வெங்காய சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு(Onion)

வெங்காயம் நடவு செய்த 25 நாட்களில் மேல் இலை பழுத்து வளர்ச்சி குன்றி காணப்படும். இதனால் 40 முதல் 50 சதம் மகசூல் இழப்பு ஏற்படும். இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வெங்காயம் நடவு செய்வதற்கு முன்னாடி ஒரு கிலோ வெங்காயத்திற்கு 5 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை கலந்து விதை நேர்த்தி செய்து நடவும். அவ்வாறு செய்ய முடியவில்லை எனில் வெங்காயம் நடவு செய்தவுடன் 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 50 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்து வயல் ஈரம் இருக்கும் பொழுது தூவி விடவேண்டும்

வெங்காயத்தில் நுனிக் கருகல் நோய் தென்பட்டால் சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து செடி நன்கு நனையுமாறு காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவும். அவ்வாறு செய்ய முடியவில்லை எனில் வெங்காயம் நடவு செய்தவுடன் சூடோமோனஸ் 2 கிலோ, 50 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்து வயல் ஈரம் இருக்கும்பொழுது தூவி விடவேண்டும்.

வெங்காயத்தில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு

வெங்காயத்தில் இளம் நாற்றுக்களில் நுனிப்பகுதியிலிருந்து காய்ந்து காணப்படும். இவ்வகை நாற்றுக்கள் வீரியம் குறைந்து இருக்கும். மகசூல் குறையும் இவை போரான் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. இதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 முதல் 4 கிராம் போராக்ஸ். ஒட்டுபசை சேர்த்து தெளித்து இக்குறைபாட்டை சரிசெய்யலாம்.

வெங்காயத்தில் விதை உற்பத்தி

பொதுவாக வெங்காயம் நமது பகுதியில் காய்மூலம் நடவு செய்து உற்பத்தி செய்வதால் வெங்காயம் சேமித்து வைப்பதால் அதில் பூஞ்சான்கள் உயிர் வாழ்கின்றன.நடவு செய்யும்போது அழுகி விவசாயிகளுக்கு பெரும்சேதத்தை உண்டாக்குகிறது. அத்துடன் விதைகாய் ஒரு ஏக்கருக்கு 300 கிலோ வரை தேவைப்படுகின்றது. அதிகமாக விலை விற்கும் காலத்தில் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. கோ 5 எனும் வெங்காய விதை ஒரு ஏக்கருக்கு 1 கிலோ போதுமானது. 2 லிருந்து 3 ஆயிரம் வரை விலை இருக்கும். நாத்து போட்டு நடவு செய்தால் நாமே விதையை உற்பத்தி செய்து கொள்ளலாம். காய் பெரியதாக இருக்கும். ஒரு ஏக்கருக்கு 7 டன் வரை மகசூல் கிடைக்கும். நாற்றை 40 நாள் எடுத்து நடவு செய்தால் 90 நாளில் காய் வந்துவிடும். பூஞ்சையின் பிரச்சினை இருக்காது. விதை மூலம் பயிர் செய்யும் விவசாயம் இலாபமே.

வெங்காய விதையை நாற்று போட்டு நடவு செய்தால் காய் எடுக்கலாம். வெங்காயமாக நடவு செய்தால் விதை எடுக்கலாம்.

ரகம்- ஒட்டு ரகம் 

பட்டம் – வைகாசி, புரட்டாசி, மார்கழி

விதையளவு – ஒட்டு ரகம் 500 கிலோ. கோ -5 விதையாக இருந்தால் ஒரு கிலோ

நிலம் தயாரித்தல்

நான்கு உழவு போடவேண்டும். கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு ஜிப்சம் 200 கிலோ, தொழுஉரம் 5 டன் போட வேண்டும். பார் அமைப்பு 1½ அடி அளவுள்ள பார் கரை இருக்க வேண்டும்.

விதைநேர்த்தி முறை

2கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா, 2 கிலோ வேம், 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 10 லிட்டர் நன்கு ஆறிய அரிசி வடிகஞ்சியுடன் கலந்து ஒரு ஏக்கருக்குத் தேவையான சிறிய வெங்காயத்தை நனைத்து நடவு செய்ய வேண்டும்.

விதை நடவு 

  1. செ.மீ இடைவெளியில் கரையின் இரு புறத்திலும் நட வேண்டும்.

நீர் நிர்வாகம் 

நடவு தண்ணீர் மற்றும் 3ம் நாள் உயிர் தண்ணீர் விடவேண்டும். பிறகு 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும். அறுவடைக்கு 15 தினங்களுக்கு முன்னால் தண்ணீரின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.

உயிர் உரம்

2கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா, 2 கிலோ வேம் 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ பிவேரியா ஆகியவற்றை 100 தொழுவுரத்துடன் கலந்து ஒரு வாரம் வரை வைத்திருந்து வயலில் ஈரம் இருக்கும்பொழுது போடவேண்டும.

வளர்ச்சி ஊக்கி 

பயிர் நடவில் இருந்து 35ம் நாள், 50ம் நாள் மாலை வேளையில் வளர்ச்சி ஊக்கி ஏதாவது ஒன்றை தெளித்து மகசூலை அதிகரிக்கலாம். பஞ்சகவ்யா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். செடி வளர்ச்சி சுமாராக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் தெளித்து செடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

செடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் மல்டிகே ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் தெளித்து செடியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூலை அதிகப்படுத்தலாம்.

நோய் கட்டுப்பாடு

வேரழுகல் நோய் அறிகுறி

வயலில் ஆங்காங்கே தூர்கள் காய்ந்து காணப்படும். பாதிக்கப்பட்ட வெங்காயத்தை பிடுங்கிப்பார்த்தால் வேர் அழுகி காணப்படும்.

கட்டுப்படுத்தும்  முறை

3 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி என்ற பூஞ்சான மருந்தினை மண்ணில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

நுனிகருகல் நோய் அறிகுறி

இலையின் அடிப்பாகத்தில் பச்சை நிற சிறிய பேன்கள் தென்படும். வெங்காயப் பயிரின் நுனி கருகி இளம்மஞ்சள் நிறமாக இருக்கும். ஆரம்ப காலத்திலேயே இந்நோயை கட்டுப்படுத்தாவிட்டால் வயல் முழுவதும் பரவி வெங்காயம் வைக்காமல் நின்றுவிடும்.

கட்டுப்படுத்தும் முறை

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் சூடோமோனாஸ் என்ற விகிதத்தில் கலந்து கலந்து தெளிக்கவேண்டும்.

பூச்சி கட்டுப்பாடு 

பச்சைப்புழு அறிகுறி

அனைத்து காய்கறிப் பயிர்களையும் தாக்கும். வெங்காயத்தில் இலையின் உட்புறம் இருந்து சாப்பிடுவதால் இலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு வெங்காயப் பயிர் காய்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறை

பிவேரியாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு

அறுவடைக்கு 15 தினங்களுக்கு முன் மாலிக் ஹைட்ராக்சைடு என்ற பயிர் ஊக்கியை தெளிப்பதால் வெங்காயத்தை சேமிக்கும் போது ஏற்படும் அழுகல் நோய் மற்றும் எடை குறைவினை தவிர்க்கலாம்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response