துளசி (Tulasi)

துளசி(Tulasi) என்பதற்கு ஒப்பில்லாதது என்று பொருள். இதிலிருந்தே துளசியின் பெருமையை நாம் புரிந்து கொள்ளலாம். அருகு, வில்வம், துளசி (Tulasi), வேம்பு(Neem), வன்னி ஆகிய ஐந்தும் பஞ்சபத்திரம் எனப்படும். சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

எந்த இடத்தில் துளசி(Tulasi)  வளர்ந்திருக்கிறதோ அங்கு மும்மூர்த்திகளுடன், அனைத்து தேவர்களும் வசிக்கிறார்கள் என்று அர்த்தம். வீடுகளில் துளசி(Tulasi)  செடி வைத்து வளர்ப்பதும், அதனை பால், அபிஷேக நீர், கங்கை நீர் கொண்டு வளர்ப்பதும், தினமும் பூஜை செய்து வழிபடுவதும் சிறப்பான பல நல்ல பலன்களை தரும். துளசிச் செடி உள்ள வீட்டில் எந்த துஷ்ட சக்திகளும் நுழையாது.

தங்களின் வீடுகளில் துளசி மாடம் அமைத்து அதற்கு விளக்கேற்றி காலை, மாலை என இரு வேளைகளில் பூஜை செய்து மாடத்தினை வலம் வந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். துளசி மாடத்தை பூஜிக்க, வேறு துளசி செடியில் இருந்து தான் இலைகளை பறித்து பயன்படுத்த வேண்டும். துளசி வனம் இருக்கும் வீட்டில் துர்மரணங்கள் நிகழாது. நாராயணருக்கு, தினமும் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்றும் பத்மபுராணம் கூறுகிறது.

பல இனங்களைக் கொண்ட இந்த துளசிச்(Tulasi)  செடியில் கருந்துளசியும் வெண்துளசியுமே முக்கியமாக கருதப்படுகிறது.

இது தவிர, துளசிச் செடிக்கு நச்சுத்தன்மையை  உறிஞ்சும் தன்மையுமிருப்பதுடன், துளசிச்(Tulasi)  செடியுள்ள இடங்களில் விஷக் கிருமிகளும் அணுகாது.

துளசியின் வேறு பெயர்கள்

 • துழாய்
 • திவ்யா
 • பிரியா
 • துளவம்
 • மாலலங்கல்
 • விஷ்ணுபிரியா
 • பிருந்தா
 • கிருஷ்ணதுளசி
 • ஸ்ரீதுளசி
 • ராமதுளசி

துளசியின் இனங்கள்

 • நல்துளசி
 • கருந்துளசி
 • செந்துளசி
 • கல்துளசி
 • முள்துளசி
 • நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

துளசியின்  தாவரப் பெயர்கள்

 • Ocimum
 • Sanctum
 • Linn Lamiaceae
 • Labiatae (Family)

எவ்வாரு துளசி செடியை வளர்ப்பது

துளசியின் தாயகம் இந்தியாஎனினும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிகிரி.

துளசி செடியை வீட்டில் பலர் வளர்த்து வருகின்றனர். ஆனால் இந்த செடி சில வீடுகளில் வாடி வெறும் குச்சி மட்டும் இருக்கும். இதற்கு சரியான பராமரிப்பானது கொடுக்கவில்லை என்று அர்த்தம். என்ன தான் செடியை கடவுளாக நினைத்து மதித்து வளர்த்தாலும், முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே நன்கு செழிப்புடன் வளரும். அதிலும் துளசி செடிகளில் பல வகைகள் உள்ளன. இவை புனிதமானது மட்டுமின்றி, அதற்கேற்றாற் போல் பல நோய்களை குணமாக்கவும் வல்லது.

துளசி செடிக்கு நேரடியான சூரிய வெளிச்சம் ஆகாது. எனவே துளசிச் செடியை சூரிய வெப்பம் நேரடியாக படும் இடத்தில் வைத்து வளர்க்காமல், அளவாக வெயில் படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.

துளசி செடிக்கு அதிகப்படியான ஈரப்பசையானது மிகவும் பிடிக்கும். எனவே கோடைகாலமாக இருந்தால், ஒரு நாளைக்கு 3 முறையும், குளிர்காலமாக இருந்தால், ஒருநாளைக்கும் இரண்டு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு வேளை துளசிச் செடியானது சூரிய வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தில் வைத்தால், அதற்கு இன்னும் அதிகப்படியான நீரானது தேவைப்படும்.

துளசி செடிக்கு, ஈரப்பசையை தக்க வைக்கும் மண் மிகவும் அவசியம். எனவே தான் துளசி செடியானது பெரும்பாலும் களிமண்ணில் வளர்கிறது. ஏனெனில் மண்ணிலேயே களிமண் தான் அதிகப்படியான ஈரப்பசையை தக்கக் வைக்கக்கூடியது.

துளசி செடியை செழிப்புடன் வளர்ப்பதற்கு எந்த ஒரு கெமிக்கல் உரம் தேவையில்லை. ஆனால் செடியை வைப்பதற்கு முன், அதற்கு ஈரத்தை தக்கவைக்கும் ஈர வைக்கோலை வைத்து, பின் மண்ணை போட்டு, செடியை வைக்க வேண்டும். இதனால் செடியானது வறட்சியடையாமல் இருக்கும். சொல்லப்போனால், துளசி செடிக்கு, அந்த வைக்கோல் கூட தேவையில்லை. அது இல்லாமலேயே நன்றாக துளசிச் செடி வளரும்.

துளசி செடியில் பூக்கள் வளர ஆரம்பித்துவிட்டால், துளசிச் செடியின் இலையிலிருந்து வரும் வாசனை மட்டும் போவதில்லை, அதன் வளர்ச்சியும் தான் தடைப்படும். எனவே செடியில் பூக்கள் வளரை ஆரம்பித்துவிட்டால், அந்த பூக்களை அகற்றிவிட வேண்டும். முக்கியமாக, பூக்கள் மலரும் வரை காத்திருக்காமல், அது மொட்டாக இருக்கும் போதே அகற்றிவிட வேண்டும்.

துளசி செடிக்கு எந்த ஒரு பூச்சிக்கொல்லி மருந்தும் தேவையில்லை. ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையானது, செடியை பூச்சிகள் தாக்காமல் தடுக்கும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.