கிணற்றுப்பாசான் என்னும் வெட்டுக்காயப் பூண்டு(Tridax Procumbens)

கிணற்றுப்பாசான் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது வெட்டுக்காயப் பூண்டு என்று அழைக்கப்படும் இது பரவலாக களைச் செடியாக அறியப்படுகிறது. மூக்குத்ததிப்பூண்டு, வெட்டுக்காயபச்சிலை, காயப்பச்சில்லை, செருப்படித்தழை மற்றும் தென்தமிழகத்தில் பேச்சு வழக்கில் தாத்தாப்பூச்செடி என்று பல பெரியர்களில் இது அழைக்கப்படுகின்றது. டிரிடாக்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா.

இந்த செடி சிறியதாகவும், பற்களுள்ள சற்று நீண்ட தடிப்பான சொரசொரப்பான பச்சை இலைகளையும், மஞ்சள் நிறப் பூக்களையும் உடையது. ஈரமான இடங்களில் இந்த செடி தானே வளரும் தன்மையுடையது. இதன் விதைகள் காற்றில் பரவி ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையது.

புல்வெளிகள், தரிசு நிலங்களில், தோட்டங்கள் மற்றும் சாலையோரங்களில் இது பரவி வளரும். உலகெங்கும் பரவியுள்ள இது சீதோஷ்ண, மிதசீதோஷ்ண வெப்பத்தில் வளரக்கூடியது. லேசான பஞ்சுபோன்ற விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

வெட்டுக்காயப் பூண்டு

Tridax Procumbens

இரத்தத்தை உறைய வைக்கும் திறன் வெட்டுக்காயப்பூண்டு இலைச்சாற்றுக்கு இருப்பது உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெட்டுக்காயப்பூண்டு சிறுசெடி ஆகும். மென்மையான, அடர்த்தியான உரோமங்கள் கொண்ட தாவரம். 1மீ.வரை உயரமானவை, தரையோடு படர்ந்து, நுனிப்பகுதி மட்டும் நிமிர்ந்து வளர்ந்திருக்கும். இலைகள், எதிர் அடுக்கானவை, சொரசொரப்பானவை, ஈட்டி, முட்டை வடிவமானவை, இலைத்தாள் முழுமையானது. பூக்கள், தொகுப்பானவை, தலை போன்ற தோற்றத்துடன் கூடியவை (தாத்தா தலைப்பூ). மலர்கள், மஞ்சள் நிறமானவை, பிளவுபட்ட நாக்கு போன்றவை. ஆண், பெண் மலர்கள் தனித்தனியாகவும், மற்றும் இருபால் மலர்களும் ஒரே பூங்கொத்தில் காணப்படும்.
காய்கள், வெடித்துச் சிதறும் தன்மையானவை. விதைகள், கருப்பானவை. சிறு மயிரிழை போன்ற உரோமங்களும் காணப்படும். சமவெளிகள், கடற்கரையோரங்கள், புதிய நிலங்களில் தீவிரமாகப் பரவுகின்றன. மலர்கள், மழைக்காலத்தில் அதிகமாகவும், கோடைகாலத்தில் குறைந்தும் காணப்படும்.

வெட்டுக்காயங்கள் குணமாக வெட்டுக்காயப்பூண்டு இலைகளைப் பச்சையாக அரைத்து, சாற்றைக் காயத்தின் மீது தடவி, இரத்தம் வருவது நின்ற பின்னர், அரைத்த இலைகளைப் பாதிக்கப்பட்ட இடத்தில் பரப்பி, கட்டுப்போட வேண்டும்.

புண்கள் குணமாக வெட்டுக்காயப்பூண்டு இலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து, பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட வேண்டும். தினமும் ஒரு முறை, புண்கள் ஆறும்வரை தொடர்ந்து செய்து வரலாம்.

மருத்துவப்பயன்கள்

இது புண்ணாற்றும், குருதியடக்கி, கபநிவாரண,மூச்சுக்குழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோர்ப்பு, வயிற்றுப்போக்கு, பேதி முதலியவை குணமாகும்.

இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவிற்றில் பற்றிடச் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.

கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும், குப்பைமேனி இலைச்சாறும் மருத்துவரின் ஆலோசனைப்படி கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும். மேலும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.