பூந்திக்கொட்டையின் பயன்கள் (Uses of Soap Nuts)

மாறிவரும் நவீன யுகத்தில் என்னதான் ஆடம்பர வசதிகள் இருந்தாலும் சிலருக்கு பழமை தான் பிடிக்கும். வடித்த சாதம், செக்கில் ஆட்டிய எண்ணெய், வாழை இலை சாப்பாடு என்பதுபோல், நுரை பொங்கும் மூலிகை குளியலும் எல்லோருக்கும் பிடித்தமான விஷயமே.

அவசர கதியான ஓட்டத்தில் சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்கள் நமக்கு உதவினாலும் கடலை மாவு, பாசிப்பயறு மாவு, அரைப்பு சீயக்காய் போன்றவற்றின் மகிமை அவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் தான் தெரியும்.

நாம் பயன்படுத்தும் குளியல்பொடி மற்றும் கேசப்பொடிகளில் இயற்கையின் கலவை அதிகமாக இருந்தால் தான், நமது தோலும், கேசமும் ஆரோக்கியமாக இருக்கும். கேசத்திற்கு பளபளப்பையும், தோலுக்கு வழுவழுப்பையும் தந்து நுரை பொங்க குளித்த திருப்தியை தரும் மூலிகை தான் பூந்திக்கொட்டை.

பூந்திக் கொட்டை

சபின்தஸ் எமார்ஜினேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த மரத்தின் உலர்ந்த பழங்கள் பூந்திக்கொட்டை என்றும் பூவந்திக்கொட்டை என்றும், சோப்புக்காய் என்றும் அழைக்கப்படுகின்றன.

Soap Nuts

பேச்சு வழக்கில் பூந்திக் கொட்டை எனப்படும் இத்தக் காய்களின் உலர்ந்த சதைப்பகுதியை இடித்து, நீரில் சற்று ஊறவைத்துப் பிழிந்தால், மிகுந்த நுரையோடு, நறுமணத்தோடுக் கூடிய, திடமான நீர்மம் உண்டாகும்…இதை எண்ணெய் வைத்தத் தலையில் தேய்த்துக் குளித்தால் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் அறவே நீங்கிவிடும். சிகைக்காயைப் போலவேப் பயன்படும் இந்தக் காய்கள் ஆந்திரத்தில் மிக பிரபலம்.

இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் உண்டாக்குகின்றன. உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இதை நீரில் குழப்பி, சற்று நேரம் வைத்திருந்து, பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.

Soap Nuts
வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்துவரலாம்.

கபத்தை வெளியாக்கும்

இந்தக் காய்களின் கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பில் 2-3 குன்றி எடை நசுக்கி, முலைப்பாலில் ஊறப்போட்டு, வடிகட்டி மூக்கின் வழியாக 2-3 துளி விட, மூக்கிலும் வாயிலும் கபத்தை வெளியாக்கும். இதனால் மூர்ச்சை, பற்கிட்டல், காக்கைவலி முதலியவைகள் போகும்.

தங்க நகைகள் ஜொலிக்க

தினமும் அணியக் கூடிய கம்மல், மோதிரம், சங்கிலி, வளையல் போன்ற தங்க நகைகள், அதிகப் பயன்பாட்டால் மங்கிப்போகும். அப்போது பூந்திக் கொட்டை கழுவிய நீரில் போட்டு, சற்றுக் கைவிரல்களால் அல்லது மெல்லிய புருசால் தேய்த்து எடுத்தால் புத்தம் புது நகைகளைப் போல் ஜொலிக்கும்.

பட்டுப்புடவைகளின் கறைகளைப் போக்க

நீண்ட நாட்கள் வெளியில் எடுக்காத பட்டுப் புடவைகள் மற்றும் கசங்கிய கறைகள் உள்ள பட்டுப் புடவைகளை ஒவ்வொன்றாக, நுரைத்த பூவந்தி நீரில் முக்கி எடுக்க வேண்டும், சிலமுறை நன்கு அலசி, பிறகு சாதாரண தண்ணீரில் இதே போல ஓரிரு முறைகள் செய்து, நிழலில் உலர்த்த, ஈரம் உலர்ந்து, கறைகள் போய், புடவைகள் நன்கு காய்ந்து விடும்.

கூந்தல் மிளிர

Soap Nuts

இது போல, அனைத்துப் பொருட்களையும் சேகரித்து இந்த குளியல் பொடியை உருவாக்க வாய்ப்பு இல்லாதவர்கள், பூவந்திக் கொட்டைகளை இளஞ்சூட்டில் வறுத்து, அதை நன்கு இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு, சீயக்காய்த்தூள் அல்லது சாதம் வடித்த கஞ்சியுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தேய்த்துக் குளித்து வர, தலைமுடிகள் அழுக்கு நீங்கி, மிருதுவாகி பளபளப்பாக மாறி விடும். இப்படி மனிதரின் உடல் பாதிப்புகளை, அழுக்குகளைக் களைந்து புத்துணர்வு தரும், மணிப்பூவந்தி, மனிதரின் ஆடை அணிகலன்களுக்கும் தூய்மையைத் தருவதாகவும் அமைகிறது, எப்படி என்று பார்க்கலாமா?

சீயக்காய் மற்றும் பூந்திக்கொட்டை மரங்களை தமிழ்நாட்டில் வளர்க்க முடியுமா?

ஆரோவில் பகுதியில் உள்ள பிச்சாண்டிக்குளம் மூலிகைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பார்வதி நாகராஜன் பதில் சொல்கிறார்.

சீயக்காய் தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சரியாக வளராது. அதனால்தான் இங்கு பயிர் செய்யப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தில் காலங்காலமாக சீயக்காய்க்கு மாற்றாக, உசிலை அரப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கையாகவே ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் உசிலை மரம் ஏராளமாக காணப்படும். இதைத் தனியாக யாரும் பயிர் செய்வதில்லை. இதேபோன்றதுதான் ‘பூந்திக்கொட்டை’ எனப்படும் சோப்புக்காய் மரங்களும். இவை, இயற்கையாகவே காடுகளில் வளரக்கூடியவை. சில இடங்களில்தான் தேவைக்காக ஒன்றிரண்டு மரங்களை வளர்க்கிறார்கள்.  தமிழ்நாட்டில் இந்த மரங்கள் நன்றாக வளரும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response