எலுமிச்சையில் சொறி நோய் தாக்குதல் (Pest control for lemon tree)

எலுமிச்சை மரங்களைத் தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது சொறி நோயாகும். இந்நோய் எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. ஒரு வித பாக்டீரியா  பாதிப்பினால் ஏற்படுகின்றது.

நோயின் அறிகுறிகள்

எலுமிச்சை இலை, கிளை, சிறு கிளைகள், முள் , காய் மற்றம் பழங்களிலும் சொறிப்புள்ளிகள் தோன்றும். சொறிப்புள்ளிகளினால் குச்சிகள் காய்ந்து விடும். காய்களில் தோன்றும் சொறிப்புள்ளிகளில் சுற்றிலும் மஞ்சள் நிற வளையம் தோன்றும். பழங்களில் தோன்றும் சொறிப்புள்ளிகளில் வெடிப்புகள் தோன்றும். நோயினால் பழங்களில் தோல் பகுதி பாதிப்பிற்கு உள்ளாகின்றன. பழங்களில் சாறின் அளவும் குறைகின்றது.

சொறி நோயுற்ற பழங்களின் சந்தை மதிப்பு வெகுவாகக் குறைகின்றது. பழத்திலுள்ள சொறிப்புள்ளிகள் மற்றும் வெடிப்புகள் மற்ற அழுகல் நுண்ணுயிர்கள் உட்புக வழி உண்டாக்குகின்றன. சொறி நோயினை ஏற்படுத்தும் பாக்டடீரியா, இலைத்துளைகள் மூலமாகவோ, பூச்சி மூலமாகவோ முட்களினால் ஏற்படும் மரத்தின் காயங்கள் மூலமாகவோ உட்புகுந்து தாக்குதலை துவங்குகின்றது.

நோய் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு மழை, காற்று மற்றும் இலை துளைக்கும் பூச்சிகள் மூலம் பரவுகின்றது.

கட்டுப்படுத்தும் நுட்பங்கள்

நோயுற்று கீழே உதிர்ந்து விழுந்து கிடக்கும் இலைகளையும் சிறு குச்சிகளையும் சேகரித்து எரித்து விட வேண்டும். பழத்தோட்டங்களில் நோயுற்ற மரங்களிலிருந்து காய்ந்த சிறு குச்சிகளை வெட்டி தீயிட்டு அழிக்க வேண்டும்.

சூடோமோனஸ் 20 கிராம், 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

அடியுரமாக அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2 கிலோ, சூடோமோனஸ் 2 கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோவை 200 கிலோ மண்புழு உரம் அல்லது மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஒரு வாரம் வைத்திருந்த பிறகு மரங்களுக்கு எடுத்து போடவேண்டும் முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

மரங்கள் சிறப்பாக நன்கு வளர அடியுரமாக மக்கிய தொழுவுரம் ஒரு ஏக்கருக்கு 3டன் அவற்றுடன் வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ கலந்து போடவேண்டும். இதனை தொடர்ந்து மூன்று பஞ்சகவ்யா 1 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

மரம் துளிர் விடும் ஒவ்வொரு சமயம் மரத்தில் அனைத்து பகுதிகளும் நன்றாக நனையும்மாறு சூடோமோனஸ் புளோரசன்ஸ் 2 கிராம் -1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும். 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும். பூ பூக்கும் சமையத்தில் நன்கு புளித்த தயிர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.

பூக்கள் உதிராமல் இருக்க மீன் அமினோ அமிலம் அல்லது அரப்பு மோர் கலைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி கலந்து தெளிக்கலாம். பூச்சிகள் தென்பட்டால் தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி கலந்து தெளிக்கலாம். (எருக்க இலைகளை அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் போரான் பற்றாக்குறையை போக்கலாம்.)

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.