பயிர் வளர்ச்சியில் நுண்ணுாட்ட சத்துக்களின் பங்கு( The role of nutrients in crop growth)

பயிர் வளர்ச்சிக்கு நுண்ணுாட்ட சத்துக்களின் பங்கு மிகவும் முக்கியமானவை. நுண்ணுாட்ட சத்துக்களாக கூறப்படுபவை போரான, குளோரின், இரும்பு, தாமிரம், மாங்கனீசு, மாலிப்டினம் மற்றும்  துத்தநாகம் ஆகும்.

போரான்

புதிய செல்கள் உற்பத்தி, மகரந்த சேர்க்கை, காய், கனி உற்பத்திக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. அமினோ அமிலங்கள் மற்றும் புரத உற்பத்தியிலும் உறுதுணையாக உள்ளது. பயறு வகை பயிர்களின் வேர்களில், வேர் முடிச்சுகள் உண்டாவதை துாண்டுகிறது.

குறைகள்: இலைகள் சுருண்டு, நொறுங்கும் தன்மையை அடையும். இலைகள் மற்றும் கனிகள் முதிராமலே உதிரக் கூடும். காய்களில் வெடிப்பு உண்டாகும்.

நிவர்த்தி: போராக்ஸ் 10 கிராம்/லிட்டர் அல்லது போரிக் அமிலம் 3 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

தாமிரம்

வைட்டமின் ‘ஏ’ உற்பத்தியில் மிக முக்கிய பங்காற்றுகின்றது. தாவரங்களில் சுவாசம் தங்குதடையின்றி நடக்க ஒரு துாண்டு கோலாக விளங்குகிறது. பச்சைய உற்பத்தியில் முக்கிய அங்கம் வகிக்கின்றது.

குறைகள்: பயிர் வளர்ச்சியில் பின்னடைவு, வளர்ச்சி குன்றுதல், இளம் குறுத்துகளில் மஞ்சள் நிறம் போன்ற அறிகுறிகள் தென்படும். பழங்களில், காய்கறிகள் வெடிப்பு ஏற்படும். இலை நுனிகள் மற்றும் ஓரங்களில் கருகல் ஏற்படும்.

நிவர்த்தி: காப்பர் சல்பேட் 0.5-1 கிராம் /லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

துத்தநாகம்

ஹார்மோன்கள் உற்பத்தியில் முக்கிய செயலாற்றுகிறது. தாவர இனப் பெருக்கத்தில் தலையாய பங்களிக்கிறது.

குறைகள்: இளங்கொழுந்துகளில் நரம்புகளிடையே மஞ்சள் நிறமாக மாறிவிடும். இலைகள் சிறுத்தும், உருமாறியும் காணப்படும்.

நிவர்த்தி: சிங்க் சல்பேட் 2.5 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.

இரும்பு

பச்சைய உற்பத்தியில் மிகப்பெரிய பங்காற்றுகிறது.

குறைகள்: இளம் கொழுந்துகளின் நரம்புகளிடையே வெளிர் மஞ்சள் நிறம் தென்படும். பற்றாக்குறை நீடித்தால் முழு பயிரும் வெளிர் பச்சை நிறமாகி விடும்.

நிவர்த்தி: அன்னப்பேதி உப்பு (பெரஸ் சல்பேட்) 25 கிராம்/ எக்டர் என்ற அளவில் இடலாம் அல்லது பெரஸ் சல்பேட் 5 கிராம்/லிட்டர் என்ற அளவில் இலை வழியாகவும் தெளிக்கலாம்.

மேலும் படிக்க : பஞ்சகவ்யம் (Panjagavyam)

மாங்கனீசு

பச்சையம் உற்பத்தி செய்ய உதவுகிறது. ஒளிச் சேர்க்கைக்கு மிகவும் உறுதுணையாக செயல்படுகின்றது.

குறைகள்: இளம் கொழுந்து களின் நரம்புகளிடையே வெளிர் மஞ்சள் நிறம் தென்படும். ஆனால், செடி பச்சை நிறத்தில் இருக்கும். குறைபாடு நீடித்தால் வளர்ச்சி குன்றும்.

நிவர்த்தி: சுண்ணாம்பு கலந்த மாங்கனீசு சல்பேட்டை தெளிக்கவும்.

மாலிப்டினம்

தாவரமானது, இரும்புச் சத்தினை மண்ணில் இருந்து எடுக்கவும், ஊடுருவிச் செல்லவும் வழிவகை செய்கிறது. தழைச்சத்து கிரகிக்கவும் உதவி புரிகின்றது.

குறைகள்: தழைச்சத்து பற்றாக்குறை போல அறிகுறி தென்படும். முதிர் மற்றும் மத்திய இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். இலையோரங்கள் மடங்கியும், வளர்ச்சியில் சற்று பின்னடைவும் காணப்படும். பூக்களின் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது.

நிவர்த்தி: அமோனியம் மாலிப்டேட் 1-5 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.

About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.