மண்ணை வளமாக்கும் பல தானிய விதைப்பு (Mixed Crop Cultivation)

மண்ணை வளமாக்க பல தானிய பயிர்களை மன்னியில் விதைத்து அது வளர்ந்து பூ பூத்த பிறகு மடக்கி உழ வேண்டும். பல தானிய பயிர்களில் இருக்கும் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள நுண்ணூட்டங்கள் மண்ணில் சேர்ந்து மண்ணை வளமாக்குகிறது. இந்த  நுண்ணூட்டங்கள் மக்கியபின் எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. பல விதமான செடிகளின் வேர்களில் உருவாகும் நுண்ணுருயிர்களிலிருந்து நாம் பயிரிடப்போகும் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து கொடுப்பதற்கு உதவி செய்கிறது.

இயற்கை விவசாயத்தில் அடி எடுத்து வைக்கும் விவசாயிகள் செய்ய வேண்டிய முதல் காரியம் பல தானிய விதைப்பு முறை. இரசாயன உரங்களின் தொடர் பயன்பாட்டால் வளமிழந்து போன நிலத்தை, 200 நாட்களில் வளம்மிக்க நிலமாக மாற்றலாம். இதைத்தான் வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்தார். 1 ஏக்கர் நிலத்திற்கு பல தானிய விதைப்பு பற்றி காண்போம்.

கீழ்க்காணும் விதைகளை எல்லாம் கலந்து ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வரை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பல தானிய விதைப்பு இரண்டு முறைகளில் செய்யலாம்.

பல தானிய விதைப்பு 1

சிறு தானிய வகை

நாட்டுச் சோளம் 1 கிலோ
நாட்டு கம்பு ½ கிலோ
தினை ¼ கிலோ
சாமை ¼ கிலோ
குதிரைவாலி ¼ கிலோ

பயிறு வகை

உளுந்து 1 கிலோ
பாசி பயறு 1 கிலோ
தட்டைப் பயறு 1 கிலோ
கொண்டைக் கடலை 2 கிலோ
துவரை 1 கிலோ
கொத்தவரை ½ கிலோ
நரிப்பயறு ½ கிலோ

எண்ணெய் வித்துக்கள்

எள் ½ கிலோ
நிலக்கடலை 2 கிலோ
சூரியகாந்தி 2 கிலோ
சோயா பீன்ஸ் 2 கிலோ
ஆமணக்கு 2 கிலோ

மசால் வகை

கொத்தமல்லி 1 கிலோ
கடுகு ½ கிலோ
சோம்பு ¼ கிலோ
வெந்தயம் ¼ கிலோ

தழைச்சத்து

சணப்பு 2 கிலோ
தக்கப்பூடு 2 கிலோ
காணம் 1 கிலோ
நரிப்பயறு ½ கிலோ
வேலிமசால் ¼ கிலோ
சித்தகத்தி ½ கிலோ
அகத்தி ½ கிலோ
கொளுஞ்சி 1 கிலோ

இதரவை

புளிச்ச கீரை 100 கிராம்
தண்டு கீரை 50 கிராம்
அரகீரை 50 கிராம்

கவனிக்க வேண்டியவை

∙ பெரிய விதைகளை சிறிது சிறிதாக கலந்து கலக்கி பின்பு மொத்தமாக ஒரு முறை கலக்க வேண்டும்
∙ விதைக்கும் போது பெரிய விதைகளை ஒன்றாக விதைத்து பின்பு சிறிய விதைகளை மணல் அல்லது சாம்பல் கலந்து விதைக்க வேண்டும்
∙ ஏக்கருக்கு 25 கிலோ பலதானியமும் அதற்கு மேல் தங்களிடம் உள்ள பழைய விதைகளையும் சேர்த்து விதைக்கலாம்.
மண் வளம் குறைந்து காணப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 கிலோ வரையிலும் விதைக்கலாம்.

மேலும் படிக்க : விவசாயியையும் பயிரையும் காக்கும் உயிர்வேலி(Fencing)

பல தானிய விதைப்பு 2

ஆரம்பத்தில் ரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறுவோர் கட்டாயம் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். பல வருடங்கள் ரசாயன விவசாயம் செய்ததால் மண்ணில் நுண்ணுயிர்கள் மடிந்து நுண்ணூட்ட சத்து குறைந்து இருக்கும். நுண்ணுயிர்களையும், நுண்ணூட்டங்களையும் மீட்டெடுக்க இந்த பல தானிய விதைப்பு பயன்படும். ஏனென்றால் பலதானியங்களின் வேர்களில் பலவகையான நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. மேலும் அதை மடக்கி உழும் போது அதன் வேர், தண்டு, இலைகளில் உள்ள நுண்ணுட்டச் சத்துக்கள் நிலத்திற்கு கிடைக்கின்றன. பலதானியங்களை மூன்று முறை வெவ்வேறு காலங்களில் விதைத்து மடக்கி உழவு செய்ய வேண்டும். முதல் முறை விதைத்து 21வது நாளிலும், இரண்டாம் முறை விதைத்து 42வது நாளிலும், மூன்றாவது முறை விதைத்து 63வது நாளிலும் மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு 21, 42, 63 ஆகிய காலங்களில் மடக்கி உழவு செய்யும் போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான நுண்ணூட்டங்கள் மண்ணுக்கு கிடைக்கின்றன.

முதல் விதைப்பு

∙ ஏற்கனவே குறிப்பிட்ட அளவுகளில் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ வரை பலதானியம் விதைக்க வேண்டும்.
∙ 21ம் நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும்

இரண்டாவது விதைப்பு

∙ முதல் விதைப்பு மடக்கி உழவு செய்யும் அன்றே இரண்டாவது விதைப்பு விதைக்க வேண்டும்
∙ விதைத்த 42 வது நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும்

மூன்றாவது விதைப்பு

∙ இரண்டாவது விதைப்பு மடக்கி உழவு செய்யும் அன்றே மூன்றாவது விதைப்பு விதைக்க வேண்டும்
∙ விதைத்த 63 வது நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும

நெல் சாகுபடிக்கு ஒருமுறை பல தானிய விதைப்பு

நெல் சாகுபடி செய்யும் நிலத்தில் ஏக்கருக்கு 20 கிலோ பல தானிய விதைகளை விதைப்பு செய்து 45ம் நாளில் பூவெடுத்தும் மடக்கி உழவு செய்ய வேண்டும். 10 நாட்கள் இடைவெளி கொடுத்து தண்ணீர் கட்டி சேற்று உழவு செய்ய வேண்டும். இப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பல தானிய விதைப்பு செய்யும் போது நல்ல பலன் கிடைக்கிறது.

About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.