மண்புழு உரம் (Manpulu uram)

மண்புழு உழவனின் மிகச்சிறந்த நண்பன். சாணம், இலை, தழை போன்ற விவசாயக் கழிவுப் பொருள்களை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் மண்ணிற்க்கு தேவையான மணிச்சத்து, தழைச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது. மண்புழு உரம் தயாராவதற்கு சுமார் 45 முதல் 60 நாட்கள் ஆகும்.

மண்புழு வகைகள்

உலகில் சுமார் 3000 வகைகள் மண்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 384 வகைகள் இந்தியாவில் உள்ளன.  மண்புழு உரம் தயாரிக்க 6 வகையான மண் புழுக்கள் உகந்தவை.

அதிகம் பயன்படும் மண்புழு இனங்கள்

 • எயசெனியா பெடிடா(Eisenia foetida)
 • லும்ப்ரிகஸ் லுபெல்லஸ்(Lumbricus rubellus)
 • எயசெனியா ஆண்ட்ரி(Eisenia andrei)

வீட்டில் மண்புழு தயாரிக்கும் முறை

 • எந்த நிழற்பாங்கான இடத்திலும் மண்புழு உரம் தயாரிக்கலாம். ௐரு சிறிய இடம் இருந்தால் போதும் உரம் தயாரிக்க.
 • தோட்டம், விளை நிலங்கள் அல்லது சிறிய இடம் இருந்தால் போதும்.
 • நமது தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப மண்புழு உரக்கூடத்தை அமைக்கலாம்.
 • நல்ல காற்றோட்ட வசதியுடன் நீள்வாக்காக கிழக்கு, மேற்காக உரக்கூடங்களை அமைக்க வேண்டும்.
 • தொட்டியின் சுவர் விளம்புகளின் மேற்புறத்திலோ அல்லது தொட்டியின் வெளிப்புற அடிப்பாகத்திலோ சிறிய நீர்வாய்க்கால் அமைத்து மண்புழுவின் எதிரியான எறும்பைக் கட்டுப்படுத்த முடியும்.
 • தொட்டிகளின் மேல் சிறுகண் வலைகள் அமைப்பதினால் மண்புழுவை ஓணான், எலி, தவளை, பாம்பு, ஆந்தை போன்றவற்றில் இருந்து பாதுகாக்க முடியும்.
 • மண்புழுவுக்கு தேவையான கழிவுகளை இட்ட பின், டன் ஒன்றுக்கு 1 கிலோ மண்புழுக்களை இட வேண்டும்.
 • தொட்டிக்குள் 40% ஈரப்பதம் இருக்கும் வகையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வெர்மிவாஷ்

 மண்புழு உர தொட்டியில் ஊற்றப்பட்ட திரவ உரமாக வெளிவரும் நீரே வெர்மிவாஷ்’ எனப்படும். இதில் நுண்ணூட்டச்சத்துக்களான சாம்பல், மணி மற்றும் தழை சத்துக்கள் உள்ளன. இச்சத்துக்கள் திரவ நிலையில் உள்ளதால் பயிர்கள் எளிதில் உட்கிரகித்து செழிப்பாக வளரும்.

 மண்புழு உரத்தில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களின் அளவுகள்

மணிச்சத்து – 0.5%

தழைச்சத்து – 1.5%

சாம்பல் சத்து – 0.8%

அங்ககக் கரிமப் பொருள்கள் – 12%

 மண்புழு உரத்தின் பயன்கள்

 •  மண்ணின் உயிர்தன்மை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்.
 • பயிரின் வேர் வளர்ச்சி மற்றும் பூக்கும் திறன் தூண்டப்பட்டு, மகசூல் 20 முதல் 30% வரை அதிகரிக்கிறது.

பயன்படுத்தும் முறை

வாழை, தென்னை, கரும்பு, பழப்பயிர்கள் குறிப்பாக எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, மா போன்ற பழப் பயிர்கள் கோடையில் முழுமையாகப் பாதுகாக்க மண்புழு உரம் பெரிதும் பயன்படுகிறது.

மேலும் மழைக் காலங்களில் மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் சத்துக்களை எடுக்கும் புது வேர்கள் உருவாக மண்புழு உரம் பயன்படுகிறது. இதனால் பயிர்கள் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மண்புழு உரத்தால் ஏற்படும் அமிலமும் கார்பன்- டை- ஆக்சைடு வாயுவும் மண்ணின் காரத் தன்மையைக் குறைத்து உரப்பிடிப்புத் திறனை மேம்படுத்துகிறது.

மண்ணில் உள்ள கரையாத தாதுக்களை கரையச் செய்து தாவரங்களுக்கு கிடைக்கக் கூடிய ஊட்டச் சத்தாக மாற்றுகிறது. மண்ணிற்கு பேரூட்டச் சத்துக்கள் அளிப்பதுடன் தாவரங்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகை நுண்ணூட்டச் சத்துக்களையும் சீரான அளவில் வழங்குகிறது. மண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய கன உலோகங்களை தாற்காலிகமாக ஈர்த்து வைத்துக் கொள்வதால் தூய்மையான நிலத்தடி நீர் பயிர்களுக்கான ஊட்டச்சத்துக்களையும் ஆற்றலையும் அளித்து மண்வள மேம்பாட்டிற்கு வித்திடுகிறது. மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிப்பதால் பயிர் கோடையிலும், நல்ல முறையில் பாதுகாக்கப்படுகிறது.

மண்புழு உரத்தில், அதிகப்படியாக அங்கக கரிமம் 20 முதல் 25 சதம் வரை உள்ளது. இது மண்ணின் வளத்தை மேம்படுத்தி பயிருக்கு தேவையான சத்துப் பொருள்களை தேவையான நேரத்தில் தேவையான அளவு கொடுக்கிறது. இதனால் மகசூல் அதிகரிக்கிறது.

குறிப்பாக பழங்களின் நிறம், ருசி, மணம், பழங்கள் சேமித்து வைக்கும் காலம் போன்றவை அதிகரிக்கின்றன. இதைப் போன்று பூக்கள், காய்கனிகள், தானியங்கள், நல்ல விலைக்கு விறபனை செய்ய வழி வகுக்கிறது, ரசாயன உரங்களைத் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதால், மண்ணின் இயற்கைத் தன்மை கெட்டுவிடுகிறது.

ஆனால் மண்புழு உரத்தை மண்ணில் இடுவதால் மண்வளம் இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டு, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. பூச்சி நோய் தாக்குதலை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. நச்சுத்தன்மை இல்லாத உணவை உற்பத்தி செய்ய மிகவும் உதவுகிறது. மண்புழு உரம் பயன்படுத்துவதால் மண்ணில் உப்பு கடத்தும் திறன் அதிகரித்து கார அமிலத் தன்மை சீர்படுகிறது.

மண்புழு உரத்தில் உள்ள ஆக்ஸின், சிஸ்டோஹைனின் ஆகியவை பயிரை வளரச் செய்கிறது. ஜிபிரிலின் பயிரை பூக்கச் செய்கிறது. மண்புழு உரத்தில் அதிகப்படியாகக் காணப்படும் கியூமிக் அமலம் வேர் வளர்ச்சியை ஏற்படுத்தும்.

இதனால் பயிருக்குத் தேவையான உரங்களை மண்ணில் இருந்து எடுக்க உதவுகிறது. மண்புழு உரம் இடுவதால் மக்காச்சோளம், கம்பு, சோளம், பருத்தி, சிறுதானியப் பயிர்களின் மகசூல் அதிகரித்து வறட்சியைத் தாங்கி வளர வாய்ப்புள்ளது.

பயறு நடவு செய்த பின்னர், கடைசி உழவில் ஏக்கருக்கு நெல்லுக்கு ஒரு டன்னும், கரும்புக்கு ஒன்றரை டன்னும், பருத்திக்கு ஒரு டன்னும், மிளகாய்க்கு ஒரு டன்னும், சூரியகாந்திக்கு ஒன்றரை டன்னும், மக்காச்சோளத்துக்கு ஒன்றரை டன்னும் பயன்படுத்த வேண்டும்.

விவசாயிகள் மண்பரிசோதனை செய்து பயிருக்கு ஏற்ற உரங்களை, பரிந்துரைக்கப்பட்ட அளவில் இட்டு, செலவைக் குறைத்து மகசூல் எடுக்ககலாம்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response