ஆமணக்கு கரைசல் (Castor Solution For Pest Control)

ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமைசெய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது.

கட்டுப்படும் பூச்சிகள்

ஆமணக்கு கரைசல்

  1. வெள்ளைக் கிண்டு (White grub) கரும்பு, -வேர்கடலை
  2. தண்டு அந்து (Stem Weevil) -பருத்தி
  3. காண்டாமிருக வண்டு (Rhenoceros beetle) -தென்னை

பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி

பூச்சிகளின் பொதுவான வாழ்க்கை சுழற்சியின்படியே இப்பூச்சிகளும் முட்டை, லார்வா, கூட்டுப்புழு, வளர்ந்த பூச்சி என வாழ்க்கை சுழற்சியை கொண்டதாக உள்ளது. பொதுவாக இவ்வாழ்க்கை சுழற்சி ஒரு ஆண்டில் பூர்த்தியாகின்றது.

முதல் கோடை மழையில் (ஏப்ரல், மே, ஜுன்) கூட்டுப்புழு வெடித்து அதில் வண்டுகள் வெளிவருகின்றன. வெளிவந்த பூச்சிகள் வேம்பு, இலந்தை, பீயன், புளி போன்ற வெவ்வேறு மரங்களின் இலை தழைகளை உண்டு நோயெதிர்ப்பு திறனைப்பெற்று இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன. முட்டையிடும் தருணத்தில் கரும்பின் அடிக்கட்டையில் முட்டையிடுகின்றன. இரண்டு மாதத்துக்குள் சாதகமான காலத்தில் முட்டைகள் பொறித்து இளம் லார்வாக்கள் மண்ணை நோக்கி நகர்கின்றன.

மண்ணில் லார்வாக்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்தபின், முதிர்ந்த லார்வாக்கள் C வடிவில் வளைந்து இருக்கும். இந்த நிலையில் தான் கரும்புக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. நன்கு உண்டு முழுமையாக வளர்ந்த லார்வாக்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூட்டுப்புழுவாக மாறி உறக்கநிலைக்குச் செல்கிறது. கூட்டுப்புழுக்கள் வண்டுகளாக மாறுவதற்கு தக்க காலம் வரும் வரை காத்திருக்கிறது, மழைக்காலம் தொடங்கியபின், மழை நீர் கூட்டுப்புழுவில் பட்ட உடன் அதன் உறக்க நிலை முடிந்து இளம் வண்டுகளாக வெளிவருகிறது.

கரைசல் செய்முறை

1 ஏக்கருக்கு 5 கிலோ ஆமணக்கு விதைகள் தேவைப்படும். 5 லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானைகள் 5 வாங்கிக்கொள்ள வேண்டும். ஆமணக்கு விதைகளை நன்கு இடித்து பானைக்கு 1 கிலோ வீதம் போட்டு அதில் 4 லிட்டர் தண்ணீர் ஊற்றவேண்டும். பானை முழுவதும் தண்ணீர் விடாமல் சிறிது காலியாக இருக்க வேண்டும்.

நிலத்தின் நான்கு மூலைகளில் 4 பானைகள் மற்றும் நடுவில் 1 பானை என மொத்தம் 5 பானைகளை கழுத்து மட்டத்தில் நிலத்தில் குழிதோண்டி வைக்கவேண்டும். பானைக்கு மேல் சூரிய ஒளி படும்படி இருக்க வேண்டும். 10 நாட்களுக்கு நண்பகலில் தினம் ஒரு முறை கலக்கி விடவேண்டும்.

பானை திறந்திருக்க வேண்டும், பானையைச் சுற்றி மூடாக்கு போடவேண்டும். இத்தகைய ஏற்பாட்டை முதல் கோடைமழை வருவதற்கு 20 நாட்கள் முன்னமேயே செய்துவிட வேண்டும். 3 வருடத்திற்கு இதை பயன்படுத்தலாம். வெயிலில் கரைசல் உலர்ந்துவிடாமல் காய்வதற்கு முன்பே தண்ணீர் அல்லது கரைசலை ஊற்றிவிடவேண்டும்.

ஆமணக்கு கரைசலின் வாசனையை நுகர்ந்து மேற்கண்டவகைப் பூச்சிகள் பானையில் வந்து விழும். இறக்கைகளில் எண்ணை ஒட்டிக்கொள்வதால் பூச்சிகளால் பறக்க இயலாமல் சிக்கிக்கொண்டு இறந்துவிடும். அவைகளை வாரம் ஒரு முறை காப்பி ஜல்லடை வைத்து நீக்கி அழித்துவிடவேண்டும்.

Pheromones (பெரமோன்கள்)

இனப்பெருக்க காலத்திலேயே அதிகமாக இந்த பூச்சிகள் வெளியே வருகின்றன. காற்றடிக்கும் எதிர்திசையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலிருந்து பூச்சிகள் கவரப்படுகின்றன. ஒவ்வொரு வகை பெண் பூச்சிகளும் இனப்பெருக்க காலங்களில் pheromone எனப்படும் வாசனையுள்ள திரவங்களை சுரக்கின்றன, ஆமணக்கு எண்ணையின் மணமும், பூச்சிகள் சுரக்கும் Pheromone மணமும் ஏறக்குறைய ஒன்றுபோல் உள்ளதால் பூச்சிகள் கவரப்பட்டு நாடிவருகின்றன.

பொதுவாக மலர்நாடும் பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், தேனீ போன்றவை இத்தகைய மணத்தினால் கவரப்பட்டு பானையில் விழுவதில்லை. மேற்கண்ட பொருட்களை வாங்குவதற்கு 300 ரூபாய் வரையே செலவாகும், கரும்பு சாகுபடியில் மோசமான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய white grub கட்டுப்படுத்தப் படுவதால் மகசூல் அதிகரிக்கிறது.

“ஏனுங்க பாத்தீங்ளா… ரசாயன மருந்த நருவசா அடிச்சுப்போட்டு, பொறவு நல்லது செய்யுற பூச்சிக அல்லாத்தையும் ஒட்டுக்க கொன்னுபோடுறதுக்கு பதிலா, இந்த ஆமணக்கு கரைசல் நல்ல மாத்து வழிங்க! பூச்சிகளும் இருக்காது ரசாயனத்தால மண்ணும் மலடாகம இருக்கும்.” இத்தகைய எளிய விவசாய முறைகளை அனைத்து விவசாயிகளும் கற்றறிவதுடன், மற்ற விவசாயிகளுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் முட்டுவழிச் செலவுகள் குறைவதோடு இயற்கைவழி விவசாயமும் செழிக்கும்.

Source : isha.sadhguru

About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.