உயிரைக் கொல்லும் நெகிழி(Plastic that Kills LIFE)

காய்கறிக்கடை, பழக்கடை, மளிகை கடை, ஜவுளிக்கடை, இறைச்சிக் கடை, என எந்தக் கடையிலிருந்து யார் திரும்பினாலும் கையில் தொங்குகின்ற ஆபத்து இந்த பாலிதீன் பைகள். பயன்படுத்துவதற்கு எளிதானது என்றுதான் பாலிதீன் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர் மக்கள்.

1990ல் பாலிதீன், பிளாஸ்டிக் புழக்கத்திற்கு வந்த போது, அதை மரங்களின் நண்பன் என்றும், இனி பேப்பருக்காக மரங்களை வெட்டவேண்டாம்; நச்சுத் தன்மை இல்லாதது, நீர் புகாதது உள்ளே உள்ள பொருட்கள் வெளியே தெரிவதால் பொருட்களின் தரத்தை பார்த்து வாங்கலாம்.

உணவுகளை பூஞ்சை, பாக்டீரியா தாக்குதல் இல்லாமல் பாதுகாக்க முடியும் எனக் கூறினர். ஆனால் இன்று எல்லாம் தலைகீழ். இன்று சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பொருட்களின் பட்டியலில் அதற்கு முக்கிய இடம்.

ஆனால் கேரிபேக் (Carry bag) என்று சொல்லப்படும் பாலிதீன் பைகள் இல்லாமல் இன்று வாழ்க்கை நடத்துவது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. ஹாயாக கையை வீசி கடைக்குச் சென்று வேண்டிய பொருள்களை கேரி பேக்கில் வாங்கி தொங்கவிட்டுக்கொண்டு வந்துவிடலாம்’ என்ற நிலைக்கு மக்கள் வந்ததுதான் துரதிர்ஷ்டம். பிளாஸ்டிக்கை பயன்படுத்த ஆரம்பித்து 50 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள் இது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் நிலத்தோடு நின்றுவிடவில்லை. கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் கடல்வாழ் தாவரங்களின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்தப் பைகள் எளிதில் மக்குவதுமில்லை, உருக்குலைவது மில்லை.

பாலிதீன் என்னும் நெகிழி 

Plastic pollution

பாலிதீன் பைகள் என்பது பாலிதீன் (Polythene) எனும் வேதியியல் பொருளைக் கொண்டு உருவாக்கப்படுவை. இவற்றை மனிதன் பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் உணவகங்களில் (HOTELS) உடனடி பார்சல் செய்து கொடுப்பதைக் குறிப்பிடலாம். கொதிக்க, கொதிக்க குழம்பு வகைகளை பாலிதீன் பைகளில் கட்டி அப்படியே தருகிறார்கள்.

கொதிக்கும் குழம்பின் சூட்டில் பாலிதீன் பையும் சற்று இளகி அதனுடைய வேதிப்பொருளும்(Chemicals) குழம்பில் கலந்துவிடுகிறது. இன்று குடிசைப்பகுதிகளில் உள்ள மக்கள் காலை மாலை வேளைகளில் டீக்கடைகளில் கேரிபேக்குகளில் டீ வாங்கிச்செல்லும் அவலம் நடக்கிறது.

நோய்களுக்கு காரணம்

மழைக்காலங்களில் சாக்கடை நீர் நகரெங்கும் வியாபித்து பல கொடிய நோய்களைத் தரக் காரணம் இந்த பாலிதீன் பைகளைச் சொல்லலாம். பொறுப்பில்லாமல் நாம் பயன்படுத்திவிட்டு வீசிவிடும் இந்த பைகள் சாக்கடைக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மழைக்காலங்களில் அதிக தண்ணீர் வரும்போது அவை சாக்கடைக் குழாய்களில் வழியாக செல்லமுடியாமல் வீதியெங்கும் பரவிவிடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு(Pollution) உண்டாகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. காரணம் மழைநீர் முழுவதும் மண்ணுக்குள் இறங்காமல் இந்த பாலிதீன் பைகள் தடுகிறது.

ஆறு, நதி, குளம், குட்டை என எல்லா நீர்நிலைகளிலும் பாலீதீன் பைகளே மிதந்துகொண்டிருக்கிறது. டெங்கு போன்ற வியாதிகளை பரப்பும் கொசுக்கள் தெருவில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளில் உள்ள சிறிதளவு  மழை நீரில் முட்டை போட்டு பெருகுகின்றன.

மறுசுழற்சி

18 micronக்கு குறைவாக உள்ள பாலிதீன் பைகளை மறுசுழற்சி செய்ய முடியாது. Use and throw வகை பிளாஸ்டிக் டம்ளர்களும் (Plastic Tumbler) அப்படியே. மறுசுழற்சி செய்ய முடியாத அவைகளெல்லாம் நம்மைச் சுற்றியே கொட்டிக்கிடக்கின்றன. இப்படிப்பட்ட பாலிதீன்களின் மண்ணோடு மட்கும் காலம் எவ்வளவு தெரியுமா? சுமார் 400 ஆண்டுகள் ஆகும். அதாவது நான்கு தலைமுறைக்கும் இது அழியாமல் மண்ணிலேயே இருக்கும்.

கால்நடைகளை பாதிக்கிறது

வாயில்லா ஜீவன்கள் என்று நாம் சொல்கிறோமே கால்நடைகளையும் இந்த பாலீதீன் பைகள் விட்டுவைப்பதில்லை. புற்களோடு சேர்த்து இவற்றையும் மாடுகள் உண்கின்றன. இதனால் வயிற்றில் பாலிதீன் பைகள் சேர்ந்துவிடுவதும், அவற்றால் ஜீரணப் பிரச்சினைகள்(Digestive problems) வந்து சில சமயம் அவைகளை உயிரையும் இழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. பாலிதீனில் உள்ள டையாக்சின் என்ற வேதிப்பொருள் உணவு பொருளுடன் கலந்து உணவு பொருளை விஷமாக்குகிறது.

தூய்மை இந்தியா

தூய்மை இந்தியா’ என்ற பெயரில் நாட்டைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் மத்திய அரசு, மறுபுறம் சுற்றுச்சூழலுக்குத் தீங்கிழைக்கும் பாலிதீன் பைகளுக்குத் தடையில்லை என்று சொல்வதுதான் விநோதம். பாலிதீன் பைகளின் பயன்பாடு பரவிவிட்டதாலும் இந்தப் பைகளின் தயாரிப்பு பெரும் தொழிலாக ஆகிவிட்டதாலும் தடைவிதிக்க மறுக்கிறது.

பாலிதீன் பைகளுக்கு மாற்றாக பலவிதமான காதிகப் பைகள் (Paper Bags), சணல் பைகளின் பயன்பாட்டை ஏன் அரசு முயற்சிக்கவில்லை? பாலிதீன் பைகளின் பயன்பாட்டை அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் குறைக்க வேண்டும் என்று 2012-லேயே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அதை இன்னும் ஏன் அரசு அமல்படுத்தவில்லை? பாலிதீன் பைகளின் ஆபத்தை மக்கள்தான் உணரவில்லை. ஆனால், அரசு நிர்வாகமும் ஏன் உணரவில்லை? பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள உணவுப்பொருள்களின் தரத்தை பரிசோதித்து நச்சு என  தடை விதிக்கும் மத்திய அரசு அந்த பிளாஸ்டிக் பாலிதீனே நச்சு எனபதை உணராதது ஏன்?

 

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.