்கடைக் கழிவுகள் மற்றும் அனைத்து மட்கும் கழிவுகளும் மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மாட்டுச் சாணத்தை சூரிய ஒளியில் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். மற்ற வகைக் கழிவுப் பொருட்களை மாட்டுச் சாணத்துடன் சேர்த்து 20 நாட்கள் நொதிக்கச் செய்ய வேண்டும்.

மண்புழுக்களைச் சேகரித்தல்

மண்புழு உரம் தயாரான பின்பு மண்புழுக்களை மண்புழுப் படுக்கையில் இருந்து பிரித்தெடுக்க வேண்டும். இதற்கு மண்புழு உரத்தைச் சேகரிக்கும் முன் புதிய மாட்டுச் சாணத்தை உருண்டையாக உருட்டி மண்புழுப்படுக்கையில் 5 அல்லது 6 இடங்களில் வைக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்துச் சாண உருண்டையை எடுத்துப் பார்த்தால் அதில் மண்புழுக்கள் ஒட்டி இருக்கும். இச்சாண உருண்டையை ஒரு தண்ணீர் வாளியில் கரைத்து மண்புழுக்களைத் தனியே பிரித்தெடுத்து அடுத்த முறைக்குப் பயன்படுத்தலாம் அல்லது விற்பனை செய்யலாம். மண்புழுக்களை மண்புழுப் படுக்கையில் இருந்து பின்வரும் மூன்று முறைகளில் பிரித்தெடுக்கலாம்.

கைகளினால் பிரித்தெடுத்தல்

சிறிய அளவில் மண்புழு உரம் தயாரிக்கும் இடங்களிலும் மண்புழுக்களை விற்பனை செய்யும் இடங்களிலும் இம்முறையில் மண்புழுக்கள் உள்ள குவியலை ஒரு சமதளத்தின் மீது பரப்பி அதன் மீது ஒளியைச் செலுத்தினால் அவை ஒளியை விட்டு விலகி அடியில் செல்லும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் மேலே உள்ள மண்புழு உரத்தை நீக்கி விட்டு மண்புழுக்களைச் சேகரிக்கலாம்.

மண்புழுக்களை மேல்நோக்கி நகரச் செய்யும் முறை

இம்முறையில் வலையிடப்பட்ட பெட்டியானது மண்புழுப்படுக்கையின் மேல் நேரடியாக வைக்கப்படுகிறது. இப்பெட்டியில் ஈரமான கரித்துகளின் மேல் மண்புழுக்களுக்குத் தேவையான உணவுத் துகள்களான புதிய மாட்டுச் சாணம், கோழித் தீவனம் போன்றவற்றைத் தூவி விட வேண்டும். இதனால் மண்புழுக்கள் ஈர்க்கப்பட்டு மண்புழுப் படுக்கையிலிருந்து நேரடியாக மேல் நோக்கி நகர்ந்து வலையின் வழியே பெட்டியை சென்றடைகின்றன. ஒரு குறிப்பிட்ட அளவு மண்புழுக்கள் பெட்டியினுள் நிரம்பியவுடன் பெட்டியை மண்புழுப் படுக்கையில் வேறு இடத்தில் வைத்து மண்புழுக்களைச் சேகரிக்கலாம்.

சேகரிக்கப்பட்ட மண்புழு உரத்தைக் குளிர்ச்சியான இருட்டறையில் வைக்க வேண்டும். அதில் 40 விழுக்காடு ஈரப்பதம் இருக்க வேண்டும். சூரிய ஒளி படாதவாறு பாதுகாக்க வேண்டும். சூரிய ஒளி படும்போது ஈரப்பதம் மற்றும் சத்துக்கள் குறைந்துவிடும். எனவே மண்புழு உரத்தை ஒரு அறையில் திறந்த நிலையில் குவித்து வைக்க வேண்டும்.

விற்பனை செய்யும்போது மட்டும் பைகளில் அடைத்து விற்பனை செய்யலாம். மண்புழு உரத்தைத் திறந்த வெளியில் சேமித்து வைக்கும்போது அதன் மீது அடிக்கடி தண்ணீரைத் தெளிப்பதன் மூலம் ஈரப்பதத்தை நிலை நிறுத்தி நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை வளரச் செய்யலாம். 40 விழுக்காடு ஈரப்பதம் கொண்ட மண்புழு உரத்தினைச் சத்துக்கள் வீணாகாமல் ஒரு ஆண்டு வரை சேமித்து வைக்கலாம்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.