தென்னையைச் செழிக்க வைக்கும் மூடாக்கு மந்திரம்(Mulching for Coconut Trees)

சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர்ப் பற்றாக்குறையால் எங்கள் பகுதியில் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டது. ஆனால், குறைந்த தண்ணீரிலும் எங்கள் தென்னை சிறப்பான மகசூலைக் கொடுத்து வருகிறது. அதற்குக் காரணம் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பம்தான்.

மழை நீர் சேகரிக்கும் மண்புழுக்கள்

மூடாக்கு, ஜீவாமிர்தம் இவை இரண்டும்தான் தென்னையைச் செழிக்க வைக்கின்றன. மரத்திலிருந்து விழும் தென்னை மட்டைகளில், அடிமட்டையை மட்டும் வெளியே எடுத்துவிட்டு, மற்றவற்றை மண் தெரியாத அளவுக்கு நிலம் முழுக்க போர்வைபோல மூடாக்கு போட்டுவிட வேண்டும். இதனால் மழைக்காலத்தில் மழைநீர் வெளியே போகாமல், நிலத்தடி நீராக கீழே இறங்குவதால் கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் கூடுகிறது. ஜீவாமிர்தத்தைப் பயன்படுத்தும்போது, மண்புழுக்கள் அதிகம் உருவாகி, மண்ணை உழவு செய்து சத்துள்ள மண்ணாக மாற்றுவதால் மகசூல் அதிகரிக்கிறது. நிலத்தில் இயற்கையிலேயே உருவாகும் மண்புழுக்கள், 15 அடி ஆழம் வரை கீழே மேலே சென்று வருவதால், அந்த ஆழம் வரை மண் பொலபொலப்பாகி காற்றோட்டம் கிடைப்பதுடன், அந்த நுண்ணியத் துளைகள் வழியாகவும் மழை நீர் சேமிக்கப்படும்.

மகத்தான சேவை செய்யும் மட்குகள்

தென்னை மட்டைகளை மூடாக்கு போடும்போது, பாசன நீர் விரைவில் ஆவியாவதில்லை. தென்னைக்கு இடையில் வளரும் களைகளை வளரவிட்டு, அவை வளர்ந்ததும், மீண்டும் அதன் மேல் தென்னை மட்டைகளைக் கொண்டு மூடி, மூடாக்குப் போடவேண்டும். இந்தக் களைகள் மட்கும்போது நிலத்து மேல்மண்ணில் மட்கு உருவாகிறது. இதுதான் கார்பன், நைட்ரஜன் சத்துக்களைக் கொடுக்கிறது. இதுமட்டுமல்லாமல், இரவு நேரத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை இந்த மட்குகள் உறிஞ்சுவதன் மூலமாக நீரைச் சேமிக்கின்றன. ஒவ்வொரு கிலோ மட்கும் ஆறு லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும். ஒரு கிலோ மட்குக்கு ஆறு லிட்டர் என்றால், ஒட்டுமொத்த வயலில் இருக்கும் மட்குகள், எத்தனை லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும் என்பதை கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். அதிகாலையில் வயலுக்குப் போகும்போது, மண்ணை எடுத்துப் பார்த்தால் ஈரமாக இருக்கும். கையில் எடுத்து கொழுக்கட்டை செய்வதுபோல உருண்டை பிடித்தால், உருண்டையாக வரும். இந்தப் பதத்துக்கு காரணம், இரவுக் காற்றில் இருந்த ஈரப்பத்ததை உறிஞ்சிக் கொள்வதுதான்.

பாசன முறையில் மாற்றம் தேவை

இப்படி மூடாக்கு அமைப்பதால், வழக்கமாகத் தென்னைக்குக் கொடுக்கும் தண்ணீரில், பாதியளவு கொடுத்தாலே போதுமானது. மூடாக்கினால் உண்டாகும் மழை நீர்ச் சேமிப்பு, மட்குகள் காற்றில் உறியும் தண்ணீர் இவை இரண்டையும் கொண்டு எவ்வளவு வறட்சியான காலத்திலும் தென்னைகளைக் காப்பாற்றலாம். தென்னைக்கு சொட்டு நீர்ப்பாசனம்தான் சிறந்தது. பலர் தென்னையின் வேர்களில் நீர் பாய்ச்சுகின்றனர் இது தவறு. மரத்திலிருந்து மூன்றடி தள்ளி, தென்னையின் வெளிவட்டத்தில்தான் பாசனம் செய்ய வேண்டும். ஒரு மரத்தின் நிழல் மதியம் 12 மணிக்கு வெயிலில் எங்கு விழுகிறதோ, அங்குதான் தண்ணீர் உறிஞ்சும் சல்லிவேர்கள் இருக்கும். அதனால், அங்குதான் பாசனம் செய்ய வேண்டும். சல்லிவேர்கள் இருக்கும் இடத்தில், தண்ணீர் பாய்ச்சும்போது, 90% தண்ணீர் மரத்துக்குப் போய் சேர்ந்து விடுகிறது.

பாம்புகள் பயம் வேண்டாம்

மூடாக்கு, நீர்த் தேவையைக் குறைப்பது போல, ஜீவாமிர்தம் சிறந்த மகசூல் கிடைக்க உதவியாக இருக்கும். பாசனநீருடன் மாதம் ஒருமுறை ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட்டாலே போதும். வேறு இடுபொருட்கள் தேவையில்லை. மூடாக்கு, ஜீவாமிர்தம் இரண்டும் இருந்தாலே வறட்சியைக் கண்டு மிரளாமல் தென்னையில் நல்ல வருமானம் பார்க்கலாம்”.

”தென்னை மட்டைகளை தோப்பு முழுக்க போடும்போது, பாம்புகள் தொல்லை இருக்காதா?  நிச்சயம் பாம்பு இருக்கத்தான் செய்யும் ஆனால், அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. அதேசமயம், மூடாக்கு போடுகிறேன் என, மட்டைகளை மலைபோல் குவிக்கக்கூடாது. மண்ணை மறைக்கும் அளவுக்கு மட்டும் ஒரு அடுக்கு போடவேண்டும். அவை மட்கிய பிறகு, அடுத்த அடுக்கு போடவேண்டும். இப்படிச் செய்யும்போது, பாம்புகள் இருந்தாலும் நம் கண்களுக்குத் தெரிந்துவிடும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response