மட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ்! (Actinomyces)

இந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாம்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொரு வாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்தச் சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. அப்படிப்பட்ட நுண்ணுயிர்களைப் பற்றிய புரிதலே இந்தத் தொடர்.

ரசாயன உரங்களைப் பயன்படுத்திச் சாகுபடி செய்யும்போது விளைபொருள்கள் நஞ்சாகின்றன என்ற விழிப்பு உணர்வு தற்போது மக்களிடம் பெருகிவருகிறது. நம்முடைய நலம் பற்றி யோசிக்கும் நாம், மண்ணுடைய நலம் பற்றி யோசிப்பதில்லை என்பதே உண்மை.

‘ரசாயன உரங்களை இட்டு விவசாயம் செய்தால், மண் மலடாகும் என்று சொல்கிறார்கள். நிலத்துக்கு வளம் சேர்க்கத்தானே பணத்தைச் செலவு செய்து உரங்களை இடுகிறோம். அதனால், நிலம் வளமாகத்தானே வேண்டும். ஏன் மலடாகிறது’ என ஒரு வெள்ளந்தி விவசாயி என்னிடம் கேட்டார். அவர் உரம் போட்டால் நிலம் வளமாகும், பயிருக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும் என்ற புரிதலில் இருக்கிறார். இப்படித்தான் பலரும் நினைப்பார்கள். இயற்கை உரமோ, ரசாயன உரமோ எதைப் பயன்படுத்தினாலும் பயிருக்குச் சத்துகள் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மண்ணை உயிர்ப்புடன் வைத்திருப்பவை நுண்ணுயிர்கள்தாம். ரசாயன உரம் போடும்போது அதிலுள்ள வேதிப்பொருள்களின் வீரியத்தைத் தாங்க முடியாமல் நுண்ணுயிர்கள் மடிந்துவிடுகின்றன. இயற்கை உரங்களில் நுண்ணுயிர்கள் உயிர்வாழத் தேவையான பொருள்கள் அடங்கியிருப்பதால், நுண்ணுயிர்கள் மடிவதில்லை. இதுதான் ரசாயன உரத்துக்கும் இயற்கை உரத்துக்கும் உள்ள வித்தியாசம்.

மண்ணை வளமாக்கும் நுண்ணுயிர்களில் முக்கியமானது ஆக்டினோமைசஸ் (Actinomyces). இது ஒரு செல் வகை நுண்ணுயிர். பாக்டீரியாக்களால் மட்க வைக்க முடியாத பொருள்களையும்கூட மட்க வைக்கும் திறன் வாய்ந்தது இந்த ஆக்டினோமைசஸ். எனவே, எளிதில் மட்காத பொருள்களை மட்க வைக்க இந்த நுண்ணுயிரியைப் பயன்படுத்தலாம். பச்சை இலைகளைக்கூட விரைவாக இது மட்க வைக்கும். மண்ணிலுள்ள பொருள்களை மட்க வைப்பதுடன், மண்ணில் ஹுயூமஸை அதிகப்படுத்தும் பணியையும் சிறப்பாகச் செய்கிறது. அனைத்து வகை மண்ணிலும் இது இயற்கையாகவே இருக்கும் என்றாலும், அதிகத் தண்ணீர் தேங்கும் மண்ணில் இருப்பதில்லை. அதேபோல, மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 8 புள்ளிகள் வரை இருக்கும் இடங்களிலும் இருப்பதில்லை.

அதிக வெப்பநிலையுள்ள (தோராயமாக 65 டிகிரி செல்சியஸ்) இடங்களிலும் இது உயிர்வாழும். மழை பெய்யும்போது மண்ணிலிருந்து வருகிற சுகந்தமான மண் வாசனைக்கு இந்த நுண்ணுயிரும் ஒரு காரணம். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நுண்ணுயிர் பற்றிய விழிப்பு உணர்வும் விவசாயத்தில் அதன் பயன்பாடும் பெரிய அளவில் இல்லை. இந்த நுண்ணுயிரை வியாபார ரீதியாக யாரும் உற்பத்தி செய்வதாகவும் தெரியவில்லை.

அடுத்து மண்ணிலுள்ள நுண்ணுயிர்களைப் பாதுகாக்கும் முறைகளைப் பார்ப்போம். பூங்காக்களிலோ, சரணாலயங்களிலோ வைத்து நுண்ணுயிர்களைப் பாதுகாத்துவிட முடியாது. மண்ணில் அங்ககத் தன்மையை அதிகரிப்பதன் மூலமாகத்தான் நுண்ணுயிர்களை ஓரளவு பாதுகாக்க முடியும். களைக்கொல்லிகள், ரசாயன உரங்கள், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைத் தவிர்த்தாலே, மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் பாதுகாப்பாக இருக்கும்.

தோட்டங்களில் ஆங்காங்கே மரங்களை வளர்ப்பது, ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதைத் தவிர்ப்பது, ஊடுபயிர் பயிரிடுவது போன்ற செயல்கள் மூலமாக நுண்ணுயிர்களை மண்ணில் அதிகரிக்கச் செய்யலாம். தாவரக்கழிவுகளை நிலத்தில் மூடாக்காக இடுவதன் மூலமாகவும் இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் நுண்ணுயிர்களைப் பாதுகாக்கலாம். இம்முறைகளை விடுத்து, ஆய்வுக்கூடங்களில் மட்டுமே நுண்ணுயிர்களைப் பாதுகாக்க முடியும்.
ஜப்பான், அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளில், ஆய்வுக்கூடங்களில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் ‘நுண்ணுயிரி வகைச் சேகரிப்பு மற்றும் மரபணு வங்கி’ என்ற அமைப்பு நுண்ணுயிர்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துள்ளது.

இயற்கை கொடுத்துள்ள அருட்கொடையான, ஊதியம் இல்லாமல் ஊழியம் செய்யும் நுண்ணுயிர்களை நாம் பாதுகாக்காவிட்டாலும், அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே மண் வளமாகும். சாகுபடி அதிகமாகும்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.