கால்நடைகளின் வளர்ச்சியில் தாது உப்புகளின் பங்கு(Role of Nutrients in Cattle Farming)

கால்நடைகளின் உடல் வளர்ச்சி, கருத்தரிப்பு, பராமரிப்பு மற்றும் உற்பத்தி இவற்றில் தாது உப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. தாது உப்புகள் எனப்படும் அங்ககப் பொருட்கள் கால்நடைகளின் தீவனத்தில் குறைந்த அளவே தேவைப்படுபவை என்றாலும் இவை அறவே இல்லாவிட்டாலோ அல்லது அலவு குறைந்து காணப்பட்டாலோ உடலில் குறைப்பாட்டு அறிகுறிகள் உண்டாகும். இத்தகைய குறைபாடுகளைத் தக்க தருணத்தில் தாது உப்புகளைத் தீவனத்தில் சேர்ப்பதன் மூலம் நீக்கலாம். இக்குறைப்பாட்டினை விரைவில் சரி செய்யாவிட்டால் இது நோயாக மாறும் அபாயம் உள்ளது.

தாது உப்புகளின் வகைகள்

 • அத்தியாவசியமான தாது உப்புகள் – கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், குளோரின், பொட்டாசியம் மற்றும் கந்தகம்
 • குறைந்த அளவு தேவைப்படும் தாதுப்புகள் – தாமிரம், இரும்பு, கோபால்ட், மாங்கனீசு, அயோடின் மற்றும் துத்தநாகம்

தாது உப்புகளின் பொதுவான பயன்பாடுகள்

 • எலும்பு மண்டலத்திற்குப் பலம் சேர்க்கும்
 • தசை உருப்புகள், இரத்தம் மற்றும் மிருதுவான தசைகளிள் இவை அங்கம் வகிக்கின்றன.
 • உடலிலுள்ள பலவிதமான நொதிகளை ஊக்குவிப்பதற்குத் தேவைப்படுகின்றன.
 • கரையக்கூடிய உப்பாகவும் மற்றும் ஏனைய உடல் திரவங்களில் அங்கம் வகித்தும் பல தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
 • ஆஸ்மாட்டிக் அழுத்தம் மற்றும் அமில காரத்தன்மை சரிவிகிதத்தைப் பாதுகாக்கின்றன.
 • தசை மற்றும் நரம்பு மண்டல இயக்கத்திற்கு உதவுகின்றன.
 • இதயத்துடிப்புப் பராமரிப்பு மற்றும் விரிந்து சுருங்கும் தசைகளுக்குப் பாதுகாப்பாக அமைகின்றன.

உயிர்ச்சத்து குறைவால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள்

உயிர்ச்சத்துகளும் தாது உப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கால்நடைகளின் நலனப் பேணிக் காக்கின்றன.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இவ்விரண்டும் எலும்பு வள்ர்ச்சி, இரத்தம் உறைதல், தசைகள் இயக்கம் மற்றும் உடல் அமைப்பு ஆகியவற்றிற்கு இன்றியமையாதன.

சில நேரங்களில் கன்று ஈன்றபின் பசுவின் இரத்தக்கால்சியம் அளவு குறைந்து காணப்படும். இதனால் பால் ஜுரம் என்ற கோளாறு ஏற்படுவதுண்டு. இதன் பெயருக்கு ஏற்பப் பாலில் எவ்வித மாறூதலோ அல்லது ஜுரமோ இருக்காது.

இது பாராதைராய்டு சுரப்பிக் குறைவினால் கால்சியம் கிரகிக்கும் தன்மை தடைப்படுவதன் மூலம் ஏற்படுகின்றது. தக்க தருணத்தில் கால்சியத்தை ஊசிமூலம் உடலுக்குள் செலுத்திக் கால்நடையினைக் காப்பாற்றலாம்.

கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி குறைபாடு

 • கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி குறைப்பாட்டால் ரிக்கெட்ஸ் என்ற நோய், வளரும் கால்நடைகளில் வர வாய்ப்புண்டு.
 • இதுவே வளர்ந்த கால்நடைகளில் ஏற்படும்பொழுது ஆஸ்டியோமலேசியா எனவும் வயதான கால்நடைகளில் ஆஸ்டியோ பெரோசிஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
 • ரிக்கெட்ஸ் நோய் தாக்கிய கன்றுகள் மற்றும் பன்றிகளில் அவற்றின் வளர்ச்சி குறையும். அவற்றின் நடக்கும் தன்மை மாறுபடுவதன் மூட்டு வீக்கத்தையும் காணலாம்.
 • கோழிகளில் கால்சியம் குறைவினால் அவற்றின் வளர்ச்சி குறையும். முட்டை இடும் திறன் குறையும். தடிமன் குறைந்த ஓடுகளை உடைய முட்டை இடுதலில் ஆரம்பித்து நாளடைவில் இது தோல் முட்டை இடுதலில் முடியும். முட்டை எண்ணிக்கை குறையும்.
 • இத்தகைய முட்டைகளை அடைகாக்க முடியாத நிலை உண்டாகும். மேலும் முட்டைகளைக் கையாளும்பொழுது உடையும். இதனால் வியாபார ரீதியாக நஷ்டம் ஏற்படும்.
 • பாஸ்பரஸ் குறைபாடு இருந்தால் பசியின்மை ஏற்படும். இத்துடன் கால்நடைகள் கண்ணில் தென்படும் எலும்பு, மரத்துண்டு, துணிகள் மற்றும் ஏனைய பொருட்களை உண்ணும்.
 • இத்தகைய கால்நடைகள் மிகவும் மெலிந்து காணப்படுவதுடன் நாளடைவில் சரியான தீவனம் உட்கொள்ளாத காரணத்தால் இறக்க நேரிடும்.
 • மேய்ச்சல் நிலத்தில் பாஸ்பரஸ் சத்து குறைந்திருந்தால் அதில் விளையும் புற்களிலும் பாஸ்பரஸ் சத்து குறைவாகக் காணப்படும்.
 • இத்தகைய பாஸ்பரஸ் சத்து குறைந்த புற்களைத் தொடர்ந்து மேய்ந்து வரும் கால்நடைகள் மெலிந்து இறுதியில் இறக்க நேரிடும்.

மெக்னீசியம் குறைபாடு

 • மெக்னீசியம் குறைவால் வலிப்பு என்ற நோய் வரும். பொதுவாகப் பாலில் மெக்னீசியம் சத்து குறைவாகக் காணப்படும்.
 • கன்றுகளைப் பேணி வளர்க்கும் பொழுது பால் மட்டும் அளித்து ஏனைய தீவனங்களை அறவே ஒதுக்குவதன் காரணமாக இக்குறைபாடு அதிகரிக்கும்.
 • இவ்வியாதியினால் துன்புறும் கால்நடைகளில் உடல் நடுக்கம், சதைத் துடிப்பு, மூச்சு விடுவதற்குத் திணறுதல் போன்ற அறிகுறிகள் தென்படுவதுடன் காலப்போக்கில் அவை இறப்பதற்கும் காரணமாக அமைகின்றன.
 • சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரின் சவ்வூடு பரவல் அழுத்தம், அமிலக்காரத்தன்மை சரிவிகிதம், தண்ணீர் சரிவிகிதம், கிரகித்த உணவினைத் திசுக்களின் செல்லுக்கு உட்செலுத்தும் தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்கின்றன.
 • இவற்றின் குறைபாடு கால்நடைகளில் பசியின்மை, வளர்ச்சியின்மை, எடை குறைதல் மற்றும் வளரும் கால்நடைகளில் உற்பத்தித் திறன் குறைவு முதலியனவற்றை ஏற்படுத்தும்.

இரும்பு மற்றும் தாமிரம் குறைபாடு

 • இரும்பு மற்றும் தாமிரம், இரத்தம் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியிலும் பங்கு வகிக்கின்றன.
 • தாமிரம் குறைவாகக் காணப்படும் நிலத்தில் விளையும் புற்களை உட்கொள்ளும் கல்நடைகளில் பசியின்மை, வயிற்றுப்போக்கு, இரத்தச்சோகை முதலியவை வரும்.
 • இவ்வியாதி கண்ட கால்நடைகளின் ஈரல், சுவரொட்டி, இதயம் முதலிய உறுப்புகளில் தாமிரத்தின் அளவு குறைந்து காணப்படும்.
 • ஆடுகளின் தீவனத்தில் தாமிரச்சத்து குறைந்தால் கம்பள வளர்ச்சிக் குறைவு, நரம்பு சம்பந்தமான நோய் முதலியவை காணப்படும்.
 • தாமிரக் குறைவு கருத்தரிப்புச் சக்தியைக் குறைக்கும். கோபால்ட் மற்றும் வைட்டமின் பி12 இல்லாவிடில் இரத்த உற்பத்தி குறைவும் இரத்தச் சோகையும் வரலாம்.
 • அயோடின் தைராய்டு சுரப்பியினை இயக்குவதுடன் சரியான உடல் வளர்ச்சிக்கும் உதவுகின்றது.
 • இதன் குறைப்பாட்டால் பிறக்கும் கன்றுகள் பலமின்றி நலிவுடன் பிறந்து இறந்துபோக வாய்ப்புண்டு.

கந்தக அளவு குறைபாடு

 • கந்தக அளவு குறைந்தால் கந்தகத்தை உள்ளிட்ட அமினோ அமிலம் உற்பத்தி தடைப்படும்.
 • இது குறைந்தால் அசைபோடும் கல்நடைகளின் உணவு உட்கொள்ளும் அளவு குறையும்.
 • நார்ச்சத்துச் செரிமானத்தில் குறைபாடு உண்டாகும்.

மாங்கனீசு குறைபாடு

 • மாங்கனீசு குறைவினால் வளர்ச்சியின்மை, காலம் தாழ்த்திப் பருவத்திற்கு வருதல், காலம் கடந்து கருத்தரித்தல் ஆகியவை காணப்படும்.
 • பிறக்கும் கன்றுகள் குறைப்பாட்டுடனோ அல்லது பலமில்லாது பிறக்கும்.
 • கோழிகளில் முட்டை ஓடு சரியாக உருவாகாது. எலும்புக்கூடு சரியாக அமையாததோடு, இரத்தம் உறைவதிலும் மாறுபட்டு இருக்கும்.
 • வளரும் கோழிக்குஞ்சுகளின் மாங்கனீசு குறைவினால் நடக்க முடியாமல் தவழ்ந்து வரும் நிலை உண்டாகும்.
 • இந்நிலை கொலின் மற்றும் பயோட்டின் உயிர்ச்சத்துக் குறைவினாலும் ஏற்படும்.

துத்தநாகக் குறைபாடு

 • துத்தநாகக் குறைவினால் தோலின் தன்மை சீர்கெடுவதுடன் மூட்டுவீக்கம் மற்றும் முடி கொட்டுதல் ஏற்படும். சொரசொரப்பான தோல் கால் பகுதியிலும், காது மற்றும் கழுத்துப் பகுதியிலும் தோன்றும்.
 • மேற்கண்ட விவரங்களின் படி தாது உப்புகள் கால்நடை மற்றும் கோழித் தீவனத்தில் இன்றியமையாத பங்கினை வகிக்கின்றன.

ஆகவே பண்ணையாளர்கள் கால்நடைப் பல்கலைக்கழக மையங்களில் தங்கள் பகுதிக்கு ஏற்பக் கிடைக்கும் தனுவாசு ஸ்மார்ட் தாது உப்புக்கலவையை வாங்கி அதில் உள்ள விவரங்கள் மற்றும் வல்லுநரின் ஆலோசனையின்படி கால்நடைத் தீவனத்தில் சேர்த்து அளித்தால் ஆரோக்கியமான கால்நடைகள் மூலம் அதிக உற்பத்தி பெற்று நிறைந்த இலாபம் அடையலாம்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.