பஞ்சகவ்யம் (Panjagavyam)

பஞ்சகவ்யம் என்றால் என்ன

தொழிற்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய ஒளி விழும் நிழலினை வைத்தே அறிந்து அதனடிப்படையில் விவசாயம் முதலான பணிகளினை மேற்கொண்டனர். அக்காலத்தே  அவர்கள் பயன்படுத்திய நோய் விரட்டி மற்றும் பக்கவிளைவில்லாத மருந்து பொருள்தான் பஞ்சகவ்யம்.

கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படு வந்த பஞ்சகவ்யம் சிறந்த நோய் எதிர்ப்புசக்தி பெற்றது. அக்காலத்தே நம்முன்னோர்கள்  பஞ்சகவ்யம் பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றைய தொழிற்னுட்ப வளர்ச்சியில் அறிவியலாளர்கள் பஞ்சகவ்யம் சிறந்த மருந்துப்பொருள் என அறிவித்துள்ளனர்.

பஞ்சகவ்யம் (அ) பஞ்சகவ்வியம் (அ) பஞ்சகௌவியம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு உயிரி நீர்மக்கலவை. இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நில ஊட்டப் பொருள் (உரம்) ஆகும். பஞ்சகவ்யம் – பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான 1)சாணம் 2)கோமியம் 3)பால் 4) நெய் 5)தயிர் இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கிய பூசை பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.

பஞ்சகவ்யம் தயாரிப்பு முறை

தேவையான பொருட்கள்

 1. பசுஞ்சாணம் – 5 கிலோ
 2. பசுவின் கோமியம் – 3 லிட்டர்
 3. பசும்பால் – 2 லிட்டர்
 4. 5 நாள் புளித்த தயிர் தயிர் – 2 லிட்டர்
 5. பசு நெய் – 1/2 லிட்டர்
 6. கரும்புச்சாறு – 1 லிட்டர் (அல்லது) வெல்லம்- 1 கிலோ
 7. இளநீர் – 1 லிட்டர் (அல்லது) 2
 8. வாழைப்பழம் – 1 கிலோ (அல்லது) 12 பழம்
குறிப்பு
தயாரிக்கும் பாத்திரத்தை நன்கு கழுவ வேண்டும்.

செய்முறை

 • முதல் நாள் – பசுஞ்சாணத்துடன், பசுமாட்டு நெய் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து, தினமும் ஒரு முறை இதை பிசைந்துவிட வேண்டும்.
 • 4வது நாள் – மற்ற பொருட்களுடன், முதல் நாள் கரைத்த கரைசலை ஒரு வாயகன்ற மண்பானை (அ) சிமென்ட் தொட்டி (அ) பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பி வலையால் (அ) ஈரத்துணியால் (அ) கித்தான் சாக்கால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.
 • ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும், மாலையிலும் வலதுபுறம் 50 சுத்து, இடது புறம் 50 சுத்து  ஓரு குச்சியால் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயுவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 21 நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.
குறிப்பு
ஒவ்வொரு முறையும் குச்சியை சுத்தமாக நீரில் கழுவி விடவேண்டும் இல்லை யென்றால் கலக்கிய இடத்தில் கொசுக்கள் முட்டை இட்டுவிடும், அடுத்தமுறை அதை அப்படியே பயன்படுத்தினால் கொசு முட்டைகள் கரைசலை கெடுத்து இரு துர்நாற்றம் வீசும்படி செய்துவிடும் (இதை கண்டீப்பாக பயன்படுத்தகூடாது) மற்றும் நம் உழைப்பும் வீணாகிவிடும்.

பயன்படுத்தும் முறை

 • 10 லிட்டர் நீர் 250-300 மில்லி பஞ்சகவ்யம் சேர்த்து வடிகட்டி செடிகளுக்கு தெளிக்கலாம் செடிகளுக்கு விடலாம்.
 • பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.
 • பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும்  பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.
 • பஞ்சகவ்யம்  நல்ல பேரூட்ட சத்துக்களும், நுண்ணூட்டச் சத்துக்களும், நுண்ணுயிர் சத்துக்களும், பய்ர்வளர்ச்சி ஊக்கிகளும், மிகுந்த அளவில் உள்ள நல்ல உயிர் உரமாகும்.
 • ஒரு ஏக்கருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யம் தேவைப்படும். இந்த கரைசலை நிலவள ஊக்கியாகவும் பயன்படுத்தலாம்.

பஞ்சகவ்யம் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை

 •  தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் கலன்கள், பாத்திரங்கள் கண்டிப்பாக மண்/பிளாஸ்டிக் பாத்திரங்களாகவோ அல்லது சிமென்ட் தொட்டியாகவோதான் இருக்க வேண்டும்.
 • பாத்திரங்களின் வாய்பகுதி எப்பொழுதும் திறந்து துணியால் மூடியதாக இருக்க வேண்டும். தயாரிக்கும் வேளையில், காற்றிலுள்ள பிராணவாயு தேவைப்படுகிறது. கரைசலில் இருந்து மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுகிறது. இவை நுண்ணுயிர் வளர்ச்சிக்கு உகந்தவையல்ல. எனவே இவைகள் வெளியேற தடைகள் ஏதும் இருக்கக்கூடாது.
 • மூலப்பொருட்கள் நன்கு கலக்கப்பட வேண்டும். தினம் காலை, மாலை 2 வேளை 3 நிமிடங்கள் வேப்பம் குச்சியைக் கொண்டு கலக்க வேண்டும். இதன்மூலம் நுண்ணுயிர்கள் அதிகரிக்கின்றன.
 • மூலப்பொருட்கள் கலந்த பாத்திரத்தை நிழலில் வைக்க வேண்டும். இது மிக முக்கியமானது.
 • சாணம் பயன்படுத்துவதால் தெளிப்பானில் அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு, ஆகையால் வடிகட்டி பயன்படுத்த வேண்டும். மற்றும் விசைத்தெளிப்பான் பயன்படுத்தும்போது வால்வின் துளையினை பெரிதாக மாற்றி அமைக்க வேண்டும.
  பயன்படுத்துவதற்கு முன் தெளிப்பானை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
 • பஞ்சகவ்யத்தினை காலை அல்லது மாலை நேரங்களில் பயிருக்கு தெளிப்பது சிறந்தது.

காணொளி
இயற்கை வேளாண் விஞ்ஞானி தெய்வத்திரு.நம்மாழ்வார் அவர்களின் பஞ்சகவ்யம் செய்முறை விளக்கும் ஒரு காணொளி இங்கே

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.