பனங்கருப்பட்டி தயாரிப்பு (Palm Jaggery Making)

கருப்பட்டி..! இந்த அழகிய பெயரைக் கேட்டதும், “கருப்பட்டியா..? அப்படினா என்ன..?” என்று இளம் தலைமுறையினர் கேள்வி எழுப்புவர். “அதான் பனைவெல்லம்!” என்று நாம் அழுத்தி கூறினாலும், அவர்கள், “ஓ பனை மரத்துல சர்க்கரை காய்க்குமா?” என்று கேட்பர்… சிரிப்பை அடக்கினாலும், எங்கோ மூளையில் ஒரு நெருடல்! ’நாம் கருப்பட்டியின் சிறப்புகளை, புதிய தலைமுறைகளுக்குக் கடத்த தவறி விட்டோமோ..?’ என்ற அங்கலாய்ப்பு வராமலில்லை.

பனங்கருப்பட்டி

வெறும் ‘பனங்கருப்பட்டி‘ இந்த ஒற்றை வார்த்தையில் ஓராயிரம்  விஷயங்கள் பொதிந்து உள்ளன. ஒரு காலத்தில்  சாலை எங்கிலும் பனைமரங்கள் தோகை விரித்த மயில்களைப் போல நிமிர்ந்து நிற்கும். அதில் தை முதல் ஆனி வரை, பனையேறிகள் சரக் சரக்கென்று ஏறிக் கொண்டே இருப்பார்கள்! அவர்கள் ஏறும் வேகமும் இறங்கும் வேகமும் பார்ப்போரை மலைக்க வைக்கும்.

பதநீர்

பனை மரங்களின் பாளைகளை லேசாக கீறிவிட்டு இருப்பர். அதிலிருந்து சொட்டு சொட்டாக வடிந்த திரவம், ஏற்கனவே கட்டி வைக்கப்பட்டிருந்த சிறு குடுவைகளை நிரப்பி இருக்கும். பூக்களுக்கு எப்படித் தேன் பெருமையைச் சேர்க்கிறதோ..! அதேபோல் பனை மரங்களுக்கு அமுத நீரான ‘ பதநீர்’ப் பெருமையைச் சேர்க்கிறது. பனையேறிகள் பதநீரை ஊற்றிக்கொண்டு, மீண்டும் பாளைகளை சிறிய கத்தியைக் கொண்டு மிக நேர்த்தியாய் சீவிவிட்டு, கீழ் இறங்குவர்.

சேகரித்த பதநீர் வடிகட்டியால் வடிக்கப்பட்டு, குடத்தில் ஊற்றப்படும்..! அது சுண்ணாம்பு மணத்துடன் நுரைத்தபடி நிரம்பிப்போகும். இந்த பதநீரைப் பனையேறிகள் லாவகமாக, விரித்து, முனையில் கட்டிய குருத்து ஓலையில் ஊற்றி, இதன் சுவைக்கு மயங்கிய வாடிக்கையாளர்களுக்கு விற்று விடுவர்.

கருப்பட்டி தயாரிப்பு முறை

எஞ்சியிருக்கும் பதநீரை ஒரு பெரிய இரும்பு சட்டியில் ஊற்றி, விறகு கட்டைகளை வைத்து தீ மூட்டி, ஒரு பெரிய பனை மட்டையைக் கொண்டு கிளறுவர். வாட்டி வதைக்கும் அனல் சூட்டிலும் பாகின் பதத்தை சரியாய் வரும்படி கிண்டுவர். சரியான பாகு பதம் வந்தவுடன், சூடாற கீழே இறக்கி வைத்துவிட்டு, சிறிய அச்சுகளினுள், இதை ஊற்றுவர். அவை இறுகி, கெட்டியான பின் கீழே திருப்பிக் கொட்டினால் குண்டுகுண்டாய் அரைவட்டத்தில் கருப்பட்டிகள் தயாராய் சிரிக்கும்…

கருப்பட்டிகள் எந்த வகையில் சிறப்பாகி விட்டன?

இயற்கையாக மரத்திலிருந்து சுரக்கப்படும் நீர் கருப்பட்டிகள் ஆக்கப்படுகின்றன. அப்படி இருக்க அதன் தரம் எத்தனை மகத்துவமானது..? இறைவனின் படைப்பில் இதுவும் ஒரு  அற்புதம் தான்..! அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது நம் மடமை.

கருப்பட்டியின் மருத்துவ பலன்கள் கணக்கில் அடங்காதது.

அதில், பிரதானமான சில.

  • கருப்பட்டி சுத்திகரிப்பு ஆற்றல் கொண்டது.
  • இரத்தம்,கல்லீரல் போன்றவற்றில், குடிகொண்டு இருக்கும் நச்சுக்களை அகற்றுகின்றது.
  • எலும்புகளுக்கு வலிமை தருகிறது.
  • கர்ப்பப்பையின் ஆரோக்கியத்திற்கும் துணைப் புரிகின்றது.
  • தாய்மை அடைந்த பெண்கள், தினம் கருப்பட்டியை உட்கொள்வதினால் சிசுவிற்கு தேவையான பால் சுரக்கிறது.
  • செரிமானக் கோளாறை தடைசெய்கிறது.

எப்படிப் பயன்படுத்தலாம்?

கலப்படமும், நச்சும் கலந்த அஸ்கா சர்க்கரை பார்க்க  வேண்டுமானால் ஜொலிக்கும் கற்களைப்போல மின்னலாம். ஆனால், மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பது இந்த சக்கரைக்கே பொருந்தும். உங்கள் இல்லத்தினர் சல்பர் கலந்த சர்க்கரையை உண்டு வியாதி கொள்ள வேண்டுமா..? வேண்டவே வேண்டாம்தானே..? தேநீர், காபிகளுக்குக்  கருப்பட்டியை பயன்படுத்துங்கள்.

இனிப்பு பலகாரங்கள் செய்யும்போதும் கருப்பட்டிக்கே முக்கியத்துவம் தாருங்கள். இன்று பனைமரங்களும் அருகிவிட்டன. பனையேறிகளும் குறைந்துவிட்டனர். கருப்பட்டி விலையும் கிடுகிடுவென்று உயர்ந்து வருகிறது. அதற்கு ஒரே காரணம் நாம் கருப்பட்டியைப் புறக்கணித்ததுதான். இப்போது சற்று விழிப்புணர்வு ஏற்பட்டு, கருப்பட்டியின் முக்கியத்துவம் உணரப்பட்டதால், அதன் தேவை அதிகரித்துள்ளது.

இதை எல்லாம் காரணம் காட்டி சந்தையில் ஏராளமான கலப்படக் கருப்பட்டிகள் வந்துவிட்டன. உண்டு பார்த்தால் கரிப்புத் தன்மையோடு இனிப்பு சுவை கலந்து இருப்பதே உண்மையான கருப்பட்டி.

தென்பக்கம் திருச்செந்தூர், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் தரமான கருப்பட்டிகள் கிடைக்கின்றன. அதேபோல், ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த கொளப்பலூர், நம்பியூர் பகுதிகளில் தரமான கருப்பட்டி ஆலைகள் உள்ளன.

இனி வாங்கி பயன்படுத்துவது நம் பொறுப்பு..!
கருப்பட்டியின் காலங்கள் மீண்டும் பிறக்கட்டும்..!

About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.