மகத்துவம் நிறைந்த புங்கன் மரம்(Pongam tree)

காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை (root nodules)கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று. பரவலாக ஆசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் பிரதேசங்களில் காணப்படும் மித மற்றும் வறண்ட(arid and semi arid) நில தாவரம் ஆகும். இதற்கு புன்கு, பூந்தி, கரஞ்சகம், கரஞ்சம் என்ற வேறு பெயர்களும் உண்டு.

மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள்.

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது.

கோடையில் மிக சிறிதளவே இலையுதிரும் ,பசுமை மாறா மரம், 3-4 நான்கு ஆண்டுகளில் முதிர்ச்சி அடையக்கூடிய மிதமான கடின மரம்(semi hard wood) ஆகும். நிழல் தரக்கூடிய, எளிதில் அதிக பராமரிப்பு இன்றி வளரக்கூடிய மரம் என்பதால் நெடுஞ்சாலைத்துறையினராலும் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ளது.
புங்கை மரத்தின் தாயகம் இந்தியா. குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே இவை தோன்றியிருக்க வேண்டும் என்று தாவரவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புங்கன் மரம்

இதன் விதைகளில் 25-40% எண்ணை இருப்பதே இதனை முக்கியமான மாற்று எரிபொருள் மரமாக கருதக்காரணம். ஏற்கனவே இதன் எண்ணை சோப்பு, விளக்கெரிக்க, பெயிண்ட்கள், ஆயுர்வேத மருந்து, இயற்கை பூச்சிக்கொல்லி ஆகியனத் தயாரிக்க பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது. கசப்பு தன்மை கொண்ட எண்ணை என்பதால் சமையலுக்கு பயன்ப்படுத்துவதில்லை.

வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு. புங்கை மரத்தின் மலர்கள், விதைகள், இலைகள், பட்டை,வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

விதை, எண்ணெய், மலர்கள்,இலைகள், தண்டுப்பட்டை, ஆகியவற்றில் இருந்து பல ரசாயனப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
கருஞ்சின்,பொன்காப்பின்,பொன்காக்ளாப்ரோன்,பொன்கால்,கரஞ்சாக்ரோமின்,கனுகின்,நீயோக்ளாப்ரின் போன்றவை. நோய் எதிர்ப்பு சக்தி புங்கன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது.

புங்கன் இலை

 • புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம். புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும்.
 • புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும்.
 • புங்கன் இலையை அரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடலாம். இலைகளின் சாறு, இருமல், வாயுக்கோளாறு, அஜீரணம்,பேதி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.
 • புங்கமரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும். இந்த பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.

புங்கன் பூ

புங்கன் பூ

 • மலர்கள் நீரிரிழிவு நோய்க்கு மருந்தாகும். நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம்.
 • புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம் நீக்க வேண்டும்.
 • பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மதுமேக ரணங்கள் தீரும்.

புண்களை ஆற்றும் விதைகள்

புண்களை ஆற்றும் விதைகள்

 • விதைகளின் பொடி கக்குவான் இருமலுக்கு நல்லது.
 • புங்கன் எண்ணெய் அஜீரணத்துடன் கூடிய ஜுரத்தை குணப்படுத்தும்.
 • தோல் நோய்களுக்கு புறப்பூச்சு மருந்தாகப் பயன்படும். புழுவைத்த புண்களை ஆற்றும்.
 • புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும்.
 • நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும்.
 • இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும்.

புங்கன் வேர்

 • வேரில் எடுக்கப்படும் சாறு ஆழமான புழுவைத்த புண்களை ஆற்றும், பற்களை சுத்தப்படுத்தவும்,ஈறுகளை வலுப்படுத்தவும் பயன்படும்.
 • புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும்.
 • புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும்.

பயோடீசலாகும் விதை

 • புங்கன் எண்ணெயிலிருந்து தற்பொழுது பயோடீசல் தயார் செய்து வாகனம் மற்றும் ஆயில் இஞ்ஜின்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள்.
 • இந்த ஆயிலைப் பிரிக்கும் போது கிளசரின் மற்றும் மெத்தனால் கிடைக்கின்றது.
  இந்த ஆயில் சோப்பு செய்யப் பயன்படுத்தப் படுகிறது.
 • அதன் புண்ணாக்கு பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

சங்க இலக்கியத்தில்

சங்ககால நூல் குறிஞ்சிப் பாட்டு இதன் பூவைக் குறிப்பிடுகிறது. குறிஞ்சி நிலத்து மகளிர் பல்வேறு வகையான மலர்களைக் குவித்து விளையாடியபோது இதனையும் சேர்த்துக் குவித்தார்களாம்.

சங்கப்பாடல்களில் ஒன்று இதனைப் ”புன்கு” எனக் குறிப்பாடுகிறது.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.