அசோலா (Azolla)

அசோலா (Azolla) தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் கால்நடை மற்றும் கோழித் தீவனமாகவும் பயன்படுகிறது.

நெல் வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்து விட்டால், கூடுதல் மகசூல் கிடைக்கும். பால் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால், அதிகபட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% அளவுக்கு தீவனச்செலவு குறையும். கோழிகளுக்குக் கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும். புரதச்சத்து மிகுந்த இந்தப் பாசியில் வடை, போண்டா செய்து நாமும் சாப்பிடலாம். ஆகையால், ஒவ்வொரு விவசாயியும் கட்டாயம் அசோலா வளர்த்தால், வீட்டில் உள்ளவர்களோடு சேர்ந்து பயிர்கள், கால்நடைகள் என அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்.

மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது. மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும். இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை. பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.

அசோலா (Azolla) -வில் உள்ள சத்துக்கள்

 • தழைச்சத்து,மணிச்சத்து, சாம்பல்சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரம்தான் இந்த அசோலா.
 • அசோலாவில் 25% முதல் 30% வரை புரதச்சத்து உள்ளது.
 • 14%-15% நார்ச்சத்து உள்ளது.
 • சுமார் 3% கொழுப்புச் சத்து உள்ளது.
 • 45% – 50% மாவுச்சத்து உள்ளது.
 • பல்வேறுபட்ட கால்நடை மற்றும் கோழி தீவனத்திற்கு அவசியமான அமினோ அமிலங்கள் 7% முதல் 10% வரை உள்ளது.
 • தாது உப்புக்கள் 10% முதல் 15% வரையும் (கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம்), வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின்மற்றும் பல நுண்ணூட்டச் சத்துக்களும் இதில் உள்ளன.
 • பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிக்கும்.
 • பொதுவாக தாவர இலைகளில் மிகுந்து காணப்படும் டானின் என்ற நச்சு அசோலாவில் மிகவும் குறைவாக காணப்படுவதால் இது ஒரு சிறந்த கால்நடை தீவனமாக திகழ்கிறது.

அசோலா (Azolla) வளர்க்கும் முறை

நிழல்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 3 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் பாலீத்தீன் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ(அ) 30 கிலோ அளவுக்கு செம்மண் இட்டு சமப்படுத்தவும். இதன்மேல் 2 செ.மீ (அ) 30 குடம் அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட் (அ) இரண்டு கையளவு ராக் பாஸ்பேட் மற்றும் 300 கிராம் அசோலா தாய் வித்து இடவேண்டும். நாள்தோறும் காலை அல்லது மாலை வேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும்.

15 நாள்களில் ஒரு பாத்தியில் 3 கிலோ முதல் 5 கிலோ அசோலா தாயாராகிவிடும். இதில் இருந்து 800 கிராம்முதல் 1 கிலோ அறுவடை செய்யலாம். பூச்சித்தொல்லை வந்தால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும். அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். இதுபோல் மூன்று அல்லது நான்கு பாத்திகள் அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.

அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது கால்நடைகள் அவற்றை உண்பதற்கு தயக்கம் காட்டலாம். ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் தவிடு, புண்ணாக்கு அல்லது பிற அடர் தீவனத்துடன் கலந்து மாடுகளுக்குத் தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும்.

Azolla_Cultivation

 

அசோலா உற்பத்தியில் கவனிக்க படவேண்டியவை

 • 10-15 நாட்களுக்கு ஒரு முறை 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்(அ) ஓரு கையளவு பசுஞ்சாணம் சேர்க்கவேண்டும்.
 • 15-20 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்.
 • மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.
 • அசோலா(Azolla) விதைகளை தவிர ஆறு மாதத்திற்கு ஒரு முறை (அ) வருடத்திர்கு ஒரு முறையாவது  அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றிய பின்னர் புதியதாக இடுபொருட்களை சுத்தமான சரியான அளவில் இட்டு முன்பு போல் தயார் செய்ய வேண்டும்.
 • அசோலாவை தினமும் அறுவடை செய்து தொட்டியில் ஏற்படும் இடநெருக்கடியை குறைக்க வேண்டும். இல்லையென்றால் அசோலா(Azolla)  தன் உற்பத்தியை நிறுத்தி கொள்ளும்.

அசோலா (Azolla) -வின் பயன்கள்

 1. 1 கிலோ அசோலா 1 கிலோ புண்ணாக்கிற்கு சமம்.
 2. ஒரு கிலோ அசோலாவை உற்பத்தி செய்ய ஆகும் செலவு 40-60 பைசா மட்டுமே. இதுவே ஒரு கிலோ புண்ணாக்கு 40 ரூபாய்.
 3. அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது.
 4. அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம்.
 5. பசுமையான அசோலாவை நாள் ஒன்றுக்கு ஆடு, மாடு மற்றும் பன்றிகளுக்கு 1/2 கிலோமுதல் 2 கிலோ வரை கொடுக்கலாம்.
 6. பால் உற்பத்தி 15% முதல் 20%  அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது.
 7. பாலின் கொழுப்புச் சத்து 10% வரை உயருகிறது.
 8. கொழுப்புச் சத்து அல்லாத திடப்பொருள்களின் (SNF) அளவு 3% வரை கூடுகிறது.
 9. பசுந் தீவனப் பற்றாக்குறையை ஈடுசெய்ய புரதச்சத்து மிகுந்த அசோலாவை உற்பத்தி செய்து நிரந்தர மாற்றுத்தீவனமாகப் பயன்படுத்தலாம்.
 10. புண்ணாக்கு, தவிடு, பருத்திக் கொட்டை போன்ற தீவனங்களின் அளவை பாதியாக குறைத்துக் கொடுக்கலாம்.
 11. மாடுகளின் சினைபிடிப்பு தன்மை மேம்படும்.
 12. ஆடுகளுக்கு 300 கிராம் முதல் 500 கிராம் வரை கொடுக்கலாம்.
 13. மீன் வளர்க்கும் குளத்தில் அசோலாவை தூவிவிடுவதன் மூலம் தேவையான அளவு உட்கொள்ளும் மீன்கள் குறைந்த காலத்தில் அதிக எடை கொண்டதாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.
 14. முயல்கள் அசோலாவை விரும்பி உண்ணும்.
 15. அசோலா வளர்க்கும் இடத்தில் கொசுத் தொல்லை இருக்காது.

அசோலா நெல்வயலில் பயன்பாடு

 1. அசோலாவை மண்ணில் கலந்து மக்கும் பொழுது சிறந்த உரமாக பயன்படும். மற்ற தாவரங்கள் அனைத்திற்கும் உரமாக பயன்படுத்தலாம். 
 2. நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.
 3. நெல்வயல்களில் இந்த அசோலாவை தூவிவிடுவதன் மூலம் பத்து நாட்களில் வயல் முழுவதும் பரவி வளர்ந்துவிடும்.
 4. அசோலா, காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையைச் செய்வதால், ரசாயன முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு 30 சதவிகிதத்துக்கும் மேல் உரச் செலவு குறைகிறது.
 5. நாற்று  நடவுசெய்த 7-ம் நாள் வயலில் அசோலாவை 5 கிலோ தூவ வேண்டும். இதற்கு அளவு கிடையாது.
 6. பயிர்களுக்கு இடைவெளியில் கிடைக்கும் காற்று, சூரிய ஒளியை பயன்படுத்திக்  கொண்டு அசோலா வேகமாக வளரும்.
 7. நிலத்தில் பச்சைப் போர்வை போர்த்தியது போல, நிலம் முழுவதும் அசோலா படர்ந்து விடும்.
 8. 20-ம் நாளில் இருந்து ஒரு ஏக்கரில் தினமும் 50 முதல் 100 கிலோ வரை அசோலாவை அறுவடை செய்யலாம்
 9. அசோலா, நிலம் முழுவதும் படா்ந்து விடுவதால், களை கட்டப்படுகிறது.
 10. அசோலாவை நெல் வயலில் வளர்க்கும் போது, நீர் ஆவியாவது குறைகிறது.
 11. அசோலா, காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையைச் செய்வதால், ரசாயன முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு 30 சதவிகிதத்துக்கும் மேல் உரச் செலவு குறைகிறது.
 12. சாதாரணமாக 15 தூர்கள் வெடிக்கும் நிலத்தில், 40 தூர்கள் வரை வெடிக்கும். இதன் காரணமாக வழக்கமான மகசூலைவிட 10% முதல் 20% கூடுதல் மகசூல் கிடைக்கும்.

வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்

 1. தண்ணீர்: அசோலாவனது தண்ணீர் ஊற்றி வறண்டுவிட்டால் உடனே இறந்து விடுகிறது.
 2. ஈரப்பதம்: காற்றின் ஈரப்பதம் 85-90% இருக்கும்போது அசோலா நன்கு வளர்கிறது. ஈரப்பதம் 60%ற்கு குறையும்போது வறண்டு இறந்துவிடுகின்றது.
 3. சூரிய ஒளி: கோடைக் காலங்களில் பகல் நேரங்களிலுள்ள அதிக சூரிய ஒளி அசோலாவை பழுப்பு நிறமாக மாற்றிவிடுகின்றது.
 4. காற்று: வேகமாக வீசும் காற்றானது பாத்திகளிலுள்ள அசோலாவை ஒரு பக்கமாகக் கொண்டு சேர்த்துவிடும். இதனால் அசோலாவின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
 5. மண்ணின் கார அமிலத் தன்மை: காரத் தன்மையுள்ள மண்ணில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நுண்ணூட்டச் சத்துக்களுக்கு ஏற்ப அசோலாவின் வளர்ச்சி மாறுபடுகின்றது.

அசோலா காணொளி காட்சி


Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

2 Comments so far. Feel free to join this conversation.

 1. T E Badri narayanan March 15, 2016 at 9:05 pm -

  நன்று,
  ஐயா அசோலா எங்கே கிடைக்கும்?

  • Arulkumar March 16, 2016 at 10:05 am -

   Tell me your contact no?

Leave A Response

You must be logged in to post a comment.