சுருள்பாசி வளர்ப்பும் அதன் பயன்களும்

சுருள்பாசி (spirulina) என்றால் என்ன? என்று முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுருள்பாசி ஸ்பைருலினா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது ஒரு நுண்ணிய, நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நிறமுடைய நீரில் வாழும் தாவரம் ஆகும். இது இயற்கையிலேயே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தாவரமாகும். இந்த சுருள் பாசியில் 55.65% புரதச் சத்து உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதொரு உணவாகும்.

உலகில் சுமார் 25 ஆயிரம் வகைப் பாசி இருந்தாலும் 75 வகையான பாசிகள் மட்டுமே உணவாகப் பயன்படுகின்றன. இதில் முதல் நிலையில் இருப்பது சுபைருலினா எனப்படும் இந்த சுருள்பாசியே.

திர்காலத்துக்கான சிறந்த உணவு என்று உலக சுகாதார நிறுவனத்தாலும் விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்லும் விஞ்ஞானிகளுக்கான உணவாக நாசாவாலும் அங்கீகரிக்கப்பட்டது  ‘ஸ்பைருலினா’ (Spirulina) எனும் சுருள்பாசி. மிகக் குறைந்த விலையில் நிறைந்த சத்துக்களைக்கொண்ட ஒரு மகத்துவ உணவு. சயனோ பாக்டீரியா குடும்பத்தைச் சேர்ந்த சுருள்பாசியான ஸ்பைருலினா, நன்னீரில் மிதந்து வாழும் தன்மையைக்கொண்ட, நீலப்பச்சைப் பாசி.

ஒரு கிலோ ஸ்பைருலினா உணவு, 1,000 கிலோ காய்கறிகளுக்குச் சமமான சத்துக்களைக்கொண்டது. எளிதில் செரிமானம் ஆகும் தன்மையும், அதிக அளவு புரதமும் இருப்பதால், உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

தயாரிப்பு முறை

சுருள்பாசி விளைவிக்க முதலில் 20 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. நான்கு மீட்டர் அகலம், ஆறு மீட்டர் நீளம் கொண்ட தொட்டியில் தார்பாய் விரித்து இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் நிரப்பினால் பாசி விளைவிக்கும் களம் தயாராகிவிடும். தாய் பாசி வாங்கி வந்து இந்தத் தண்ணீருக்குள் விட்டு, தினமும் 15 முதல் 20 முறை தண்ணீரை கிளறி விட வேண்டும். நான்காவது நாளில் இருந்து பாசி அறுவடைக்கு தயாராகி விடும்.

தினமும் 200 முதல் 500 கிராம் வரை சேகரிக்கலாம். பாசி வளர்வதற்குத் தேவையான நுண்ணூட்டச்சத்தும், ஆவியான தண்ணீரின் அளவிற்குத் தினமும் தண்ணீரும் ஊற்றி வந்தாலே போதும். ஓராண்டு வரையில் தினசரி விளைச்சல் கிடைக்கும். பின் பாசியை காயவைத்து பவுடராக்கி விற்பனைக்கு தயாராக்க வேண்டும். கிலோ 600 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. எங்களிடம் இருந்து வாங்கும் இந்த பாசியை மாத்திரைகளாகவும், உணவுப் பொருளாகவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்கின்றனர்.

யார் சாப்பிடலாம்?

மூன்று வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு 4 – 6  கிராமும், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1 – 2 கிராமும் எடுத்துக்கொள்ளலாம்.

எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்?

பவுடர் மற்றும் கேப்ஸ்யூல் வடிவத்தில் கிடைக்கிறது. எலுமிச்சை, கரும்பு, அன்னாச்சிப்பழம் போன்ற பழச்சாறுகளுடன் கலந்து அருந்துவதே நல்லது. வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம். சாக்லேட், பிஸ்கட், கேக் போன்றவற்றுடன் ஃபிளேவராக இணைத்துக்கொள்ளலாம்.

பயன்கள்

  • இதில் உள்ள பீட்டாகரோட்டின், தோல் சுருக்கத்தைத் தடுத்து, பொலிவாக வைக்கிறது.
  • நிறைவுறாத கொழுப்பு அமிலமான, காமா லைனோலெனிக் அமிலம் (Gamma linolenic acid) உடல் பருமனைக் குறைக்கக்கூடியது.
  • ரத்தக் குழாய் தொடர்பான பிரச்னைகளையும் சரிசெய்கிறது.
  • சூப்பர் ஆக்சைடு டிஸ்மியூடேஸ் (Superoxide dismutase- (SOD) என்ற என்சைம் செல்களுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.
  • பி12 கல்லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.
  • மக்னீசியம், கால்சியம், பொட்டாஷியம் போன்ற இதர சத்துகளும் இதில் நிறைந்துள்ளன.
  • இதில் அதிகம் உள்ள குளோரோபில், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
  • இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகைக்கு மருந்தாக இருக்கிறது.

ஸ்பைருலீனா சுருள்பாசியில் உள்ள சத்தும், தீர்க்கும் நோய்களும்

  • தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக அதிக சத்துள்ள உணவுப்பொருள் சுபைருலீனா மட்டுமே. பசும்பாலை விட 4   மடங்கு சத்து நிறைந்தது.
  • சுபைருலீனாவில் 55-65% உள்ள புரதம் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கடின உழைப்பாளிகள், மூத்தோர்கள் என அனைவருக்கும் ஏற்ற இணை உணவாகும்.
  • தாது உப்புக்களாகிய மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், தாய்ப்பால் சுரக்க உதவுகிறது. கை, கால், மூட்டுவலியை முற்றிலும் நீக்குகிறது.
  • வைட்டமின் ஏ, கண் பார்வையை சீராக இருக்கச் செய்கிறது. இதிலுள்ள ‘பி’ வைட்டமின்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையம் சீராக செயல்பட்டு தேவையான அளவு இன்சுலின் சுரக்கச் செய்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
  • 15 மடங்கு அதிகம் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதிலுள்ள துத்த நாகச்சத்து முடி உதிர்தலை தடுக்கிறது.
  • காமா லினோலினக் அமிலம் (GLA) உடலில் உள்ள கொழுப்பு சத்து சீராக இருப்பதற்கு உதவி புரிந்து உடல் பருமனைத் தடுக்கிறது. இரத்த அழுத்த நோய் வராமல் பாதுகாக்கிறது.
  • உடலில் இறந்த செல்லிற்கு புத்துயிர் கொடுக்க வல்லது. எனவே புற்றுநோய் மற்றும் குடல்புண் போன்ற நோய்களை நீக்கவல்லது.
  • தோல் சுருக்கங்களை நீக்கி இளமையைத் தருகிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்க வல்லது. வெண் தேமலை படிப்படியாக குறைக்கிறது.
  • HIV/AIDS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுபைருலீனாவைத் தொடர்ந்து உட்கொண்டால் HIV வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதுடன் நோயாளிகளின் வாழ் நாட்களை அதிகப்படுத்த உதவுகிறது.
  • பீட்டோ கரோட்டின் சத்து கேரட்டில் உள்ளதை விட 10 மடங்கு அதிகம் உள்ளது. அழகு நிலையங்களில் ஸ்பைருலினாவைப் பயன்படுத்தி கண் கருவளையம், முகப்பரு இவற்றை நீக்கி முகப்பொலிவினைப் பெறுகிறார்கள்.
  • ஐம்புலன்களும் நோயின்றி சீராக இயங்க ஸ்பைருலினா உதவுகிறது.
  • ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

இது மனிதருக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருவதாக உலக சுகாதார நிறுவனம் சான்றளித்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
About the Author
Arulkumar

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.